காலைலதான் விலை குறைவான காரை களமிறக்கனாங்க! அதுக்குள்ள இதுவா! ஹூண்டாய் ஷோரூம்களுக்கு வண்டியை திருப்பும் மக்கள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) கார் இன்று (ஜூலை 10) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதவிர சிட்ரோன் சி3 (Citroen C3), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) ஆகிய கார்களுடனும், ஹூண்டாய் எக்ஸ்டர் போட்டியிடும்.

இந்த சூழலில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு இருந்து வருகிறது. எக்ஸ்டர் காரை களமிறக்கிய கையோடு, இந்த சந்தேகத்திற்கும் ஹூண்டாய் நிறுவனம் சூட்டோடு சூட்டாக பதில் அளித்து விட்டது. இதன்படி ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் டெலிவரி (Delivery) பணிகள், நாளையில் (ஜூலை 11) இருந்தே தொடங்கப்படவுள்ளன.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரை முன்பதிவு (Booking) செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஷோரூம்களுக்கு புத்தம் புதிய எக்ஸ்டர் காரை அனுப்பும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் கார் இன்றுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்பே, அதாவது முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஹூண்டாய் எக்ஸ்டர் காரை முன்பதிவு செய்து விட்டனர்.
தற்போது மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், ஹூண்டாய் எக்ஸ்டர் காரை இன்னும் நிறைய பேர் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இனிமேல் முன்பதிவு செய்பவர்கள், ஹூண்டாய் எக்ஸ்டர் காரை டெலிவரி பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்கும் சூழல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிமாண்ட் அதிகம் உள்ள கார்களுக்கு காத்திருப்பு காலம் (Waiting Period) அதிகமாக இருக்கும் என்பதுதான் இதற்கான காரணம். கொஞ்சமாவது முன்கூட்டியே இந்த காரை டெலிவரி பெற வேண்டுமென்றால், தற்போதே முன்பதிவு செய்து கொள்வது நல்லது. ஹூண்டாய் எக்ஸ்டர் காரை முன்பதிவு செய்வதற்கான தொகை வெறும் 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே.
ஹூண்டாய் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் அல்லது அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாக எக்ஸ்டர் காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், கருப்பு நிற இன்டீரியம் தீம் வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, எக்ஸ்டர் காரிலும் ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
இதில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ப்ளூலிங்க் கனெக்டிவிட்டி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், 2 கேமராக்களுடன் டேஷ்கேம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் (Petrol) மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 27.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்பது முக்கியமான விஷயம் ஆகும். அதிக மைலேஜ் (Mileage) கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடியவர்கள் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி மாடலை தேர்வு செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் டெலிவரி பணிகள் நாளைக்கே தொடங்கப்படவிருப்பது உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்த கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. நடப்பு ஜூலை மாதம் முடிவடைய இன்னும் நிறைய நாட்கள் உள்ளதாலும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாலும், முதல் மாதத்தில் இருந்தே விற்பனையில் டாடா பன்ச் காருக்கு, ஹூண்டாய் எக்ஸ்டர் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications









