ஹூண்டாய் காருக்கு இவ்வளவு ரேட்டிங் கொடுத்ததே அதிகம்!! கடந்த 6 வருஷத்தில் ஒண்ணுமே மாறல!
யூரோ என்சிஏபி (Euro NCAP)-இல் ஹூண்டாய் கோனா (Kona) எஸ்யூவி கார் 5க்கு 4 நட்சத்திரங்களை பெற்று உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து யூரோ என்சிஏபி தனது கடுமையான வார்த்தைகளை வெளியிட்டு உள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
என்சிஏபி ரேடிங்குகளை பார்த்து கார் வாங்குவது இன்றைய காலத்தில் மக்களிடையே பரவலாக அதிகரித்துள்ளது. இதனால், என்சிஏபி அமைப்புகளும் தங்களது கிராஷ் டெஸ்ட்டுகளை இன்னும் கடுமையாக்கி உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு, க்ளோபல் என்சிஏபி-இல் முழு 5 நட்சத்திரங்களை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் சமீபத்தில் ஆஸ்திரேலியன் என்சிஏபி-இல் 0 ஸ்டாரை பெற்றது இதற்கு சரியான உதாரணம் ஆகும்.

ஹோண்டா இசட்.ஆர்-வி, வின்ஃபாஸ்ட் விஎஃப்8 போன்ற பிரபலமான கார்கள் ஐரோப்பாவில் நடத்தப்படும் யூரோ என்சிஏபி-இல் குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ளன. இந்த நிலையில், யூரோ என்சிஏபி-இல் ஹூண்டாயின் கோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், ஹூண்டாய் கோனாவுக்கு 4 ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு யூரோ என்சிஏபி ஏஜென்சி தனது கடுமையான வார்த்தைகளை தெரிவித்துள்ளது.
யூரோ என்சிஏபி கூறியதாவது, ஹூண்டாய் கோனா கார் அதிர்ஷ்டசாலியானது, 3-ஸ்டார் ரேட்டிங்கில் கிராஷ் டெஸ்ட்டிங்கை இந்த கார் முடிக்கவில்லை. அதாவது, மற்ற பிரபலமான கார்கள் கூட 3-ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், கோனா 4 ஸ்டார்களை பெற்றுள்ளதாக யூரோ என்சிஏபி ஆச்சிரியத்துடன் கூறியுள்ளது. இதனால், கோனா காரின் தரத்தை யூரோ என்சிஏபி குறைவாக மதிப்பிட்டதா என ஹூண்டாய் நிறுவனத்தில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.

யூரோ என்சிஏபி-இல் ஹூண்டாய் கோனா கார் சோதனை செய்யப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஏற்கனவே 2017இல், முதல் தலைமுறை கோனா சோதனை செய்யப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் இந்த ஹூண்டாய் எஸ்யூவி கார் முழு 5 நட்சத்திரங்களை பெற்று இருந்தது.
அப்போது, பெரியவர்கள் பாதுகாப்பில் 87 சதவீதத்தையும், குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 85 சதவீதத்தையும், பாதசாரிகள் பாதுகாப்பில் 62 சதவீதத்தையும், பாதுகாப்பு உதவி சிஸ்டங்களில் 60 சதவீதத்தையும் கோனா பெற்றிருந்தது. இதனாலேயே, 2ஆம் தலைமுறை கோனாவும் 5 ஸ்டார்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

5 ஸ்டார்களை பெறும் என்பது மட்டுமின்றி, 2017இல் பெரியவர்கள், குழந்தைகள் பாதுகாப்பில் பதிவு செய்த மதிப்பெண்களை காட்டிலும் கூடுதல் மதிப்பெண்களை பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால், 2ஆம் தலைமுறை ஹூண்டாய் கோனா கார் 4 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது. இதனாலேயே, யூரோ என்சிஏபி கோனா காரின் செயல்படுதிறனை கிண்டலடிக்கும் விதமாக பேசியுள்ளது.
தற்போது யூரோ என்சிஏபி-இல் சோதனை செய்யப்பட்டுள்ள 2ஆம் தலைமுறை கோனா கார் பெரியவர்கள் பாதுகாப்பில் 80 சதவீதத்தையும், குழந்தைகள் பாதுகாப்பில் 83 சதவீதத்தையும் பெற்றுள்ளது. 2017இல் இதே பாதுகாப்புகளில் இந்த கார் பதிவு செய்த மதிப்பெண்களை காட்டிலும் இது குறைவாகும். பாதசாரிகளுக்கான பாதுகாப்பு 62%-இல் இருந்து 64% ஆக சற்று அதிகரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2017இல் பதிவு செய்த சேஃப்டி ரேட்டிங்ஸை விட இப்போது பதிவு செய்து இருப்பது குறைவு என்பதால், ஹூண்டாய் கோனா காரின் தரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில், இத்தனை வருடங்களில் யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்கள் கடுமையாகி உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், ஹூண்டாயை சீண்டுவதுபோல் யூரோ என்சிஏபி பேசுவது அனைத்தும் ஓர் விளம்பரமே.


Click it and Unblock the Notifications









