ஹூண்டாய், டொயோட்டா எலெக்ட்ரிக் கார்களை விளம்பரம் செய்ய அதிரடி தடை.. இதற்கு பின்னால இப்படி ஒரு காரணம் இருக்கா!
பிரபல கார் உற்பத்தி நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் டொயோட்டா அதன் எலெக்ட்ரிக் கார்களை விளம்பரம் செய்ய ஓர் நாட்டில் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கான காரணம் என்ன?, எந்த நாட்டில் இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மக்களை தங்களுடைய தயாரிப்பின் பக்கம் ஈர்க்கும் பொருட்டு பெரும் நிறுவனங்கள் விளம்பரங்களை டிவி, சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பி வருகின்றன. இந்த விளம்பரங்கள் வாயிலாக தங்களுடைய தயாரிப்புகள் எத்தகைய சிறப்பானவை என்பதை மட்டுமே நிறுவனங்கள் வெளிக்காட்டும், இதை மட்டுமே நிறுவனங்கள் செய்ய வேண்டும்.

ஆனால், சில நிறுவனங்கள் மக்களைக் கவர போலியாக, அதாவது, பொய்யான தகவல்களை விளம்பரங்கள் வாயிலாக பரப்பி வருகின்றன. இத்தகையக் குற்றச்சாட்டே ஹூண்டாய் மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் மீது முன் வைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அந்தந்த நிறுவனங்களின் மின்சார கார்களை பொது வெளியில் விளம்பர செய்ய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து அரசாங்கமே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. மக்களை பொய்யான தகவல்கள் அடங்கிய விளம்பரங்கள் வாயிலாக இரு நிறுவனங்களும் கவர்வதாகக் கூறி அது தடை விதித்து இருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் இங்கிலாந்து நாட்டில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரையும், டொயோட்டா நிறுவனம் பிஇசட்4எக்ஸ் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிறுவனங்களும் அதனதன் எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக போட்டிப் போட்டுக் கொண்டு விளம்பரங்களை அனைத்து ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிப்பரப்பி வருகின்றன. குறிப்பாக, அவை தங்களுடைய எலெக்ட்ரிக் கார்களை மிக அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என கூறி அவர்கள் செய்து விளம்பரத்திற்கே தடை விதிக்கப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனம் அதன் பிஇசட்4எக்ஸ் எலெக்ட்ரிக் காரை 150 kW சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 30 நிமிடங்களிலேயே 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்றும், ஹூண்டாய் அதன் ஐயோனிக் 5 இவி-யை, 350 kW திறன் கொண்ட சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது வெறும் 18 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்றும் கூறி இருக்கின்றன.

இந்த தகவலே போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே அந்தந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் மக்களை தவறாக வழி நடத்துவதாகக் கூறி அவற்றிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றன. இங்கிலாந்து நாட்டின் விளம்பர கண்கானிப்பு அமைப்பான விளம்பர தரநிலைகள் அமைப்பே இந்த தடையை இரு நிறுவனங்களுக்கும் விதித்துள்ளது.
அது மேற்கொண்ட விசாரணையில் இரு நிறுவனங்களும், தங்களுடைய மின்சார கார்கள் மிக சிறந்த சூழ்நிலையில் வைத்து சார்ஜ் செய்யும்போதே இந்த அளவு அதிக வேகத்தில் சார்ஜாகின என்பதை ஒப்புக் கொண்டன. ஆனால், நிஜ வாழ்க்கையில் நிறுவனங்கள் கூறிய அதே சார்ஜிங் பாயிண்டுகளைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது அவர்கள் வாக்குக் கொடுத்த நேரத்தையும் தாண்டி அதிக நேரத்தை அவை எடுத்திருக்கின்றன.

இதுகுறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த நிலையிலேயே அதிரடியாக ஹூண்டாய் மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் மின்சார வாகனங்களை விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. பேட்டரியின் வயது மற்றும் நிலை, பேட்டரியின் வெப்ப நிலை மற்றும் சுற்றுப்புற வெப்ப நிலை ஆகியவற்றைப் பொருத்தே அவற்றின் சார்ஜ் வேகமும் அமையும்.
அனைத்து சூழல்களிலும் அவை மிக சிறப்பான வேகத்தில் சார்ஜாகிவிடாது. இதுபோன்ற காரணங்களும் அந்த விளம்பரத்தில் மறைக்கப்பட்டு இருக்கின்றன. எனவேதான் தற்போது அதிரடி தடை நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இந்த விளம்பரங்களில் அதிக சார்ஜிங் மையங்கள் இருப்பதாகவும் பொய்யாக கூறப்பட்டு இருக்கின்றது.
இதுகுறித்தும் நிறுவனங்களிடத்தில் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கின்றன. இரு முன்னணி நிறுவனங்கள் இதுபோன்று சின்ன பிள்ளைத் தனமாக பொய் கூறி மாட்டிக் கொண்டிருப்பது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, டொயோட்டா மற்றும் ஹூண்டாய் கார் பிரியர்கள் மத்தியில் அவர்களின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர எந்த நிலைக்கும் போகும் என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே இந்த சம்பவம் அமைந்து இருக்கின்றது. ஆகையால், மக்கள் விளம்பரங்களைப் பார்த்து ஏமாற கூடாது என்பதே எங்களின் கருத்தாகும். விளம்பரங்களுக்கு பதிலாக ஏற்கனவே அந்த வாகனங்களை பயன்படுத்துபவர்களிடம் அதுகுறித்து கேட்டறிந்து வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









