ராணுவ வண்டியே தோத்திடும்.. க்ரெட்டாவைவிட செம்ம பெரிய காராக புதிய முஃபாஸா அட்வென்சர் எஸ்யூவி வெளியீடு!
மிகவும் முரட்டுத் தனமான மற்றும் பெரிய உருவம் கொண்ட வாகனம் ஒன்றை ஹூண்டாய் இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. முஃபாஸா எனும் பெயர் அவ்வாகனத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது. தன்னுடைய க்ரெட்டா எஸ்யூவி காரைவிட அளவில் பெரியதாக இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதை தற்போது கான்செப்ட் (முன் மாதிரி மாடல்) நிலையிலேயே ஹூண்டாய் உருவாக்கி இருக்கின்றது. வெகு விரைவில் இதனை உற்பத்தி செய்யும் பணியில் நிறுவனம் களமிறங்க இருக்கின்றது. மேலும், உற்பத்திக்கு தயாரான முஃபாஸாவை 2023 ஷாங்காய் ஆட்டோ ஷோவில் வெளியீடு செய்யவும் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இந்த காரை பிரத்யேகமாக சீன சந்தைக்காகவே ஹூண்டாய் உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், பிற உலக நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு வருவது சந்தேகமே. இந்த நிலையே ஹூண்டாய் கார் பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உருவாகி இருக்கும் இந்த காரை சீனாவில் மட்டும் ஹூண்டாய் விற்பனைக்கு வழங்க இருப்பது உண்மையிலேயே பலருக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்திருக்கின்றது.
அட்வென்சர் அம்சங்களை தாங்கிய மிக அழகிய காராக முஃபாஸா காட்சியளிக்கின்றது. இதன் முகப்பு மற்றும் பின் பகுதி இரண்டும் கண்களைக் கவரக் கூடிய வடிவில் உள்ளது. காரின் பக்கவாட்டு பகுதியும் கவர்ச்சிக்கு சற்றும் குறைவில்லாததாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய வாகனத்தையே சீன சந்தைக்காக ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது.

காரின் முகப்பு பகுதியில் கருப்பு நிற கிரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மெட்டாலிக் பம்பர், முற்றிலும் வித்தியாசமான தோற்றம் கொண்ட லைட்டுகள் உள்ளிட்டவையும் காரின் முகப்பு பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இதுபோல் இன்னும் பல அம்சங்களை, முஃபாஸாவை அழகான காராக தோற்றுவிப்பதற்காக ஹூண்டாய் பயன்படுத்தி இருக்கின்றது.
ராணுவ வாகனங்களைப் போன்ற பேனல், குண்டான ஆர்ச்சுகள் கொண்ட வீல், கருப்பு நிற பில்லர்கள், வேலை செய்யக் கூடிய லைட்டுகளுடன் கூடிய ரூஃப் ரேக்குகள் என பற்பல அம்சங்களை இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றது ஹூண்டாய். இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தால் ஒட்டுமொத்த சந்தையையும் ஒரு கை பார்த்துவிடும்.

தொழில்நுட்ப வசதியிலும் இந்த கார் நம்மை மிரள செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அடாஸ் மற்றும் கார் இணைப்பு வசதிக் கொண்ட காராக முஃபாஸா தயாராகி வருகின்றது. இந்த அம்சங்கள் வாயிலாக அதிக பாதுகாப்பான பயண அனுபவத்தை நம்மால் பெற முடியும்.
குறிப்பாக, தானாக பிரேக் பிடித்தல், லேனுக்கு ஏற்றவாறு ஸ்டியரிங் வீலை அட்ஜெஸ்ட் செய்தல் மற்றும் தானாக பிரேக் பிடித்தல் உள்ளிட்டவற்றை இந்த அம்சங்கள் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, பெரிய திரைகள், பிரீமியம் தர சவுண்ட் சிஸ்டம், லெதர் இருக்கைகள், ஹெட்-அப் திரை உள்ளிட்டவையும் முஃபாஸாவில் வழங்கப்பட இருக்கின்றன.

2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் 158 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. முன் பக்க வீல் இயங்கும் காராக முஃபாஸா தயார் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வசதிகளுடன் சேர்த்து ஹைபிரிட் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. ஆனால், முதலில் வழக்கமான பெட்ரோல் மோட்டாரே விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிக இட வசதி, பிரீமியம் அம்சங்கள் ஆகியவற்றிற்கு தாராளமாக வழங்கும் காராக இது பார்க்கப்படுகின்றது. இதைவிட அதிக வசதிகள் மற்றும் இடத்தைக் கொண்ட காராக முஃபாஸாக உருவாக்கி இருப்பது இந்தியர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









