பிரியறதுக்கு மனசே இல்ல! நம்ம எல்லாருக்கும் பிடிச்ச காரை இனி பாக்க கூட முடியாதா! திடீர்னு இப்படி பண்ணீட்டாங்களே
இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). இதற்கு கியா கார்னிவல் (Kia Carnival) மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
பிரம்மாண்டமான தோற்றம், சொகுசான கேபின் மற்றும் பிரீமியமான வசதிகள் என கியா கார்னிவல் கார் அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவின்போதுதான், கியா கார்னிவல் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கியா கார்னிவல் காரில் பொருத்தப்பட்டிருந்தது, 2.2 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் (Diesel) இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3,800 ஆர்பிஎம்மில் 197 பிஹெச்பி பவரையும், 1,500-2,750 ஆர்பிஎம்மில் 440 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது.
இந்த இன்ஜினுடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து கார்னிவல் கார் தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் கியா கார்னிவல் காரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இது கியா கார்னிவல் காரின் ரசிகர்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கியா கார்னிவல் கார் தற்காலிகமாக மட்டுமே நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளது. கூடிய விரைவில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்து விடும். அதுவும் முற்றிலும் புத்தம் புதிய அவதாரத்தில்!
ஆம், 4வது தலைமுறை கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 4வது தலைமுறை கியா கார்னிவல் கார், வரும் 2024ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் 4வது தலைமுறை கியா கார்னிவல் காரில், 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 3.5 லிட்டர் GDi V6 பெட்ரோல் (Petrol), 3.5 லிட்டர் MPi V6 பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும்.
இந்த 3 இன்ஜின் ஆப்ஷன்களும் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கியா கார்னிவல் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை தவிர்த்து விட்டு, டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் குறைவான விலையை (Price) நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் தவிர்க்கப்பட்டு விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு வருகிறது என்பதால், பழைய மாடலை காட்டிலும், புதிய மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: திரைத்துறையில் 2வது மற்றும் 3வது நிலையில் உள்ள நடிகர், நடிகைகள், வளர்ந்து வரும் இளம் தொழில் அதிபர்கள் போன்றவர்களுக்கு 4வது தலைமுறை கியா கார்னிவல் ஏற்றதாக இருக்கும். பழைய மாடலுக்கு கிடைத்ததை காட்டிலும், புதிய மாடலுக்கு இந்தியாவில் உற்சாகமான வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








