ஹூண்டாய் ஷோரூம்ல இப்பவே எல்லாரும் பாயை போட்டு படுக்க போறாங்க! இன்னும் ரெண்டே நாளில் ஐ10 காரின் புதிய அவதாரம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், அப்டேட் செய்யப்பட்ட க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை, ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.
அத்துடன் ஹூண்டாய் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை புக்கிங் செய்து கொள்ளலாம். ஆனால் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலைகள் எந்த தேதியில் அறிவிக்கப்படும்? என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ரெண்டே நாளில் லான்ச்!
இதன்படி ஹூண்டாய் நிறுவனம் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலையை வரும் ஜனவரி 20ம் தேதி (January 20) அறிவிக்கவுள்ளது. விலைகள் அறிவிக்கப்படும் நாள்தான், முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாள் ஆகும். இதன்படி ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்னும் 2 நாட்களில் விற்பனைக்கு வரவுள்ளதால், அந்த காருக்காக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அட்டகாசமான டிசைன்!
ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், புதிய முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிய முக்கோண வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், புதிய பெரிய க்ரில், 15 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் மற்றும் சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் போலார் ஒயிட், டைட்டன் க்ரே, டைபூன் சில்வர், டீல் ப்ளூ, ஃபயரி ரெட் மற்றும் ஸ்பார்க் க்ரீன் என மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிடைக்கும்.

வசதிகளுக்கும் பஞ்சமில்லை!
ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களில் வசதிகளுக்கு பஞ்சமிருக்காது. க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பதையே இந்த வசதிகளின் பட்டியல் காட்டுகிறது.
இன்ஜின், கியர் பாக்ஸ்!
ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 ஹெச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர சிஎன்ஜி ஆப்ஷனுடனும், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிடைக்கும்.
சிஎன்ஜி வேரியண்ட்டிலும் பொருத்தப்பட்டிருப்பது, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான். ஆனால் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது, இந்த இன்ஜின் அதிகபட்சமாக 69 ஹெச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும். சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது பவர் அவுட்புட் குறைவாக இருந்தாலும், மைலேஜ் சிறப்பாக கிடைக்கும் என்பது சாதகமான விஷயம் ஆகும். ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாடா, மாருதிக்கு செக்!
இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகிய கார்களுடன், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போட்டியிடும். விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே, க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, ஹூண்டாய் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








