சிங்கிள் சார்ஜில் 631 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! டெலிவரி தொடங்கியதால் ஷோரூம்களில் திருவிழா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சூழலில், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் காருக்காக காத்து கிடந்த வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது.

இதன் ரேஞ்ச் (Range), அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். 350 kW DC சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் மற்றொரு முக்கியமான அம்சம் லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) ஆகும். Advanced Driver Assistance Systems என்பதன் சுருக்கம்தான் ADAS. டிரைவர் காரை பாதுகாப்பாக ஓட்டுவதற்கு உதவி செய்ய கூடிய பல்வேறு வசதிகளின் (Features) தொகுப்புதான் அடாஸ் தொழில்நுட்பம் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த வசதி தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ட்யூயல் ஸ்க்ரீன் அமைப்பும், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். மற்றொன்று முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகும். இந்த 2 திரைகளும் தலா 12.3 இன்ச் அளவில் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை (Price) வெறும் 44.95 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் விலை உயர்த்தப்படும்.
இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ஹூண்டாய் ஐயோனிக் 5 பார்க்கப்படுகிறது. கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார்தான், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் நேரடி போட்டி மாடல் ஆகும். கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 60.95 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 65.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான்.
ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலையே வெறும் 44.95 லட்ச ரூபாய் மட்டுமே (இந்த எலெக்ட்ரிக் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது). கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை 16 லட்ச ரூபாய் குறைவு!
அதே சமயம் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை 21 லட்ச ரூபாய் குறைவு! எனவேதான் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் கருதப்படுகிறது.
கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் அதிகமாக இருக்கும்போது, ஹூண்டாய் நிறுவனத்தால் எப்படி இவ்வளவு குறைவான விலையில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்ய முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். எனவே தரத்தில் சமரசம் செய்யப்பட்டு விட்டதா? என்று கூட பலர் நினைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் ஹூண்டாய் நிறுவனம் கையாண்டுள்ள ஒரு யுக்திதான் இந்த விலை குறைவிற்கு காரணம். ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 2 கார்களுக்கும் இடையேயான விலை வித்தியாசத்திற்கு இதுவே காரணம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்களை போல், தற்போது அதிக அளவிலான எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) விற்பனைக்கு வர தொடங்கி விட்டன. வரும் காலங்களில் 10 லட்ச ரூபாய் என்ற விலையில் கூட புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








