Toyota Fortuner Profit: ஒரு கார் வித்தா அரசுக்கு வரியாக மட்டும் இவ்வளவு லட்சம் கிடைக்குமா?
ஆட்டோமொபைல் துறை பெரும் வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது கொரோனாவிற்கு பிறகு ஆட்டோமொபைல் வீழ்ச்சியடையும் என நினைத்த நிலையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கின்றனர். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதிக்கும் என நாம் நினைத்துக்கொண்டிருப்போம்.
ஆனால் உண்மை தெரிந்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும் என்னதான் லட்சக்கணக்கில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களை விற்பனை செய்தாலும் அதில் பெரிய அளவில் லாபம் இல்லை எனக் கணக்கிட்டு சிலர் சொல்லுகின்றனர். இப்படியாகச் சமீபத்தில் CA Sahil Jain, என்ற யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஒரு காரை வாங்க வாடிக்கையாளர் எவ்வளவு பணம் செலவு செய்கிறார் என்பதை 3 பாகங்களாகப் பிரித்து லாப நஷ்டம் யாருக்கு அதிகம் இருக்கிறது எனக் கணக்கிட்டுக் காட்டியுள்ளனர். அதன்படி கார் தயாரிப்பாளர், டீலர் மற்றும் அரசு என ஒரு கார் விற்பனையில் லாபம் பெறும் 3 தனித்தனி அமைப்புகளை எடுத்து ஒப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் உதாரணத்திற்காக டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த கார் ரூ39.28 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகிறது. இதுவே ஆன்ரோட்டிற்கு வரும் போது ரூ47.35 லட்சம் செலவாகி விடுகிறது. இதில் இந்த காரை தயாரித்த டொயோட்டா நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் என நினைக்கிறீர்கள்? ஒரு 10 சதவீதமாவது இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் வெறும் 1 சதவீதம் தான் டொயோட்டா நிறுவனம் லாபமாக எடுத்துக்கொள்கிறது. அதாவது ரூ35 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை மட்டுமே லாபமாக எடுத்துக்கொள்கிறது. இந்த காரை விற்பனை செய்வது மூலம் டீலர்களுக்கு 2-2.5 சதவீதம் வரை லாபத்தைப் பெறுகிறது. அதாவது ஒரு டீலர் எந்த வித சலுகையும் இல்லாமல் இந்த காரை விற்பனை செய்தால் ரூ1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது.
இதில் மிகப்பெரிய லாபத்தை அடைவது மத்திய மாநில அரசுகள்தான். இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதுவே ரூ5.72 லட்சம் வருகிறது. இந்த ஜிஎஸ்டியுடன் சேர்த்து ஜிஎஸ்டி காம்பன்சேஷன் செஸ் வரி 22சதவீதம் விதிக்கப்படுகிறது. இது ரூ7.28 லட்சம்.

இந்த லாப விபரம் இந்த வீடியோவில் ஃபார்ச்சூனர் காருக்கு மட்டுமே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கார் தயாரிப்பார்களின் தயாரிப்பு, விலை, வேரியன்ட், வாகனத்தின் வகை உள்ளிட்ட பல விஷயங்களைப் பொருத்து இது மாறுபடும்.
நம்மில் பலர் கார் தயாரிப்பு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான லாபத்தை ஈட்டி வருவதாக நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் இந்நிறுவனங்கள் மிகச் சிறிய அளவில் மட்டுமே லாபத்தை ஈட்டி வருகிறது. ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மிகப்பெரிய லாபம் தான் கிடைக்கும். இந்த வீடியோவில் உள்ளது படியே கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ35 ஆயிரம் லாபம் கிடைக்கிறது என எடுத்துக்கொள்வோம்.
கடந்த 2023 பிப்ரவரி மாதம் மொத்தம் 3426 ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனையாகியுள்ளது. ஒரு காருக்கு ரூ35 ஆயிரம் லாபம் என்றால் மொத்தம் விற்பனையான 3426 காருக்கு கணக்கிட்டால் லாபம் மட்டுமே ரூ11.19 கோடி கிடைத்துள்ளது. இதுவும் ஒரே மாதத்தில் இது மிகப்பெரிய தொகை தான். ஆனால் அரசுக்கு கிடைத்த லாபம் ரூ 616 கோடியாகும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








