மத்த எலெக்ட்ரிக் காருலாம் இதுக்கு முன்னாடி வேஸ்ட்.. எல்லா விஷயத்திலும் டாப்புல இருக்கு! ஐயோனிக் 5 ரைடு ரிவியூ!
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் ரைடு ரிவியூ தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். வாங்க.
ஜெர்மனின் மிக அழகிய நகரங்களில் ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt)-ம் ஒன்று. இங்கு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் புகழ்பெற்ற ஃப்ராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ (Frankfurt Motor Show) நடைபெற்றது. இதில் ஹூண்டாய் நிறுவனம் கலந்துக் கொண்டது. அப்போது யாரும் எதிர்பார்த்திராத கார் மாடல் ஒன்றை அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது. 45 எனும் குறி பெயரில் கான்செப்ட் மாடலை அது காட்சிப்படுத்தியது. மிகவும் அழகிய தோற்றம் மற்றும் அதி-நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக ஹூண்டாய் இந்த கான்செப்டை உருவாக்கி இருந்தது.

ஆகையால், இதன் வருகைக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில ஆண்டுகளிலேயே இந்த வாகனத்தை எலெக்ட்ரிக் காராக ஹூண்டாய் நிறுவனம் உலக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது. ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எனும் பெயரில் உலக சொகுசு எலெக்ட்ரிக் கார் சந்தையில் இந்த கார் விற்பனைக்கு நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இந்த கார் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.
பெயர் மாற்றம் ஏதுமின்றி உலக சந்தையில் எப்படி இருக்கிறதோ அதே தரம் மற்றும் லுக்கில் ஹூண்டாய் ஐயோனிக் 5 விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரையே அண்மையில் ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு ஹூண்டாய் ஐயோனிக் 5 பற்றி இன்னும் தெளிவாக தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவ்வாறு நாங்கள் தெரிந்துக் கொண்ட தகவலையே இந்த பதிவில் பிரத்யேகமாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் ஐயோனிக் 5 வடிவம் மற்றும் சிறப்பம்சம்
கடந்த கால வாகனமும், நவீன கால காரும் இணைந்த ஓர் கலவையாகவே ஹூண்டாய் ஐயோனிக் 5 தோற்றம் இருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டும் எனில் இதன் ஸ்டைல் 1974 டூரின் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட போனி கூபே எனும் கான்செப்ட்டை தழுவியதாக இருக்கின்றது. அதேவேளையில், நவீன கால தோற்றத்திற்கும் இந்த காரில் பெரிய அளவில் குறைச்சல் இல்லை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், நிறுவனம் எந்த பழைய காரையும் அப்படியே டிப்பி - காப்பி அடித்து ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை உருவாக்கவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
