8 லட்சம் கார்களை தயாரித்து கியா செய்த இமாலய சாதனை! இதை யாருமே எதிர்பார்க்கல!
கியா நிறுவனம் இந்தியாவில் துவங்கப்பட்டு மொத்தம் 8 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் கியா. இந்நிறுவனம் முதன் முறையாகக் கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவிற்குள் முதன் முறையாக தன் கார்களை அறிமுகப்படுத்தி விற்பனையைத் துவங்கியது. மிக குறுகிய காலத்திலேயே இந்நிறுவனம் மிகப்பெரிய அளவிலான விற்பனையைப் பெற்றுள்ளது. முதன் முதலாக செல்டோஸ் என்ற எஸ்யூவி காருடன் களம் இறங்கிய இந்நிறுவனம் அடுத்தடுத்து சோனட் என்ற சப் -காம்பேக்ஸ் எஸ்யூவி, கார்னிவெல், கேரன்ஸ் என்ற எம்பிவி கார்களை களம் இறக்கியது.

இது போக எலெக்ட்ரிக் செக்மெண்டில் இவி 6 காரையும் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் அதிகமாக கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் கியா நிறுவனமும் தனக்கென உரிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் கியா செல்டோஸ், சோனட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்கள் மார்கெட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு கியா நிறுவனம் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கியா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் மொத்த 2.54 லட்சம் கார்களை இந்தியச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் துவங்கப்பட்ட போதே சிறப்பான விற்பனை நடைபெற்றது. முதல் ஆண்டே 1 லட்சம் செல்டோஸ் கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்தது.
இது போக கியா நிறுவனம் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 82 ஆயிரம் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் கியா நிறுவனம் இந்தியாவில் அதிகமான யூவி வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது. கியா நிறுவனம் தனது தொழிற்சாலையை ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் நிறுவியுள்ளது. இந்த ஆலையில் ஆண்டிற்கு 3 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டது.
இந்த ஆலை துவங்கப்பட்டது முதல் இந்நிறுவனம் மொத்தம் 6.22 லட்சம் கார்களை உள்நாட்டிலும், 1.78 லட்சம் கார்களை வெளிநாட்டிற்கும் தயாரித்து விற்பனை செய்துள்ளது. ஆக மொத்தம் 8 லட்சம் கார்கள் இந்த ஆலையில் தயாராகி விற்பனையாகியுள்ளது. சுமார் 3 ஆண்டுகளில் இந்நிறுவனம் 8 லட்சம் கார்களை விற்பனை செய்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்நிறுவனம் இப்படி ஒரு வளர்ச்சியை அடைந்துள்ளது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








