கேரள போலீஸே நம்பி வாங்குகிறது... உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த வாகனத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
இந்திய சந்தையில் சமீபத்தில் வெளியான மாடர்ன் காரை கேரள போலீஸார் தங்களது ரோந்து பணிக்காக வாங்கியுள்ளனர். எந்த மாடல் கார் அது? ரோந்து பணிகளுக்கு கொண்டு செல்லும் அளவிற்கு அந்த வாகனத்தில் என்னென்ன உள்ளன என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
மஹிந்திரா தார் வாகனத்தை பற்றி பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற மஹிந்திராவின் எஸ்யூவி வாகனமான இதன் 2ஆம் தலைமுறை மாடல் கடந்த 2020இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தை தான் கேரள போலீஸார் புதியதாக வாங்கியுள்ளனரா? என கேட்டால், இல்லை.

மஹிந்திரா தாருக்கு விற்பனையில் நேரெதிர் போட்டி மாடலாக விளங்கும் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி வாகனத்தையே கேரள போலீஸார் தங்களது ரோந்து பணிகளுக்காக வாங்கியுள்ளனர். மஹிந்திரா தாருக்கு சரிக்கு சமமாக விற்பனையில் போட்டியாக உள்ள ஃபோர்ஸ் குர்காவின் புதிய தலைமுறை வெர்சனும் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில்தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மஹாராஷ்டிராவை சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இதன் 10 யூனிட்களை கேரள போலீஸார் வாங்கியுள்ளனர்.
இந்தியா முழுவதும் குர்கா வாகனங்களை பெரும்பாலான மாநில போலீஸார் தங்களது பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர். அவற்றுள், முந்தைய தலைமுறை குர்கா வாகனங்களே அதிகம். ஆனால் தற்போது கேரள போலீஸார் வாங்கி இருப்பது 2021இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை குர்கா எஸ்யூவி வாகனத்தை ஆகும். 10 குர்கா வாகனங்களை கேரளாவின் திருவனந்தப்புரம் போலீஸார் டீலர்ஷிப் ஷோரூம் மையம் ஒன்றில் இருந்து டெலிவிரி எடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதன் மூலமாக ஒட்டுமொத்த கேரள போலீஸ் துறையில் பயன்பாட்டில் இருக்கும் ஃபோர்ஸ் குர்கா வாகனங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. ஒரு போலீஸ் துறையே நம்பி வாங்குகிறது எனும்போது குர்கா எந்த அளவிற்கு பிரபலமான தார் வாகனத்திற்கு போட்டியாக உள்ளது என்பதை அறியலாம். ஆனால் மஹிந்திரா தாரில் வழங்கப்படுவது போன்று இல்லாமல், குர்காவில் வெறும் ஒரேயொரு என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இந்த வகையில், குர்கா எஸ்யூவியில் பொருத்தப்படும் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 91 எச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதன் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. தார் வாகனத்தை போன்று முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட இந்த ஃபோர்ஸ் வாகனத்தில் என்ஜினின் இயக்க ஆற்றல் ஆனது ஒரே நேரத்தில் அனைத்து 4 சக்கரங்களுக்கும் (4x4) செல்கிறது.

4x4 ட்ரைவ் சிஸ்டம் இருப்பது உண்மையில் குர்காவின் மதிப்பை கூட்டுகிறது. ஏனெனில் வாகனத்தின் இந்த பண்பானது ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது. அதாவது, எந்தவொரு சாலைக்கும், சாலை இல்லாத பகுதிகளுக்கும் கூட இந்த எஸ்யூவி வாகனத்தை கொண்டு செல்லலாம். இதற்கேற்ப தரையில் இருந்து வாகனம் நன்கு உயரமாக தயாரிக்கப்படுகிறது.
இதனாலேயே கேரள போலீஸார் தைரியமாக 10 ஃபோர்ஸ் குர்கா வாகனங்களை ஒரே நேரத்தில் தங்களது ரோந்து பணிகளுக்காக டெலிவிரி எடுத்துள்ளனர். அனைத்து வசதிகளும் நிறைந்த ஃபோர்ஸ் குர்கா வாகனம் ஒன்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.14.75 லட்சமாக உள்ளது. மஹிந்திரா தார் விரைவில் 5-கதவு வெர்சனிலும் அறிமுகமாக உள்ளதினால், குர்காவையும் 5 கதவுகளுடன் அறிமுகம் செய்யும் திட்டத்தில் ஃபோர்ஸ் நிறுவனம் உள்ளது.


Click it and Unblock the Notifications








