தமன் இசையமைக்கிறாரு... இந்தியாவின் முதல் ஃபார்முலா இ போட்டி ஹைதராபாத்தில்!!
ஃபார்முலா போட்டிகளை காண்பதற்கு யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். ஃபார்முலா 1 போட்டிகள் நீண்ட வருட வரலாற்றை கொண்டவை மற்றும் உலகம் முழுவதும் பிரபலமானவை. இந்தியாவிலும் ஃபார்முலா 1 போட்டிக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதை மறுப்பதற்கில்லை.
இருப்பினும் ஃபார்முலா 1 போட்டிகளை நேரில் கண்டுக்களிக்கும் வாய்ப்பு நம் இந்தியர்களுக்கு நீண்ட காலமாக கிடைக்காமல் இருந்தது. அந்த குறை, கடந்த 2013ஆம் ஆண்டில் தீர்ந்தது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 போட்டி தலைநகர் டெல்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டாவில் நடத்தப்பட்டது. அதேபோல், எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஃபார்முலா இ போட்டி விரைவில் ஹைதராபாத்தில், 'ஹைதராபாத் இ-பிரிக்ஸ்' என்ற பெயரில் நடத்தப்பட உள்ளது.

இப்போதும் உங்களில் சிலருக்கு ஃபார்முலா இ போட்டிகள் என்றால் என்ன? உலகளவில் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியை இந்தியா நடத்தவுள்ளதில் என்னென்ன முக்கியத்துவங்கள் உள்ளன? என்ற கேள்விகள் எழலாம். இந்த கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் ஷார்ட் & ஸ்வீட்டாக பார்க்கலாம் வாங்க. ஏற்கனவே கூறியதுதான் ஃபார்முலா இ என்பது பேட்டரியில் இயங்கும் சிங்கிள்-சீட்டர் எலக்ட்ரிக் ரேசிங் கார்களுக்கு இடையேயான ரேஸ் போட்டி ஆகும்.
ஃபார்முலா 1 பந்தயத்தை போன்று ஃபார்முலா இ பந்தயத்திலும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து போட்டியாளர்களும், அவர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. ஃபார்முலா இ ரேசிங் பந்தயம் முதன்முதலாக 2014இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இவ்வாறான போட்டியை நடத்தலாம் என்று அதற்கு 3 வருடங்களுக்கு முன்பே, அதாவது 2011ஆம் ஆண்டிலேயே சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் தலைவர் ஜியன் டோட் மற்றும் ஸ்பெயின் தொழிலதிபர் அலேஜாண்ட்ரோ அகக் தீர்மானித்துவிட்டனர்.

போட்டிக்கு இடையில் காரை மாற்றி கொள்வது என சில பல கவர்ச்சியான விஷயங்களுடன் ஆரம்பிக்கப்பட்டாலும், ஃபார்முலா இ ஆனது தற்சமயம் உலகளவில் நடத்தப்படும் முக்கிய மோட்டார் பந்தயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. ஃபார்முலா இ பந்தயத்தின் 9வது சீசன் தான் இந்தியாவில் இந்த 2023ஆம் வருடத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த பந்தயத்தில் மொத்தம் 12 அணிகள் (தலா 2 டிரைவர்களுடன்) அனுமதிக்கப்பட உள்ளன.
இவற்றில் சிறந்த அணியை தேர்வு செய்ய மொத்தம் 14 பந்தயங்கள் இந்த வருடம் முழுவதும் நடத்தப்படும். ஜாகுவார், மெக்லாரன், போர்ஷே, மஸராட்டி, நிஸான், கப்ரா, டிஎஸ் மற்றும் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனங்கள் ஃபார்முலா இ பந்தயத்தின் இந்த 9வது சீசனில் பங்கேற்கவுள்ளன. இ-பிரிக்ஸ் என்ற வார்த்தையையும் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஃபார்முலா இ பந்தயத்தில் வார இறுதி நாட்களில் நடத்தப்படும் போட்டிகளை தான் இ-பிரிக்ஸ் என்கின்றனர்.

இன்று (பிப்ரவரி 10) முதல் ஹைதராபாத்தில் துவங்கும் ஃபார்முலா இ பந்தயத்தில் முதல் போட்டியானது இலவச பிராக்டிஸ் 1 போட்டியாக இன்று மாலை நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, 2வது இலவச பிராக்டிஸ் போட்டி நாளை காலை 8 மணியளவில் துவங்கப்படும். இந்த பிராக்டிஸ் போட்டிகள் 50 நிமிடங்கள் நடத்தப்படும். இந்த போட்டிகளில் ஓட்டுனர் முழு 350 கிலோவாட்ஸ் ஆற்றலில் தங்களது காரை 30 நிமிடங்களுக்கு இயக்கலாம்.
தகுதிச்சுற்று போட்டிகள் நாளை (பிப்ரவரி 11) 2வது செஸனில் இருந்தே துவங்கவுள்ளன. இந்திய நேரப்படி காலை 10:40 மணியளவில் துவங்கப்பட உள்ள இந்த போட்டிக்காக, கலந்துக்கொள்ளவுள்ள 11 டிரைவர்களும் அவர்களது உலக சாம்பியன்ஷிப் பொசிஷனின் அடிப்படையில் 2 குழுக்களாக பிரிக்கப்படுவர். இந்த தகுதிச்சுற்றில் ஓட்டுனர்கள் தங்களது எலக்ட்ரிக் ரேசிங் கார்களை 10 நிமிடங்களுக்கு அதிகப்பட்ச 300 கிலோவாட்ஸ் ஆற்றலில் இயக்கி கொள்ளலாம்.

இதில் பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் டிரைவர்கள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர். அதன்பின் அரையிறுதி, இறுதி போட்டி உள்ளிட்டவை நடத்தப்படும். கால் இறுதி மற்றும் அரை இறுதியில் தோற்கும் டிரைவர்களுக்கு இடையேயும் அவர்களில் சிறந்தவர் யார் என்பதை அறிய பந்தயங்கள் நடத்தப்படும். இவை அனைத்திலும் வெற்றியாளர்கள் லேப் நேரத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுவர்.
இறுதி போட்டியில் வெற்றிப்பெறும் அணி 25 புள்ளிகளையும், அதற்கடுத்தடுத்து 4வது இடங்கள் வரையில் பிடிப்போர் முறையே 18, 15 மற்றும் 12 புள்ளிகளை பெறுவர். இவ்வாறு நாளுக்கு நாள் பரபரப்புக்கு உள்ளாக உள்ள இந்த ரேஸ் போட்டிகள் இன்று ஹைதராபாத்தில் சிறிய நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக ஆரம்பிக்கப்பட உள்ளன. ஃபார்முலா இ 9வது சீசனுக்கான பாடலை பிரபல இசையமைப்பாளரும், சமீபத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான வாரிசு படத்திற்கு இசையமைத்துவருமான தமன் கம்போஸ் செய்து கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications









