சாலையில் எல்லார் கவனமும் இதன் மீதுதான் இருக்கும் - புதிய வெர்னா காரின் அசத்தலான தோற்றத்தை வெளியிட்டது ஹூண்டாய்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் 2023 வெர்னா செடான் காரின் மிகவும் அட்வான்ஸான தோற்றத்தினை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்துள்ளது. இதன் மூலம் நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.
உலகளவில் பிரபலமான கார் பிராண்டாக விளங்கும் ஹூண்டாய் நம் இந்தியாவில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கிராண்ட் ஐ10 நியோஸ், அவ்ரா போன்ற பட்ஜெட் விலை கார்களை விற்பனை செய்து வருகிறது. அதேநேரம் க்ரெட்டா, ஐ20, வெர்னா என சற்று பிரீமியம் தரத்திலான கார்களும் இந்த தென்கொரிய பிராண்டில் இருந்து நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் பிரீமியம் செடான் காரான வெர்னாவை விரைவில் மிகவும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. வருகிற மார்ச் 21ஆம் தேதி புதிய வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் புதிய வெர்னா காரின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ரெண்டார் படங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்துள்ளது.
ஹூண்டாயின் உலகளாவிய டிசைன் அடையாளமான 'சென்சுஅஸ் ஸ்போர்டினஸ்'-ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய வெர்னா மிகவும் அட்வான்ஸான டிசைனில் இந்த படங்களில் காட்சியளிக்கிறது. குறிப்பாக, பயணத்தின்போது காற்றை கிழித்து கொண்டு செல்லும் அளவிற்கு காற்று இயக்கவியலுக்கு இணக்கமானதாக இந்த புதிய செடான் காரை ஹூண்டாய் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இது ஹூண்டாய் வெர்னாவின் 6ஆம் தலைமுறை மாடல் ஆகும். இந்த படங்களை வைத்து பார்க்கும்போது, வெர்னா காரின் தோற்றம் ஆனது முன்பக்கத்தில் இருந்து பக்கவாட்டு மற்றும் பின்பக்கம் வரையில் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரெண்டார் படங்களை வெளியிட்டிருப்பது குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உன்சூ கிம் கருத்து தெரிவிக்கையில், "இன்று, புத்தம் புதிய ஹூண்டாய் வெர்னாவின் டிசைனை வெளிக்காட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த அட்வான்ஸான தோற்றம் கொண்ட செடான் காரை அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவங்களை உயர்த்துவது மற்றும் இந்த பிரிவில் தேவைகளை புதுப்பிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். அதன் மாறும் விகிதாச்சாரங்கள் மற்றும் தனித்துவமான அளவுருக்கள் மூலம் புத்தம் புதிய ஹூண்டாய் வெர்னா புதிய ஸ்டாண்டர்டை வரையறுத்து எதிர்கால அனுபவங்களுக்கு வழிவகுக்கும்" என்றார்.

முன்பதிவுகள் நடைபெற்று கொண்டிருப்பதால், விருப்பப்படுவோர் 2023 ஹூண்டாய் வெர்னா காரை டீலர்ஷிப் ஷோரூம்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புக் செய்யலாம். இதற்கான டோக்கன் தொகையாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ.எக்ஸ், எஸ், எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) என புதிய வெர்னா கார் மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
என்ஜின் தேர்வுகளாக புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்பட உள்ளன. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளையும், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஐவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளையும் பெற முடிகிறது.


Click it and Unblock the Notifications