அமேசானில் இனி கார்களும் விற்பனைக்கு கிடைக்கும்.. கொரியா நிறுவனம் முன்னெடுக்கும் சூப்பரான திட்டம்!
"ஹே.. அலெக்ஸா எனக்கு ஒரு காரை புக் பண்ணு.." அமேசான் (Amazon)-ல் விரைவில் கார்களும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த பிராண்டின் கார் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றது? எப்போதில் இருந்து விற்பனைத் தொடங்கப்பட இருக்கின்றது? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் ஹூண்டாய் (Hyundai). இந்த நிறுவனம் அதன் தயாரிப்புகளை அமேசான் (Amazon) தளத்தின் வாயிலாக விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. ஆகையால், இனி வரும் நாட்களில் அமேசான் தளத்தில் வீட்டு உபயோகப் பொருட்களைப் போல கார்களும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஏற்கனவே இந்த தளத்தில் சிறுவர்களுக்கான சைக்கிள், பைக் மற்றும் பெரியவர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் முதலியவை விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இந்த தளத்தைப் பயன்படுத்தி ஹூண்டாயும் அதன் கார்களை விற்பனைச் செய்யும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
இதன் வாயிலாக நிறுவனத்தின் ஷோரூம் இல்லாத பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களாலும் எளிதில் ஹூண்டாய் கார்களை வாங்கிக் கொள்வதற்கான சூழல் உருவாகி இருக்கின்றது. வரும் 2024 ஆம் ஆண்டு முதலே அமேசான் தளத்தின் வாயிலாக தன்னுடைய கார்களை ஹூண்டாய் விற்பனைச் செய்ய இருக்கின்றது.

மேலும், முதலில் இந்த சேவை அமெரிக்காவிலேயே தொடங்கப்பட இருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே பிற உலக நாடுகளிலும் இந்த பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், மற்ற நாடுகளில் அமேசான் வாயிலாக கார்களை விற்பனைக்குக் கொண்டு வருவதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
அமேசான் தளத்தின் வாயிலாக காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் அருகாமையில் உள்ள உள்ளூர் ஹூண்டாய் கார் விற்பனையாளர் வாயிலாக டெலிவரி வழங்கும் என தெரிவித்து இருக்கின்றது. வாடிக்கையாளர் விரும்பும் நேரத்தில் டெலிவரி செய்யவும் வழி வகைச் செய்யப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, காரை வாங்க அலெக்சாவின் உதவியை நாடிக் கொள்ள முடியும். புக் செய்வது தொடங்கி கார் பற்றி அறிந்துக் கொள்வது என பல்வேறு வழிகளில் அது நமக்கு உதவி செய்யும். எனவே, கூடுதல் சுலபமான வாங்குதல் அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
அமேசான் - ஹூண்டாய் இணைவிற்கான ஒப்பந்தம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே போடப்பட்டது ஆகும். இந்த நிலையிலேயே தற்போது அவர்களின் கூட்டணி தொடங்கி இருக்கின்றது. உலகின் அதிகம் வாடிக்கையாளர்களைக் கொண்ட இ-காமர்ஸ் தளமாக அமேசான் இருக்கின்றது. இந்த தளத்தில் அது 2018 ஆம் ஆண்டிலேயே அதன் முதல் டிஜிட்டல் ஷோரூமை உருவாக்கியது.
இந்த நிலையிலேயே இந்த புதிய தகவல் வெளியிடப்பட்டு இருக்கின்றது. சமீபத்திய லாஸ் ஏஞ்ஜல்ஸ் ஆட்டோ ஷோ வாயிலாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியா போன்ற பிற நாடுகளில் இந்த சேவையை ஹூண்டாய் எப்போது தொடங்கும் என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. விரைவில், தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களே அதிகளவில் அமேசான் உடன் இணைந்து தங்களின் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்களும் அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் ஷோரூம்கள் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களிலேயே அதிகளவில் தென்படுகின்றன. ஆகையால், இந்த சேவையை இந்தியாவில் ஹூண்டாய்-அமேசான் தொடங்கும் எனில் கிராமம் உள்ளிட்ட பிற பகுதிகளில் வசிப்பவர்களாலும் அந்த நிறுவனத்தின் கார்களை வாங்குவது சுலபமாக மாறலாம்.


Click it and Unblock the Notifications









