Electric Car-ஆக மாற்றப்பட்ட இந்தியன் ஆர்மிக்கு சொந்தமான மாருதி ஜிப்ஸி.. இனி எந்த காரையும் தூக்கிபோட வேண்டாம்!
உலகமே மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கி இருக்கின்ற சூழலில் எலெக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி ஜிப்ஸி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தலைநகர் டெல்லியில்,வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 21) அன்று ராணுவ தளபதிகள் மாநாடு (Army Commanders Conference) நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டில் நடைபெறும் மிக முக்கியமான மாநாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த உயர்நிலை மாநாட்டின்போது பல்வேறு சுவராஷ்யமான சம்பவங்கள் அரங்கேறின.

அந்தவகையில், எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி ஜிப்ஸி கார்கள் அந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டன. ஓர் உயரிய நிலை மாநாட்டில் ரெட்ரோஃபிட் செய்யப்பட்ட வாகனம் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். நாடே மின்சார வாகன (Electric Vehicles) பயன்பாட்டை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது.
இதன் ஒரு பகுதியாகவே நமது இந்திய ராணுவமும் மின் வாகன பயன்பாட்டை நோக்கிய தனது பயணத்தை தொடங்கி இருக்கின்றது. மேலும், இப்போதைய நிகழ்வு பாதுகாப்பு துறையிடம் பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல் வாகனங்கள், மின்சார வாகனங்களாக மாற்றப்பட இருக்கின்றன என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்து உள்ளது.
பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையிலேயே ராணுவ தளபதிகள் மாநாடு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறுகின்றது. இத்தகைய முக்கியமான நிகழ்ச்சியிலேயே மின்சார வாகனமாக மாற்றப்பட்ட ஜிப்ஸி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. தற்போது இந்திய ராணுவத்திடம் அதிக எண்ணிக்கையில் மாருதி சுஸுகி ஜிப்ஸி கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. நாட்டின் புதிய வாகன அழிப்பு கொள்கை பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை உறுதியாக கூறுகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே பழைய வாகனங்களுக்கு மறு பிறவி வழங்கும் விதமாக பழைய ஜிப்ஸிக்கு மின்சார வாகனம் எனும் புதிய அவதாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருக்கின்றன. ஆகையால், பழைய ஐசிஇ எஞ்ஜின் கொண்ட ஜிப்ஸி கார்களை மின்சார வாகனங்களாக மாற்றப்படும்போது அவையும் சுற்றுச் சூழலுக்கு நண்பனாக மாறிவிடும். மேலும், அவற்றை ஸ்கிராப் செய்ய வேண்டும் என்கிற நிலை தவிர்க்கப்படும். இத்தகைய செயலுக்கு விதைபோடும் விதமாக பழைய ஜிப்ஸி முற்றிலும் மின்சாரத்தில் ஓடும் வாகனமாக மாற்றப்பட்டு இருக்கின்றது.
ஐஐடி டெல்லி மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான டேட்போல் புராஜெக்ட்ஸ் இந்த இரண்டும் இணைந்தே இந்தியன் ஆர்மிக்கு சொந்தமான ஜிப்ஸி காரை மின்சார வாகனமாக மாற்றி இருக்கின்றன. டாட்போல் புராஜெக்ட்ஸ், பெட்ரோல் மற்றும் டீசல் என எரிபொருளில் இயங்கும் எந்த வாகனங்களையும் மின்சார வாகனமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிறுவனம் வாகனத்திற்கு ஏழு ஆண்டுகளையும், மின் மோட்டாருக்கு இரண்டு ஆண்டுகளையும் உத்தரவாதமாக வழங்குகின்றது. பேட்டரிக்கு மட்டும் 5 ஆண்டுகள் தொடங்கி 7 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்படுகின்றது. இதுதவிர, ஐந்து ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் உத்தரவாதம் வாரண்டி வழங்கப்படுகின்றது.
இந்தியாவில் இப்போதே சில நிறுவனங்கள் அரசு உரிமம் பெற்று பெட்ரோல், டீசல் வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகியவற்றில் ஓடும் ஹைபிரிட் வாகனங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. அரசு விரைவில் இத்தகைய நிறுவனங்களுக்கு பரந்த அளவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் டீசல் ஆட்டோக்கள் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆட்டோக்களாக மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதைப் போல, எந்தவொரு எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களையும் மின்சார வாகனமாக மாற்றிக் கொள்வதற்கான அனுமதியை அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அறிவிப்புகள் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல், டீசல் வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றிக் கொள்வதன் வாயிலாக, நமக்கு பிடித்தமான வாகனங்களை ஆயுள் முழுவதும் நம்முடனேயே வைத்துக் கொள்வதற்கான சூழல் உருவாகின்றது. இதுதவிர, பழைய வாகன அழிப்பு கொள்கையில் இருந்து நம்முடைய வாகனத்தை தப்பிக்க வைத்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