இதற்கு மிக சிறந்த உதாரணமாக எலெக்ட்ரிக் காரின் தோற்றம் 80-ஸையும், அதில் தொழில்நுட்பங்கள் வருங்காலத்தையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. இத்தகைய அம்சங்களை இது கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே பலரின் கவனத்தை ஈர்க்கும் மின்சார காராக இது மாறி இருக்கின்றது. இந்த கார் சாலையில் பயணிக்கும் எனில் எல்லோரின் பார்வையையும் அது கட்டாயம் கவரும். இதை நாங்களே சாலையில் ஓட்டி பாரக்கும்போது உணர்ந்தோம். காரின் முன் பக்கத்தில் கிளாம்ஷெல் பான்னெட் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த பான்னெட் முன் பக்கத்திற்கு மிகவும் க்ளீனான தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. குறிப்பாக, இதன் முகப்பு பகுதியில் பாராமெட்ரிக் பிக்ஸல் எல்இடி ஹெட்லைட் பயன்படுத்தப்பட்டு இருப்பது வேற லெவல் கவர்ச்சி அம்சமாக இருக்கின்றது. 256 தனிப்பட்ட பிக்சல்களால் ஆனதே இந்த லைட்டுகள் ஆகும். இத்துடன், டிஆர்எல்களும் காரின் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த இரண்டுமே காரின் பக்கம் பார்வையாளர்களைக் கவரக் கூடியதாக இருக்கின்றது.
முன் பக்கத்தில் இன்டிகேட்டர்கள், பம்பருக்கு அடிப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு இடையிலேயே மின் சாதனங்களை குளிர்விப்பதற்கான ஏர் வெண்டுகள் உள்ளன. முகப்பு பகுதியைப் போலவே பக்கவாட்டு பகுதியிலும் கவர்ச்சிகரமான அம்சங்கள பல சேர்க்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், பக்கவாட்டு பகுதிக்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக 20 அங்குல பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து, ஃப்ளஷ் ரக டூர் ஹேண்டில்கள், காரின் பின் பக்க வீலில் இருந்து சைடு மிர்ரரை நோக்கி நிற்கின்ற வகையில் ஓர் லைனும், காரின் டெயில் லைட்டில் இருந்து சைடு மிர்ரருக்கு அடிப்ப பகுதியில் முடிவடைகின்ற வகையில் இன்னொரு லைனும் காரின் பக்கவாட்டிற்கு அழுகு சேர்க்கும் வகையில் வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோல் காரின் பின் பக்கமும் அழகான வேலைபாடிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு சிறப்பு வசதிகளை பின் பக்கத்தில் ஹூண்டாய் சேர்த்திருக்கின்றது. மிக முக்கியமாக இன்டெக்ரேட்டட் ஸ்பாய்ளர் ஏரோடைனமிக் ஸ்டைலுடன் உருவாக்கப்பட்டிருப்பது இருக்கின்றது. இதேபோல், டெயில் லைட், ஹூண்டாய் பேட்ஜ், ஐயோனிக் 5 பேட்ஜ் மற்றும் பள்ளமான தோற்றம் கொண்ட பின் பக்க பம்பர் என பல அட்டகாசமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த அம்சங்களே ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் வெளிப்புற தோற்றத்திற்கு அழகு சேர்க்கக் கூடியவையாக இருக்கின்றன.
இந்த வெளிப்புற தோற்றத்தை வைத்தே காரின் உட்பக்கம் எந்த அளவு நவீன மயமானதாக இருக்கும் என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம். நாம் சற்றும் எதிர்பார்த்திராத எக்கசக்க சிறப்பு வசதிகளைக் கொண்ட ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் கேபின் இருக்கின்றது. இதன் உட்பகுதியை நிலைத்தன்மை மற்றும் மறுசுழற்சி செய்யக் கூடிய வசதிக் கொண்ட பொருட்களால் ஹூண்டாய் அலங்கரித்திருக்கின்றது. காகிதம், கரும்பு சக்கை மற்றும் சோளத்தின் கழிவுகளால் செய்யப்பட்ட பாகங்களையே இந்த காரின் குறிப்பிட்ட பகுதிகளில் ஹூண்டாய் பயன்படுத்தி இருக்கின்றது.

