வெயில்ல நிறுத்தினால் போதும் இந்த கார் ஓடும்! ஒரு பைசா செலவாகாது! பெட்ரோலும் தேவையில்ல, சார்ஜ் போடவும் வேண்டாம்
மேற்கூரையில் சோலார் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சியின் வாயிலாக இந்த சோலார் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில், பன்னாட்டு நிறுவனங்கள் (வாகன உற்பத்தியாளர்கள்) கலந்துக் கொண்டு தங்களின் வருங்கால வாகனங்களை அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் வேவி மொபிலிட்டி (Vayve Mobility) எனும் நிறுவனம் அதன் முதல் சோலார் காரை வெளியீடு செய்திருக்கின்றது.

இந்தியாவின் முதல் சோலார் கார்
இதுவே இந்தியாவின் முதல் சோலார் காராகும். அதாவது, சூரிய ஒளியில் இயங்கும் எலெக்ட்ரிக் கார் ஆகும். வேவி நிறுவனம் இந்த சோலார் எலெக்ட்ரிக் காருக்கு எவா (Vayve Eva) எனும் பெயரை வைத்திருக்கின்றது. இந்த பெயரிலேயே ஆட்டோ எக்ஸ்போவிலும் நிறுவனம் காரை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காரை சூரிய ஒளி இல்லை என்றால் இயக்க முடியாத என்கிற கேள்வியும், சந்தேகமும் உங்களுக்கு எழும்பி இருக்கலாம்.
சூரியன் இல்லனாலும் காரை ஓட்ட முடியும்
இதற்கான எங்களுடைய பதில், முடியும் என்பதே ஆகும். இந்தியாவில் மழை மற்றும் பனி காலங்களில் சில நேரங்களில் சூரியனே தோன்றாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த மாதிரியான நேரத்தில் காரை பயன்படுத்திக் கொள்ள, பிளக் இன் வசதிக் கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதியையும் எவா சோலார் எலெக்ட்ரிக் காரில் வேவி நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

பட்ஜெட் விலையில் வர போகுது
ஆகையால், இந்த காரை எந்த மாதிரியான சூழலிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது. டாடா நானே காரை உருவாக்கியதைப் போலவே அதே மோனோகாக்யூ சேஸிஸை பயன்படுத்தியே எவா சோலார் எலெக்ட்ரிக் காரை வேவி கட்டமைத்திருக்கின்றது. ஆகையால், பட்ஜெட் விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வேவி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவலை வெளியிடவில்லை. இதுகுறித்த தகவல் கூடிய விரைவில் வெளியிடப்படலாம். தற்போது வெறும் கான்செப்ட் மாடலாக மட்டுமே உருவாக்கப்பட்டு, அது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதேவேளையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இந்த சோலார் மின்சார கார் இரு இருக்கை வசதி உடன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தெரிவிக்கின்றன.

டூ சீட்டர் இது
முன் பக்கத்தில் ஓர் பெரியவரும், பின் பக்கத்தில் இரு சிறுவர்கள் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் இருக்கையுடன் இந்த கார் இருக்குமாம். நகர் புறங்களின் அதிக நெரிசலான சாலையைக் கருத்தில் கொண்டே இந்த எவா சோலார் எலெக்ட்ரிக் காரை வேவி உருவாக்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே நானோ அடிப்படையிலான சிறிய உருவம் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் மோட்டார்
எலெக்ட்ரிக் காரில் 6 கிலோவாட் லிக்யூடு கூல்டு பிஎம்எஸ்எம் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 16 எச்பி பவரையும், 40 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 14 kWh பேட்டரி பேக் வேவி எவா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. ஆக்டீவ் லிக்யூடு கூல் டெக்னாலஜியும் இந்த சோலார் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு உள்ளது.
இதை சூரிய ஒளி அல்லது பிளக்-இன் முறையில் முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 250 கிமீ வரை பயணிக்க முடியும். 15A சாக்கெட் வாயிலாகவே இந்த காரை சார்ஜ் செய்துகொள்ள முடியும். அவ்வாறு சார்ஜ் செய்யும்போது 80 சதவீதம் வரை சார்ஜாக எடுத்துக் கொள்ளும். இந்த மின்சார காரில் ஐபி68 தர மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தர சான்றானது நீர் மற்றும் தூசியால் பாதிப்பைச் சந்திக்காது என்பதே இதற்கான அர்த்தம் ஆகும்.
சஸ்பென்ஷன் அம்சம்
இந்த காரில் சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப்பிற்காக மேக்ஃபெர்சன், ஸ்ட்ரட் காயில் ஸ்பிரிங்குடன் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன் பக்க வீலிலேயே இந்த சஸ்பென்சன் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் டூயல் ஷாக் அப்சார்பர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற எக்கச்சக்க குறைந்த விலை சிறப்பம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மலிவு விலையில் எலெக்ட்ரிக் காரை வழங்க இந்த யுக்தியை வேவி நிறுவனம் கையாண்டுள்ளது.
எப்போது இந்த கார் விற்பனைக்கு வர இருக்கு?
சோலார் எலெக்ட்ரிக் காரில் சிறந்த பிரேக்கிங் திறனுக்காக முன் பக்க வீலில் டிஸ்க் பிரேக்குகளும், பின் பக்க வீலில் டிரம் பிரேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் விதமாக கனெக்ட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியும் வேவி எவாவில் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி இந்த சோலார் எலெக்ட்ரிக் கார் 2024 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








