இந்த புத்தம் புதிய ஹூண்டாய் காரை இந்த காரணங்களுக்காகவே வாங்கலாம்!! மார்க்கெட்டுக்கு ரொம்ப புதுசு!
ஹூண்டாய் மோட்டார்ஸ் (Hyundai Motors) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய கார்களுள் ஒன்று ஐ20 ஆகும். டாடா அல்ட்ராஸ், மாருதி சுஸுகி பலேனோ கார்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்து அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரில் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. ஒருவேளை நீங்கள் புதியதாக காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால், எந்தெந்த விஷயங்களுக்காக புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரை தேர்வு செய்யலாம் என்பதை இனி பார்க்கலாம்.

என்ஜின்: அப்டேட் செய்யப்பட்ட ஐ20 ஹேட்ச்பேக் கார் 1.2 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும். இந்த என்ஜின் வழக்கமாக இந்த காரில் வழங்கப்படுவதுதான் என்றாலும், புதிய ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரில் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 81.9 பிஎச்பி மற்றும் 4,200 ஆர்பிஎம்-இல் 117 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டு உள்ளது.
இந்த என்ஜினை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமின்றி, சிவிடி கியர்பாக்ஸ் தேர்விலும் வாங்கலாம். சிவிடி தேர்வில் மேற்கூறப்பட்ட அதே பெட்ரோல் என்ஜின் 6,000 ஆர்பிஎம்-இல் 86.8 பிஎச்பி மற்றும் 4,200 ஆர்பிஎம்-இல் 117 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கும்.

தோற்றம்: தோற்றத்தை பொறுத்தவரையில், பழைய ஐ20 காரில் இருந்து புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் சில திருத்தங்களை பெற்றுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், புதிய பிரதிப்பலிப்பான்-வகையிலான எல்இடி ஹெட்லைட்கள், அப்டேட் செய்யப்பட்ட முன் & பின்பக்க பம்பர்கள் மற்றும் புதிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
விலை: அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.99 லட்சத்தில் இருந்து ரூ.9.98 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இது மேனுவல் தேர்வில் இந்த காரின் விலைகள் ஆகும். அதுவே ஆட்டோமேட்டிக் தேர்வில் ரூ.9.38 லட்சத்தில் இருந்து துவங்கி, ரூ.11.01 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

வசதிகள்: காரின் உட்பக்கத்தில், நாவிகேஷன் உடன் பெரிய அளவில் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேட், கூல்டு க்ளோவ் பாக்ஸ், 120 வாட்ஸ் சார்ஜிங் துளை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 7-ஸ்பீக்கர் போஸ் மியுசிக் சிஸ்டம், வாய்ஸ்-கண்ட்ரோல்டு எலக்ட்ரிக் சன்ரூஃப் என ஏகப்பட்ட மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள்: புதிய ஐ20 ஃபேஸ்லிஃப்ட் கார் மொத்தம் 26 ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் முக்கியமானவைகளாக, 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், அசிஸ்ட் கண்ட்ரோல், வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் கார் முன்பை விட தோற்றத்தில் மெருக்கேற்றப்பட்டு உள்ளதை கூறியே ஆக வேண்டும். அதேநேரம் தொழிற்நுட்ப அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டு இருப்பது இந்த காரை மேலும் வாங்குவதற்கு ஏற்றதாக மாற்றியுள்ளது. காரின் விலைகளையும் பெரியதாக குறை சொல்ல முடியாது. ஏனெனில் ஹூண்டாய் கார்கள் என்றாலே சற்று அதிக விலைகளுடனே இருக்கும்.


Click it and Unblock the Notifications