கார்பெட், ஹெட்லைனர் மற்றும் லெதர் உள்ளிட்டவற்றிலேயே மறு சுழற்சி செய்யக் கூடிய பொருட்களை ஹூண்டாய் பயன்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக லெதருக்கு நிறத்தை சேர்க்க ஆளி விதையின் எண்ணெய்யை அது பயன்படுத்தி இருக்கின்றது. இதேபோல், பிரத்யேக நிறத்தைக் கொண்டு காரின் உட்பக்கத்தை ஹூண்டாய் அலங்கரித்திருக்கின்றது. அந்தவகையில், டார்க் பெப்பிள் கிரே தீமே உட்பக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது உட்பக்கத்திற்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.
இதை அடுத்து இரு திரைகள் டேஷ்போர்டில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. 12.3 அங்குல இரு திரைகளையே ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷனாகவும் செயல்படும். இதில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காக வழங்கப்பட்டு இருக்கும் திரை மிகவும் சென்சிடிவான தொடுதல் வசதியைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த யூனிட்டுடன் சேர்தது 8 பிரீமியம் ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டத்தையும் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.

இது போஸ் பிராண்டுடையதாகும். இந்த திரையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே அம்சம் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. இத்துடன், இந்த திரையில் நேவிகேஷன் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட்டுகளைப் பெற்றுக் கொள்ளும் வசதியையும் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இதுதவிர ஹூண்டாய் ப்ளூ லிங்க் (Hyundai's Bluelink) இணைப்பு வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இது கார் இணைப்பு தொழில்நுட்பம் ஆகும். இதன் வாயிலாக 60க்கும் மேற்பட்ட இணைப்பு வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுமட்டுமின்றி, வீட்டில் இருந்தபடியே காரின் சில கன்ட்ரோல்களை கூகுள் அசிஸ்டன்ட் அல்லது அலெக்ஸா உதவியுடன் செய்யும் வசதியையும் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் வழங்கியிருக்கின்றது. காரின் கதவை லாக் மற்றும் அன்லாக் செய்யுதல், க்ளைமேட்டுகளைக் கன்ட்ரோல் செய்யுதல் போன்றவற்றை செய்து கொள்ள முடியும். இந்த காரில் நான்கு பேர் வரை மிகவும் தாராளமான இட வசதியுடன் பயணிக்க முடியும். தேவைப்பட்டால் ஐவரும் பயணிக்கலாம். ஆனால், சற்று இட நெருக்கடி இருக்கும். ஸ்லிம்மானவர்களுடன் பயணம் என்றால் இதை நினைத்து கவலையே பட வேண்டியதில்லை.

முன் பக்கத்தில் இருக்கைகளில் வென்டிலேட் மற்றும் ஹீட்டிங் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஸ்போர்ட் லெக் ரெஸ்ட் கூடுதல் சப்போர்ட் மற்றும் ரிலேக்ஸான பயணங்களுக்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. பெரிய பனோரமிக் சன்ரூஃப் வசதியையும் இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இது வானத்தை முழுமையாக வேடிக்கை பார்த்தவாறு பயணத்தை மேற்கொள்ள உதவுகின்றது. இதுதவிர, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ டிஃபாக்கர் வசதி உடனும், ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற நவீன கால அம்சங்கள் பல இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வளவு நவீன அம்சங்களை வழங்கிய ஹூண்டாய், பாதுகாப்பு விஷயத்தில் கோட்டைவிடுமா என்ன கூறும் அளவிற்கு மிக அதிக பாதுகாப்பு வசதிகளை ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. 6 ஏர்பேக்குகள், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், மல்டி கொல்லிசன் அவாய்டன்ஸ் பிரேக்கிங் சிஸ்டம், விர்சுவல் எஞ்ஜின் சவுண்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர, லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (Level 2 Advanced Driver Assistance Systems), லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் கொல்லிசன், ரேடார் கைடட் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் வசதி உடன் வழங்கப்பட்டு உள்ளது.

ஹூண்டாய் எவ்வளவு ரேஞ்ஜ் தரும்?
ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் 72.6 kwh பேட்டரி பேக்கை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 631 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது அராய் (ARAI) வெளியிட்ட அதிகாரப்பூர்வ ரேஞ்ஜ் திறன் ஆகும். இந்த பேட்டரி பேக்கின் வாயிலாக காரில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பல்வேறு முக்கிய பாகங்கள் மிக சிறப்பான இயங்குகின்றன. குறிப்பாக, இதன் மின் மோட்டார். ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 214.5 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 185 கிமீ ஆகும். அதேவேளையில், 7.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க மிக அதிக வேகத்திலும் இந்த கார் சார்ஜாகும். 350 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் இருக்கும் எனில், அதன் வாயிலாக சுமார் 18 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும். 50 kW டிசி சார்ஜர் வாயிலாகவும் காரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆனால், இதற்கு 10-80 சதவீதம் சார்ஜை எட்ட 57 நிமிடங்கள் ஆகும்.

