Electric Car-ஐ இத்தன இந்திய பிரபலங்கள் பயன்படுத்துறாங்களா! ஃபேமஸானவங்க மத்தியில் வேகமாக பிரபலமாகும் இ-கார்கள்!
எலெக்ட்ரிக் கார்கள் அதிகம் லாபம் தரக் கூடியவை மற்றும் சுற்றுச் சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என பலரால் கூறப்படுகின்றது. இதன் காரணமாகவே தற்போது மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்ட வண்ணம் இருக்கின்றது.
இதை வைத்து பார்க்கையில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாட்டில் வேகமாக உயர தொடங்கியிருப்பது தெளிவாக தெரிகின்றது. சமானியர்கள் மட்டுமின்றி சில முன்னணி பிரபலங்களும் இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில், எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஏர்ஆர் ரஹ்மானின் மகள்கள்: ஏஆர் ரஹ்மானுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் இரு மகள்களும் இணைந்தே எலெக்ட்ரிக் காரை வாங்கி இருக்கின்றனர். கதீஜா ரஹ்மான் மற்றும் ரஹிமா ரஹ்மான் ஆகியோரே இணைந்து போர்ஷே டேகேன் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி இருக்கின்றனர். இந்த காரின் தற்போதைய இந்திய சந்தை மதிப்பு இரண்டு கோடிக்கும் அதிகமாகும்.

இதன் ஆரம்ப விலையே ரூ. 1.53 கோடி ஆகும். உச்சபட்ச விலை ரூ. 2.34 கோடியாக இருக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இத்தகைய விலையுயர்ந்த ஆடம்பர எலெக்ட்ரிக் காரையே ஏஆர் ரஹ்மானின் மகள்கள் வாங்கியிருக்கின்றனர். இந்த எலெக்ட்ரிக் காரால் மணிக்கு 260 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இதேபோல் ஓர் முழு சார்ஜில் 388 கிமீ - 452 கிமீ வரையில் போர்ஷே டேகேன் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரில் பயணிக்க முடியும்.

மஞ்சு வாரியர், மினி கூபர் எஸ்இ எலெக்ட்ரிக் கார்: தமிழ் மற்றும் மலையாளம் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருப்பவர்களில் மஞ்சு வாரியரும் ஒருவர் ஆவார். இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வரும் முக்கிய பிரபலங்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இவர் உபயோகப்படுத்தி வரும் மினி கூபர் எஸ்இ எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 47.20 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வருகின்ற காரணத்தினாலேயே இந்த அளவு அதிக விலையைக் கொண்டதாக மினி கூபர் எஸ்இ எலெக்ட்ரிக் கார் காட்சியளிக்கின்றது.
மினி எலெக்ட்ரிக் காரில் 181 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன், 32.6 கிலோவாட் லித்தியம் அயன்-பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 2.5 மணி நேரத்திலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் இதன் பேட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

மகேஷ் பாபு, ஆடி இ-ட்ரான்: தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக்டர்களில் மகேஷ் பாபுவும் ஒருவர் ஆவார். இவர் பயன்படுத்தி வரும் எலெக்ட்ரிக் காரான ஆடி இ-ட்ரானின் விலை ரூ.1.18 கோடி ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இதில் ஓர் முழு சார்ஜில் 484கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்திய சொகுசு வாகன பிரியர்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மஹேந்திர சிங் தோனி, கியா இவி6: இந்திய கிரிக்கெட் உலகின் முன்னணி நட்சத்திர வீரரான தோனியும் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றார். இவர் கியா இவி6 எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றார். அதிக பிரீமியம் வசதிகள் நிறைந்த ஓர் எலெக்ட்ரிக் காரே இதுவாகும்.
இந்த காரை கியா சிபியூ வாயிலாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதன் விலை மிக மிக அதிகமாக உள்ளது. தோனி வாங்கி இருக்கும் எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 59.95 லட்சம் ஆகும். இதுவே, தல தோனியின் முதல் எலெக்ட்ரிக் காராகும்.
இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 528 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜிற்காக 77.4 kWh பேட்டரி பேக்கே கியா இவி6 எலெக்ட்ரிக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனை 350 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்தில் வெறும் 18 நிமிடங்களில் 10-80 சதவீதம் வரை சார்ஜேற்றி விட முடியும்.

நிதின் கட்கரி பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகியது. அந்த வீடியோவில் பாதுகாப்பு படையினர் சூழ வெள்ளை நிற பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்திறங்குவதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த காட்சிகளின் அடிப்படையிலேயே மத்திய அமைச்சரும் இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றார் என்பது தெரிய வந்தது.
இந்த சொகுசு எலெக்ட்ரிக் காரின் இந்திய மதிப்பு ரூ. 1.16 கோடி ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 425 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். இந்த காரை பிஎம்டபிள்யூ இந்தியாவே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு வழங்கியதாகக் கூறப்படுகின்றது.

ஜெனிலியா ரிதீஷ் தேஷ்முக் தம்பியினர்: இந்த தம்பதியினர் இரு எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டெஸ்லா மாடல் எக்ஸ் ஆகிய மின்சார கார்களையே இந்த தம்பதியினர் பயன்படுத்தி வருகின்றனர். இதில், டெஸ்லா அவர்களின் அமெரிக்கா பயணங்களின்போது பயன்படுத்தும் வகையில் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

முகேஷ் அம்பானி: இந்தியாவில் டெஸ்லாவின் இரு தயாரிப்புகளை முகேஷ் அம்பானி பயன்படுத்தி வருகின்றார். மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகியவையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இரண்டும் ஓர் முழு சார்ஜில் 400க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை தரக் கூடியவை. மேலும், அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியவையாகவும் அவை காட்சியளிக்கின்றன. இதேபோல் சொகுசு வசதிகளும் இந்த கார்களில் தாராளமாக இருக்கும். இதன் காரணமாகவே முகேஷ் அம்பானியிடம் இவை பயன்பாட்டில் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு சென்ற 2022 ஆம் ஆண்டில் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. அடுத்து வரும் வருடங்களில் இதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமானியர்களிடத்தில் மட்டுமின்றி பிரபலங்கள் மத்தியிலும் அவற்றிற்கு வரவேற்பு அதிகரிக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


Click it and Unblock the Notifications









