மாருதி எர்டிகாவுக்கு டஃப் கொடுக்கும் கியா கேரன்ஸ்... புதிய வேரியண்ட் அறிமுகம் - அடேங்கப்பா விலை இவ்வளவா!!
கியா கேரன்ஸ் எம்பிவி (Kia Carens MPV) காரில் புதிய விலைமிக்க டாப் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய கேரன்ஸ் காரின் விலை உள்பட காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவில் விலை குறைவான கியா காராக கேரன்ஸ் எம்பிவி விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. மாருதி சுஸுகி எர்டிகா என சந்தையில் பிரபலமான எம்பிவி காரின் போட்டியை எதிர்கொண்டு வரும் கேரன்ஸின் பலத்தை கூட்டும் வகையில் புதிய டாப் வேரியண்ட்டை கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டின் பெயர், லக்சரி (ஆப்ஷ்னல்) ஆகும்.

இந்த வேரியண்ட்டின் பெயரில் உள்ள ஆப்ஷ்னல் என்பது, இந்த வேரியண்ட்டில் சில கூடுதல் வசதிகள் ஆப்ஷ்னலாக வழங்கப்படும் என்பதை குறிக்கிறது. இந்த கூடுதல் வசதிகளை தேர்வு செய்வதும், செய்யாததும் வாடிக்கையாளர்களின் விருப்பம். இந்த கூடுதல் வசதிகளை காரின் மற்ற வேரியண்ட்களை வாங்கும் வாடிக்கையாளர்களால் பெற இயலாது. கியா கேரன்ஸின் புதிய லக்சரி (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17 லட்சத்தில் இருந்து ரூ.17.70 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நடப்பு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளினால் கடந்த மார்ச் மாத இறுதியில்தான் கியா நிறுவனம் கேரன்ஸ் எம்பிவி காரை சற்று புதிய தோற்றத்திற்கு அப்டேட் செய்து, ரியல்-டிரைவ்-எமிஷனுக்கு இணக்கமான என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது புதிய டாப் வேரியண்ட் இந்த காரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேரன்ஸின் டாப் வேரியண்ட்களான லக்சரி மற்றும் லக்சரி பிளஸ் வேரியண்ட்களுக்கு மத்தியில் இந்த புதிய லக்சரி (ஆப்ஷ்னல்) வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் லக்சரி வேரியண்ட்டில் கிடைக்காத சன்ரூஃப், டிரைவ் மோடுக்கு ஏற்ப மாறும் கேபின் விளக்குகளை புதிய வேரியண்ட்டில் பெறலாம். ஆனால் புதிய லக்சரி (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டை 7 இருக்கைகள் உடன் மட்டுமே பெற முடியும். அதுவே, லக்சரி வேரியண்ட்டை 6 அல்லது 7 இருக்கைகளுடன் பெறலாம்.

மறுப்பக்கம், லக்சரி பிளஸ் வேரியண்ட்டில் கிடைக்கும் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் வெண்டிலேட்டட் முன் இருக்கைகளை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய வேரியண்ட்டில் பெற இயலாது. பாதுகாப்பு அம்சங்களாக புதிய கேரன்ஸ் லக்சரி (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில்-ஸ்டார்ட் உதவி உள்ளிட்டவற்றை பெறலாம்.
கேரன்ஸின் இந்த புதிய டாப் வேரியண்ட்டில் 1.5 லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது. சமீபத்திய ரியல்-டிரைவ்-எமிஷனுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 160 எச்பி மற்றும் 253 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. கேரன்ஸில் மேனுவல் கியர்பாக்ஸுக்கு பதிலாக இண்டெலிஜண்ட் மேனுவல் கியர்பாக்ஸை கியா அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த புதிய லக்சரி (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டை ஆட்டோமேட்டிக் தேர்வில் மட்டுமே பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
இவ்வாறான புதிய டாப் வேரியண்ட்கள் மூலமாக மாருதி சுஸுகி எர்டிகாவுடன் மட்டுமின்றி, விலைமிக்க மாருதி சுஸுகி காரான எக்ஸ்.எல்6 -க்கும் கியா கேரன்ஸ் சவாலாக விளங்குகிறது. அதாவது, ஒரே கல்லில் 2 மாங்காயை அடிக்க கியா தயாராகி உள்ளது. மாருதி சுஸுகியை சமாளிக்குமா அல்லது அதன்முன் கீழ்பணியுமா கியா என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








