புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! அவங்களே எதிர்பாக்காத அளவுக்கு புக்கிங் குவியிது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் கார் (Electric Car) வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள 2வது எலெக்ட்ரிக் கார் ஆகும்.
முன்னதாக கோனா என்ற எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் (Hyundai Kona Electric) நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தைக்கான ஹூண்டாய் நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் காரான ஐயோனிக் 5, இ-ஜிஎம்பி (E-GMP) பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இதில், 72.6 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!
இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (ARAI Certified Range) ஆகும். இது உண்மையில் மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 216 பிஹெச்பி மற்றும் 350 என்எம் ஆகும்.
இவ்ளோ ஸ்பீடா சார்ஜ் ஆகுமா!
பெரிய பேட்டரி என்பதால், இதனை சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் ஆகும் என நீங்கள் நினைக்க வேண்டாம். ஏனெனில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியானது, சூப்பர் ஃபாஸ்ட் 800V சார்ஜிங்கிற்கு சப்போர்ட் ஆகும். இதனை பயன்படுத்தினால், வெறும் 18 நிமிடங்களில், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை, 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

இவ்ளோ வசதிகள் இருக்கா!
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் உள்ளே இரண்டு 12.3 இன்ச் திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். இதுதவிர ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, அடாஸ் (ADAS) தொழில்நுட்பம் என ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் பொதுவாக தனது கார்களில் வசதிகளை வாரி வழங்கும். இதற்கு ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரும் விதிவிலக்கு அல்ல.
விலை இவ்ளோ கம்மியா!
இந்திய சந்தையில் கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார்தான், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான போட்டி மாடல் ஆகும். ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை (Price) மிகவும் குறைவு. கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக வரிகள் குறையும் என்பதால், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் குறைவாக உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 60.95 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 65.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் எக்ஸ் ஷோரூம் விலை வெறும் 44.95 லட்ச ரூபாய் மட்டுமே. இதன் மூலம் கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் சுமார் 16 லட்ச ரூபாய் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அசெம்பிள் செய்வது என்ற முடிவை ஹூண்டாய் நிறுவனம் எடுத்ததுதான், இந்த குறைவான விலைக்கு முக்கியமான காரணம்.
முன்பதிவு குவிகிறது!
சிறப்பான ரேஞ்ச், அட்டகாசமான வசதிகள் ஆகிய சிறப்பம்சங்களுடன் விலையும் குறைவாக இருப்பதால், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகள் (Bookings) குவிந்து வருகின்றன. தற்போது வரை 650க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து விட்டதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்திய சந்தையில் ஒரு ஆண்டுக்கு 250-300 ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது.
டெலிவரி எப்போ?
ஆனால் அதைக்காட்டிலும் மிகவும் அதிக எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்து விட்டன. இதை ஹூண்டாய் நிறுவனமே கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்காது. இதற்கிடையே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த எலெக்ட்ரிக் காருக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








