வடக்கு வேண்டாமாம்.. மொத்த பணத்தையும் தமிழகத்திலேயே கொட்டும் கொரிய நிறுவனம்.. மலையளவு தொகையை போட போறாங்க!
பிரபல தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் 15,000 கோடி ரூபாயை புதிதாக தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுமுக வாகனங்களின் உற்பத்திக்காகவும், உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்யவும் இந்த பெரும் தொகையை மாநிலத்தில் முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் தமிழகத்தில் புதிதாக பெரும் தொகையை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் சுமார் 15 ஆயிரம் கோடியையே தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த மெகா முதலீடு குறித்த தகவலை நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதுமுக மின்சார வாகனத்தை உருவாக்குதல் மற்றும் மின்சார வாகனங்களுக்கு சாதகமான சூழலை நாடு முழுவதும் உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கே இந்த மாபெரும் முதலீடு பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதுதவிர, ஹைட்ரஜன் வாகனங்கள் மற்றும் பெட்ரோல்-டீசல் அல்லாத மாற்று ஃப்யூவலில் இயங்கும் வாகனங்கள் உருவாக்குவதல் உள்ளிட்டவற்றிற்கும் இந்த முதலீடு செய்யப்பட இருக்கின்றது.
புதிய முதலீட்டை முன்மொழியும் ஒப்பந்தம் வெகு விரைவில் தமிழக அரசுடன் கையொப்பம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் வியாழக்கிழமை அன்றே (நாளை) இந்த மாபெரும் முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன. 7 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரைக்கான முதலீடு இது என்பதால் 15 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடி வரை என முதலீடு நீட்டிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதுவரை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் நாட்டில் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்திருக்கின்றது. சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரிலேயே நிறுவனம் உற்பத்தி ஆலை அமைத்திருக்கின்றது. இங்கேயே புதிய முதலீட்டை முன்னிட்டு புதிய யூனிட் ஆலைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் கால் தடம் பதித்த ஹூண்டாய் மோட்டார்ஸின் தாய் நிறுவனமான கியா, அண்டை மாநிலமான ஆந்திராவை தேர்வு செய்து பெரும் முதலீட்டை அம்மாநிலத்தில் போட்டது. ஆனால், ஹூண்டாய் நிறுவனம் வெளி மாநிலங்களைத் தேடி செல்லாமல் புதிய முதலீட்டையும் தமிழகத்திலேயே செய்ய இருக்கின்றது.

ஏற்கனவே ஹூண்டாயின் மிகப் பெரிய உற்பத்தி ஆலையாக தமிழகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே அதை மேலும் விரிவாக்கும் செய்யும் முயற்சியில் ஹூண்டாய் களமிறங்கி இருக்கின்றது. தென் கொரியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே நிறுவனத்தின் மிகப் பெரிய ஆலை அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆண்டுக்கு 7 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் வாகனங்களை சென்னை ஆலையில் தயாரிக்க முடியும். இந்த பிரமாண்ட ஆலையையே தென் கொரிய நிறுவனம் தமிழகத்தில் அமைத்திருக்கின்றது. புதிய முதலீடு இதனை மேலும் பலமடங்கு விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிற்கும் நமது சென்னையில் இருந்து வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த செயலில் (வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில்) முன்னணி நிறுவனமாகவும் ஹூண்டாய் காட்சியளிக்கின்றது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒட்டுமொத்தமாக 7,00,811 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. இது 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் 10.3 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கையாகும்.
இந்த மொத்த விற்பனை எண்ணிக்கையில் 552,511 யூனிட்டுகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கை 148,300 ஆகும். இத்தகைய மாபெரும் வரவேற்பையே ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை இரட்டிப்பாக்கும் விதமாகவும், தன்னுடைய உற்பத்தி திறனை விரிவாக்கம் செய்யும் விதமாகவே விரைவில் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஹூண்டாய் செய்ய இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும் நிறுவனங்கள் மற்றும் புதுமுக நிறுவனங்கள் பல மாற்று மாநிலங்களை நோக்கி படையெடுத்து வரும்நிலையில், தமிழகத்திலேயே தன்னுடைய அடுத்தகட்ட முதலீட்டையும் மேற்கொள்ள ஹூண்டாய் முன் வந்திருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது மாநிலத்தில் புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









