அப்டேட்டான என்ஜின் உடன் புதிய ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் - விலையும் அதிகரிப்பு!!
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் வென்யூ லைன் எஸ்யூவி காரை மேம்படுத்தப்பட்ட என்ஜின் உடன் அப்டேட் செய்துள்ளது. இந்த வகையில் வென்யூ என் லைன் காரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.
புதிய வென்யூ என் லைன் காரில் முக்கிய அம்சமாக வழக்கமான டர்போ பெட்ரோல் என்ஜின் ரியல்-டிரைவ் எமிஷனுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வாகனங்களின் என்ஜின் வெளிப்படுத்தும் காற்று மாசு அளவை வெகுவாக குறைத்தன. அதனை தொடர்ந்து, இந்த 2023 ஏப்ரல் முதல் பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.

இதன் காரணமாக, தற்போது இருப்பதை காட்டிலும் பிஎஸ்6-இன் கிடுக்குப்பிடிகள் மேலும் வலுப்பெறவுள்ளன. அதாவது, என்ஜின் வெளிப்படுத்தும் மாசு அளவு ரியல்-டைம் ஆக தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகள் கொண்டுவர உள்ளன. இந்த விதிமுறைகள் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தலைவலியாக அமைந்துள்ளன.
ஏனெனில், விரைவில் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மீண்டும் என்ஜினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி கடந்த சில வாரங்களாக ரியல்-டிரைவ் எமிஷனுக்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்ட என்ஜின் உடன் பல்வேறு பிராண்ட்களின் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் வரிசையில் தற்போது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது வென்யூ என் லைன் காரின் டர்போ பெட்ரோல் என்ஜினை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.

ஹூண்டாய் வென்யூ என் லைன் காரின் 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் பெடில் ஷிஃப்டர்களை கொண்ட 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜின் அப்டேட் மட்டுமின்றி புதிய வென்யூ என் லைன் காரில் ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்தக்கூடிய இந்த ஐடியல் ஸ்டாப்/ ஸ்டார்ட் வசதி ஆனது நெரிசல் மிகுந்த போக்குவரத்துகளில் தினந்தோறும் பயணிப்பதற்கு உகந்தது ஆகும். இந்த அப்டேட்களின் விளைவாக வென்யூ என் லைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.30,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து என்6 மற்றும் என்8 என இரு விதமான வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் என்6 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.60 லட்சமாகவும், என்8 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.74 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வென்யூ என் லைன் காரில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் 3 விதமான டிரைவ் மோட்கள் வழங்கப்படுகின்றன. மேற்கூறப்பட்ட அப்டேட்களை தவிர்த்து வென்யூ என் லைன் காரில் வேறெந்த தோற்ற மாற்றங்களும் இல்லை.
வென்யூ என் லைன் காரில் இரட்டை முனை எக்ஸாஸ்ட், சிவப்பு நிறத்தில் பிரேக் காலிபர்கள், சில என் லைன் பேட்ஜ்கள் உள்ளிட்டவை வழக்கமான வென்யூ காரில் இருந்து வேறுப்படும் வகையில் வழங்கப்படுகின்றன. இந்த ஆற்றல்மிக்க வென்யூ காரையும் சிங்கிள்-டோன் மற்றும் ட்யூவல்-டோன் நிறத்தேர்வுகளில் பெற முடியும். இருப்பினும், எந்தவொரு பெயிண்ட் தேர்விலும் ரூஃப் ரெயில்கள் மற்றும் முன் & பின் பம்பரின் கீழ் பாதியில் சிவப்பு நிற ஹைலைட்கள் நிலையான அம்சமாக வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications