ஆஸ்திரேலியாவில் ரூ.20 லட்சம், ஆனா நம்ம ஊரில் வெறும் ரூ.12 லட்சம் தான்!! காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) வாகனம் தான் ஆஸ்திரேலிய மக்களுக்கு சுஸுகி ஜிம்னி எக்ஸ்.எல் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் நமது செய்தித்தளத்தில் கூறி இருந்தோம். ஆனால், இந்திய ஜிம்னிக்கும், ஆஸ்திரேலிய ஜிம்னிக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
இதற்கு முக்கிய காரணம், விலை. ஆஸ்திரேலிய ஜிம்னி சற்று விலைமிக்கதாக அந்த நாட்டின் சந்தைக்கு ஏற்ப விலையை கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவிலோ நம் நாட்டு மக்களின் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப சில, பல வசதிகளை நீக்கி விலை குறைவான ஆஃப்-ரோடு வாகனமாக ஜிம்னியை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது.

பெயர்: இந்திய மார்க்கெட்டில் மாருதி மற்றும் சுஸுகி நிறுவனங்கள் கூட்டணியில் இருப்பதால், மாருதி சுஸுகி ஜிம்னி என அழைக்கப்படுகிறது. ஆனால், இதே ஜிம்னி வாகனம் ஆஸ்திரேலியா நாட்டில் சுஸுகி ஜிம்னி எக்ஸ்.எல் என பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எக்ஸ்.எல் என்பது வாகனத்தின் அளவை குறிக்கிறது. ஏனெனில், இந்தியாவை போல் ஆஸ்திரேலியாவிலும் 5 கதவுகளுடன் ஜிம்னி கிடைக்கிறது. அதேநேரம் 3-டோர் வெர்சன்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அடாஸ் (ADAS): இந்திய ஜிம்னிக்கும், ஆஸ்திரேலிய ஜிம்னி வாகனத்திற்கும் இடையேயான முக்கியமான வித்தியாசம் அடாஸ் ஆகும். ஏனெனில், இந்திய ஜிம்னியில் இந்த அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப தொகுப்பு வழங்கப்படுவதில்லை. ஆஸ்திரேலிய ஜிம்னியின் அடாஸ் தொகுப்பில் தானியங்கி அவசர கால பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பயணம் துவங்குவதற்கு முன் கொடுக்க வேண்டிய எச்சரிக்கைகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

கலர் ஆப்ஷன்ஸ்: இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ஜிம்னி வாகனங்கள் இரண்டும் சிங்கிள்-டோன் மற்றும் ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. ஆனால், இரண்டிற்கும் பெயிண்ட்டின் ஷேட்களில் சில வித்தியாசங்கள் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 7 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களிலும், ஆஸ்திரேலியாவில் 6 பெயிண்ட் ஆப்ஷன்களிலும் ஜிம்னி கிடைக்கிறது.
பவர்டிரெயின்: இந்திய ஜிம்னியிலும் சரி, ஆஸ்திரேலிய ஜிம்னியிலும் சரி 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை மட்டுமே சுஸுகி நிறுவனம் வழங்குகிறது. ஆனால், இந்த என்ஜின் இந்திய ஜிம்னியில் அதிகப்பட்சமாக 105 பிஎஸ் மற்றும் 134 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், ஆஸ்திரேலிய ஜிம்னியில் 102 பிஎஸ் மற்றும் 130 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

வேரியண்ட்கள்: இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி வாகனம் ஸெட்டா மற்றும் ஆல்பா என இரு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவில் 5 கதவுகளை கொண்ட ஜிம்னி ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. ஜிம்னி எக்ஸ்.எல் என்பது அந்த வேரியண்ட் ஆகும். இருப்பினும், விலையுயர்ந்த ஜிம்னி வாகனமாக இது விற்பனை செய்யப்படுவதால், இந்த வாகனத்தில் அனைத்து விதமான அம்சங்களும் கிடைக்கின்றன.
விலைகள்: இந்தியாவில் ஜிம்னி வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.74 இலட்சத்தில் இருந்து துவங்குகின்றன. ஜிம்னியில் தண்டர் எடிசனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள இந்த தண்டர் எடிசனின் விலை இன்னும் ரூ.2 இலட்சம் அளவிற்கு குறைவாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் ஜிம்னி எக்ஸ்.எல் வாகனத்தின் விலைகள் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.19 - 20 இலட்சம் என்ற அளவில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்திய ஜிம்னிக்கும், ஆஸ்திரேலிய ஜிம்னிக்கும் விலை மிக முக்கிய வித்தியாசமாக விளங்குகிறது. இதனை சார்ந்தே, வாகனத்தில் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அமைகின்றன. இன்றைய கால மாடர்ன் கார்களில் ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறிவரும் அடாஸ் இந்திய ஜிம்னியில் வழங்கப்படுவதில்லை என்பது சற்று குறையாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