வீட்டு சார்ஜிங் பாயிண்டிலும் வைத்து ஐயோனிக் காரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆனால், இதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். 11 kW சார்ஜரை பயன்படுத்தும்போது முழுமையாக சார்ஜாக 6 மணி நேரம் 55 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். இந்த காரைக் கொண்டு மின்சார வாகனமாக மட்டுமில்லைங்க வீட்டுக்கான மின்சாரத்தை வழங்கும் சாதனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆமாங்க, வீட்டுக்கான பவர்பேங்காக இந்த காரை பயன்படுத்திக் கொள்ளலாம். இ-ஜிஎம்பி பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இந்த வசதியை ஐயோனிக் 5 காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.
ஐயோனிக் 5 காரின் அளவுகள்:
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே காரின் சொகுசுக்கு காரணமாக உள்ளது. இந்த காரின் நீளம் 4,635mm ஆகவும், அகலம் 1,890 mm ஆகவும், உயரம் 1,625 mm ஆகவும் இருக்கின்றது. இதேபோல் 3,000 mm நீளமான வீல் பேஸையும், 160 mm கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டதாகவும் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. இதன் பூட் ஸ்பேஸும் சற்று பெரியதாகவே இருக்கின்றது. 527 லிட்டரே பூட் ஸ்பேஸ் ஆகும். இதுதவிர பான்னெட் பகுதியிலும் சிறிய ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு 52 லிட்டர் வரையிலான பொருட்களை வைத்துக் கொள்ள முடியும்.

இந்த எலெக்ட்ரிக் கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்தது?
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஈகோ (Eco), நார்மல் (Normal) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகியவையே அவை ஆகும். ஒவ்வொரு மோடும் வெவ்வேறு விதமான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஆக்சலரேஷன் திறன் மிகவும் பிரில்லியன்டாக செயல்படுவதை எங்களால் உணர முடிகின்றது. அனைத்து மோடிலும் ஆக்சலரேஷன் மிகவும் திறம்பட செயல்படும் வகையிலேயே இருந்தது.
ஆனால், இதன் ஸ்போர்ட் மோட் சற்று மேலும் மேம்படுத்தி இருக்கலாம் என்பது எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் 1.9 டன் மற்றும் கூடுதல் எடை காரணமாக சஸ்பென்ஷன் சற்று கடினமானதாக இருப்பதையும் எங்களால் உணர முடிந்தது. அதேவேளையில், இதன் 45 செக்சன் டயர்கள் காரின் இயக்கத்தை சற்று சுலபமாக்கும் வகையில் இருக்கின்றது. பெரிய பேட்டரி பேக் காரின் தரை பகுதியிலேயே நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. ஆகையால், புவியீர்ப்பு காரின் மையப் பகுதியில் நிலை நிறுத்தப்படுகின்றது. இதுவே மிக சிறந்த பேலன்ஸ் காரணமாக உள்ளது.

ஸ்டியரிங் வீலில் டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜஸ்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, டிஸ்க் பிரேக்குகள் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பார்த்ததில் மிக சிறப்பான பிரேக்கிங் அனுபவம் எங்களுக்கு கிடைத்தது. துள்ளியமான பிரேக்கிங்கை இயக்கத்தின்போது பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், இழக்கும் மின்சாரத்தை லேசாக மீட்டெடுக்க உதவும் ரீஜென் பிரேக்கிங் சிஸ்டமும் மிக சிறப்பாக இயக்கத்தை வழங்கியது.
நான்கு விதமான ரீஜென் பிரேக்கிங் லெவல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மிகவும் டிராஃபிக்கான சாலையில் 0-3 லெவல் ரீஜென்னை பயன்படுத்தினால் மிக சிறப்பான பலனை பெற்றுக் கொள்ள முடியும். அதேவேளையில், லெவல் 3 ஒன் பெடல் டிரைவிங்கை அனுமதிக்கின்றது. இதுவே நெரிசல் மிகுந்த சாலைக்கு உகந்ததாக இருக்கின்றது. இதன் கேபின் வெளிப்புறத்தில் ஏற்படும் சத்தங்கள் உட்புறத்தில் கேட்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதிக வேகத்தில் செல்லும்போது டயரின் சத்தம் கேபினுக்குள் உணர முடியும்.

ஹூண்டாய் நிறுவனம் இதன் ரேஞ்ஜ் திறன் 631 கிமீ என கூறி இருந்தாலும், ரியல் உலகில் 470 கிமீ முதல் 500 கிமீ வரை மட்டுமே பயணிக்க முடியும். இதுவே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் ரியல் வேர்ல்டு ரேஞ்ஜ் திறனாக இருக்கின்றது. இக்காருக்கு ரூ. 45.95 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு மிக சிறந்த காரே இது ஆகும். பிரீமியம் அம்சங்கள் மிக தாராளமாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









