வாய்ல சொன்னாவே எல்லாத்தையும் பண்ணும்! இந்த கார் விலை இவ்ளோதானா! செகண்ட் ஹேண்ட் வாங்கற காசுல இதை வாங்கீரலாம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் களமிறக்கப்படவுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Bookings) காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், ஹூண்டாய் எக்ஸ்டர் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஹூண்டாய் எக்ஸ்டர் கார் வரும் ஜூலை 10ம் தேதி (July 10) விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

EX, S, SX, SX(O) மற்றும் SX(O) Connect என மொத்தம் 5 வேரியண்ட்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் கிடைக்கும். ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் நேரடி போட்டி மாடலான டாடா பன்ச், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கியுள்ளது.
எனவே அதற்கு சவால் அளிக்கும் வகையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் அனைத்து வேரியண்ட்களிலும், 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படவுள்ளன. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம் ஆகும். இதுதவிர எக்ஸ்டர் காரில் வழங்கப்படவுள்ள இன்னும் பல்வேறு அதிநவீன வசதிகள் பற்றிய தகவல்களை ஹூண்டாய் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், குரல் மூலம் கட்டுப்படுத்த கூடிய எலெக்ட்ரிக் சன்ரூஃப் (Electric Sunroof) வழங்கப்படவுள்ளது. மேலும் ட்யூயல் கேமராக்கள் உடன் டேஷ்கேம் வசதியும் இந்த காரில் கொடுக்கப்படவுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'ஓபன் சன்ரூஃப்' (Open Sunroof) மற்றும் 'நான் வானத்தை பார்க்க விரும்புகிறேன்' (I Want To See The Sky) ஆகிய குரல் கட்டளைகளை இடுவதன் மூலம், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எலெக்ட்ரிக் சன்ரூஃப்பை திறக்க முடியும். அதே சமயம் இந்த காரின் முன் மற்றும் பின் பகுதியில் கேமராக்கள் உடன் டேஷ்கேம் வருகிறது.
இந்த 2 கேமராக்களில் இருந்து நீங்கள் புகைப்படங்களையும் எடுத்து கொள்ள முடியும். ஹூண்டாய் எக்ஸ்டர், 5 சீட்டர் கார் ஆகும். ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) மற்றும் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான், ஹூண்டாய் எக்ஸ்டர் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படவுள்ளன. இதுதவிர அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் இடம்பெற்றிருக்கும்.
சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. டாடா பன்ச் காருடன் மட்டுமல்லாது, சிட்ரோன் சி3 (Citroen C3), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுக்கும், ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனையில் சவால் அளிக்கவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.50 லட்ச ரூபாய் அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் குறைவான விலை என்பதுடன், இந்த காரை பற்றி வெளியாகி வரும் ஒவ்வொரு விஷயமும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்கிறது. எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனையில் சாதிக்கும் என உறுதியாக சொல்ல முடியும்.


Click it and Unblock the Notifications








