நமது இந்திய இராணுவத்திற்கு இப்படியொரு ஜப்பான் வாகனமா!! கண்டிப்பா போரில் பயன்படுத்த மாட்டாங்க... ஏன் தெரியுமா?
இராணுவ வாகனங்கள் என்றாலே நமது நினைவிற்கு முதலாவதாக வருவது ஃபுல்-ஆர்ம்டு வாகனங்கள் தான். ஏனெனில் அவையே எந்தவொரு நாட்டின் இராணுவத்திலும் பிரதான வாகனங்களாகவும், போர் சமயத்தின் போது நாட்டை பாதுகாக்கக்கூடியவை ஆகவும் விளங்குகின்றன. அதேநேரம் இராணுவ துறையில் லைட்-ஆர்ம்டு மற்றும் சாதாரண வாகனங்களும் கூட பயன்படுத்தப்படுகின்றன.
இவை நேரடியாக போரின் போது பயன்படுத்தப்படாவிடினும், எல்லை ஒட்டிய பகுதிகளில் ரோந்து செல்வதற்கும், இராணுவ வீரர்கள் உள்பட மக்களை அழைத்து வருவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் எந்தவொரு இராணுவ வாகனமும் பொது மக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வித்தியாசப்படும் வகையில் ஏதேனும் ஒரு அம்சமாவது வழங்கப்படும். குறிப்பாக, இந்திய இராணுவ அடர் பச்சை நிறத்தை சொல்லலாம்.

ஏனெனில் இந்த பச்சை நிறத்தில் பொது விற்பனை செய்யப்படும் மற்ற எந்த வாகனமும் பெயிண்ட் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆதலால் இந்த பச்சை நிறத்தில் யாரேனும் தெரியாமல் தனது வாகனத்திற்கு பெயிண்ட் செய்தாலும் அவர் சிறைத்தண்டனை பெறுவதற்கு கூட வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட நிலையில், அத்தகைய இராணுவ பச்சை நிறத்தில் இஸுஸு வி-கிராஸ் 4x4 பிக்-அப் ட்ரக் வாகனம் ஒன்று பொது சாலையில் காட்சி தந்துள்ளது.
ஆனால் உண்மையில் இராணுவ வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பச்சை நிறம் இன்னும் அடர்த்தியானதாக இருக்கும். ஆனால் சோதனை ஓட்டத்தின்போது கேமிராவில் சிக்கியுள்ள இந்த இஸுஸு வி-கிராஸ் ஆனது லைட் பச்சை நிறத்தில் உள்ளது. இருப்பினும் இந்த வாகனம் இராணுவத்தில் வீரர்களை ஏற்றி செல்லும் பணிக்கு பயன்படுத்த சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை வீடியோவினை மேலே காணலாம். டெல்லி-என்சிஆர் பகுதிக்கு அருகே அடையாளம் காணப்பட்டுள்ள இந்த சோதனை வி-கிராஸ் பிக்-அப் ட்ரக்கில் சாஃப்ட் மேற்கூரை பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த மேற்கூரையை தேவைக்கு ஏற்ப நீக்கியும் கொள்ளலாம். இராணுவ வீரர்களை ஏற்றி ரோந்து பணிக்கு செல்லும் வாகனமாக இது பயன்படுத்தப்படலாம் என்பதால், வீரர்களின் துப்பாக்கிகளை வைக்க பிரத்யேக ஹேங்கர் வாகனத்தினுள் வழங்கப்பட்டிருக்கலாம்.
பொதுவாக இராணுவத்தில் ரோந்து பணிகளுக்கு அளவில் சிறிய, குறுகிய வாகனங்களையே பயன்படுத்துவர். அப்போதுதான் தேவைக்கு ஏற்ப எளிதில் மறைந்து கொள்ள முடியும். ஆனால் இஸுஸு வி-கிராஸ் ஆனது நன்கு நீளமான பிக்-அப் ட்ரக் வாகனம். ஆதலால் இந்த வாகனம் பரந்த விரிந்த பாலைவன பகுதிகளிலும், பனி பிரதேசங்களிலுமே பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த சோதனை வி-கிராஸில் 4x4 பேட்ஜ்ஜையும் பார்க்க முடிகிறது.

4x4 பேட்ஜ் ஆனது அனைத்து சக்கரங்களிலும் ஒரே நேரத்தில் இயங்கக்கூடிய வாகனம் இது என்பதை குறிக்கக்கூடியதாகும். இத்தகைய வாகனங்கள் பள்ளம், மேடுகள் மிகுந்த ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றவையாக இருக்கும். இராணுவ பயன்பாட்டிற்கு பெரும்பாலும் 4x4 ட்ரைவ் சிஸ்டம் கொண்ட வாகனங்களையே தேர்வு செய்வர். இளம் பச்சை நிற பெயிண்ட், 4x4 பேட்ஜ் இவற்றை எல்லாம் வைத்துதான் இது இராணுவ பயன்பாட்டிற்கான வாகனமாக இருக்கலாம் என கூறுகிறோம்.
மற்றப்படி இந்த இசுஸு பிக்-அப் ட்ரக் வாகனம் இராணுவ பயன்பாட்டிற்குதான் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளது என்பதை உறுதியாக சொல்லும் அளவிற்கு எந்தவொரு அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை. இராணுவத்தில் பழைய வாகனங்களை முடிந்தவரையில் பயன்படுத்தமாட்டார்கள். சமீபத்தில் கூட, புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் இந்திய இராணுவத்தில் உட்படுத்தப்பட்டது. விரைவில் மாருதி சுஸுகி ஜிம்னியும் இணையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








