கூடுதலா வெறும் ரூ.1 லட்சம் செலவு செய்யுங்க! ஹூண்டாய் எக்ஸ்டர் ஸ்டைலாக கிடைக்கும் - கார் இப்படித்தான் இருக்கும்
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காரின் விலை குறைவான வேரியண்ட்களுள் ஒன்றான எஸ் வேரியண்ட் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. டீலர்ஷிப் மையம் ஒன்றின் வளாகத்திற்குள் இருந்து வெளியாகியுள்ள இந்த வீடியோவின் மூலம் எக்ஸ்டர் எஸ் வேரியண்ட்டில் என்னென்ன அம்சங்களை பெறலாம் என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்திய மக்கள் கடந்த காலங்களில் புதியதாக கார் வாங்கும்போது காரின் மைலேஜையும், விலையையுமே முக்கியமான பார்த்தனர். ஆனால் தற்போது எந்தவொரு காரையும் முழுவதுமாக ஆராய்ந்த பின்பே வாங்க முயற்சிக்கின்றனர். இருப்பினும் வேறுப்பட்ட பொருளாதார நிலையினால், ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையும் ஒவ்வொரு விதமாக உள்ளது.

அதாவது, ஒரு சில வாடிக்கையாளர்கள் கார் என்றால் இந்த வசதிகள் எல்லாம் கட்டாயமாக இருக்க வேண்டும் என விரும்புவர். ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு காரில் இந்த அடிப்படை வசதிகள் இருந்தாலே போதும் என எண்ணுவர். இதனாலேயே கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கார்களை பல்வேறுப்பட்ட வேரியண்ட்களில் விற்பனை கொண்டுவர முயற்சிக்கின்றன.
சமீபத்தில்கூட, ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அதன் எக்ஸ்டர் காரை இ.எக்ஸ், எஸ் மற்றும் எஸ்.எக்ஸ் என 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், ரூ.6 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்ட எக்ஸ்டரின் எண்ட்ரீ-லெவல் இ.எக்ஸ் வேரியண்ட் எவ்வாறு இருக்கும் என்பதை சமீபத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த வரிசையில், எக்ஸ்டரின் மத்திய-நிலை வேரியண்ட்டான எஸ் வேரியண்ட்டை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

எந்தவொரு காரின் மத்திய நிலை வேரியண்ட்டும் பெரும்பாலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றவையாக இருக்கும். அதாவது, ஒரு காரில் இருக்க வேண்டிய அடிப்படையான வசதிகளுடன், சில சொகுசு வசதிகளும் இருக்கும். ஆனால் விலையை உயர்த்தக்கூடிய சில சொகுசு வசதிகள் வழங்கப்படாது. அவ்வாறுதான், எக்ஸ்டரின் எஸ் வேரியண்ட்டில் எண்ட்ரீ-லெவல் இ.எஸ் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரம், இ.எக்ஸ் வேரியண்ட்டில் கிடைக்காத சில அம்சங்களையும் எஸ் வேரியண்ட்டில் பெறலாம். குறிப்பாக, இ.எக்ஸ் வேரியண்ட்டின் வெளிப்பக்க தோற்றம் மிகவும் எளிமையாக இருந்தது, பார்ப்போரை பெரியதாக கவரக்கூடியதாக இல்லை. ஆனால், எஸ் வேரியண்ட்டின் வெளிப்புற தோற்றம் அந்த அளவிற்கு மோசமானதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படங்களில் எக்ஸ்டரின் தோற்றம் பிடித்துப்போய் வாங்குபவர்களுக்கு எஸ் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும்.

எக்ஸ்டர் எஸ் வேரியண்ட்டின் முன்பக்கத்தில் ஹலோஜன் ஹெட்லேம்ப்கள் உயர்நிலை எஸ்.எக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்படுவது போன்று கொடுக்கப்படுகின்றன. அதேபோல், இண்டிகேட்டர்களையும் ஹலோஜன் தரத்தில் பெறும் எக்ஸ்டர் எஸ் வேரியண்ட்டின் முன்பக்கத்தில் H-வடிவத்தில் எல்இடி டிஆர்எல்-கள் பொருத்தப்பட்டு உள்ளதை வீடியோவில் பார்க்க முடிகிறது. க்ரில்லுக்கு அடிப்பக்கத்தில் சில்வர் நிறத்தில் ஸ்கிட் தட்டு பொருத்தப்பட்டு உள்ளது.
இது விலை குறைவான வேரியண்ட் என்பது காரின் பக்கவாட்டில் தான் தெரிகிறது. ஏனெனில் காரின் சைடில் B-பில்லர் மற்றும் வெளிப்பக்க கதவு கைப்பிடிகள் கருப்பு நிற பேனல்கள் எதுவும் இல்லாமல், காரின் உடல் நிறத்திலேயே வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல் காரில் எலக்ட்ரிக் சன்ரூஃப், ரூஃப் ரெயில்கள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னாவும் இல்லை. இந்த எஸ் வேரியண்ட்டிற்கு சில்வர் நிற மூடி உடன் 14-இன்ச்சில் இரும்பு சக்கரங்களை ஹூண்டாய் வழங்கியுள்ளது.

காரின் பின்பக்கத்திலும் H-வடிவ எல்இடி டெயில்லைட்களை பார்க்க முடிகிறது. ஆனால் ரூஃப் ஸ்பாய்லர், வைபர் & வாஷர் மற்றும் டீஃபாக்கர் உள்ளிட்ட அம்சங்கள் இல்லை. காருக்கு உள்ளே சென்றால், ஸ்டேரிங் சக்கரத்தில் பொத்தான் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன. டாப் வேரியண்ட்களில் இருப்பதை போன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் உள்ளது. 8-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டாலும், இணைப்பு வசதிகள் இல்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: குறைந்த விலையில், ஸ்டைலிஷான தோற்றத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரை வாங்க நினைப்பவர்களுக்கு எஸ் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். குறிப்பாக, எண்ட்ரீ-லெவல் இ.எக்ஸ் வேரியண்ட்டை விட ஸ்டைலான தோற்றத்தில் இந்த வேரியண்ட் வழங்கப்படுகிறது. ஆனால் மாடர்ன் கனெக்டிவிட்டி வசதிகளை எதிர்பார்ப்போர் டாப் எஸ்.எக்ஸ் வேரியண்ட்டை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









