குடும்பங்கள் கொண்டாடும் காரை களமிறக்கிய ஹூண்டாய்! விலை இவ்ளோதானா! மாருதி, டாடாவை அலற விட்டுட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐ20 (Hyundai i20). இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
பழைய மாடலுடன் ஒப்பிடும்போது புதிய மாடலில் டிசைன் (Design) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பல்வேறு புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. 2023 ஹூண்டாய் ஐ20 கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். மொத்தம் 8 கலர் ஆப்ஷன்களில், இந்த கார் களமிறக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வேரியண்ட்கள் பின்வருமாறு: எரா (Era), மேக்னா (Magna), ஸ்போர்ட்ஸ் (Sportz), அஸ்டா (Asta) மற்றும் அஸ்டா (ஆப்ஷனல்) (Asta(O)). கலர் ஆப்ஷன்கள் பின்வருமாறு: அமேசான் க்ரே, அட்லஸ் ஒயிட், டைட்டன் க்ரே, டைபூன் சில்வர், ஸ்டேரி நைட், ஃபயரி ரெட், கருப்பு நிற மேற்கூரையுடன் அட்லஸ் ஒயிட் மற்றும் கருப்பு நிற மேற்கூரையுடன் ஃபயரி ரெட்.
2023 ஹூண்டாய் ஐ20 காரின் டிசைனை பொறுத்தவரையில், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 'L' வடிவ எல்இடி டிஆர்எல்-களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய 16 இன்ச் அலாய் வீல்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

இவை எல்லாம் தவிர முன் பகுதியில் புதிய க்ரில் அமைப்பு, பானெட் மீது 3D ஹூண்டாய் லோகோ ஆகிய விஷயங்களும் கவனம் ஈர்க்க கூடியவையாக உள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 82 பிஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் முன்பு வழங்கப்பட்டு வந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் புதிய மாடலில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வசதிகளை (Features) பொறுத்தவரையில், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தட்டையான அடிபாகம் கொண்ட 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவை முக்கியமான அம்சங்களாக உள்ளன.
இவை எல்லாம் தவிர, 7 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ளூலிங்க் கனெக்டிவிட்டி ஆப்ஷன், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்றவையும், ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை (Price) வெறும் 6.99 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.01 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஹூண்டாய் ஐ20 காரின் வருகை, மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








