அம்பானியோட வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டோமானு யோசிப்பீங்க.. பணக்காரர்களின் வீடுகளை விஞ்சும் வசதிகளுடன் கியா இவி9!
இந்தியாவில் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகளையும், வருங்கால தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தின. அந்தவகையில், தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியாவும் அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது.
அதில் ஒன்றே இவி9 (EV9) ஆகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக எலெக்ட்ரிக் காராகும். முதல் பார்வையிலேயே இந்த கார், எஸ்யூவி கார் பிரியர்களையும், சொகுசு கார் காதலர்களையும் கவர்ந்துவிட்டது என கூறலாம். மேலும், அன்றைய நாளில் இருந்தே இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்களிடத்தில் தொற்றிக் கொண்டது.

இந்த நிலையிலேயே கியா இவி9-ன் உற்பத்தி மாடலை கியா உலக அளவில் வெளியீடு செய்தது. நிறுவனத்தின் இந்த செயல் எலெக்ட்ரிக் காரின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்தது. இதுபோதாதென தற்போது மேலும் சில மிக முக்கியமான விபரங்கள் புதிய கியா இவி9 குறித்து தற்போது வெளியாகி உள்ளன.
இந்த தகவல் ஒட்டுமொத்த கார் காதலர்களையும் வளைத்து போடும் வகையில் அமைந்திருக்கின்றது. அதாவது, இந்த எலெக்ட்ரிக் காரில் கியா நிறுவனம் ஓர் நட்சத்திர விடுதி அல்லது பெரும் பணக்காரரின் வீட்டிற்குள் நுழைந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவிற்கு சகல வசதிகளையும் தாங்கியதாக இருக்கும் என்பதே தெரிய வந்திருக்கின்றது.

குறிப்பாக காரின் உட்பக்கம், கண்டிப்பாக பயணிகளை தன் வசம் வசியப்படுத்தும் என உறுதியாக கூறும் வகையில் அதன் வடிவமைப்பு உள்ளது. 30 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் காற்றோட்டத்தை உறுதி செய்யக் கூடிய வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் ஆகிய அம்சங்கள் இடம் பெற இருப்பதையே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உறுதி செய்திருக்கின்றன.
அதுவும், இந்த அம்சங்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்க இருக்கின்றது, கியா. அதாவது, இவி9-இன் அனைத்து வேரியண்டுகளிலும் இந்த அம்சங்கள் கட்டாயம் இடம் பெறும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இன்னும் பல நவீன கால அம்சங்களை இந்த காரில் காண முடியும்.

அந்த வகையில், டிஜிட்டல் வசதிகள் நிரம்பிய பெரிய திரை, அதிக சொகுசான இருக்கைகள், பயணிகளுக்கான ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள், பெரிய சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல்கள் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களும் புதிய கியா இவி9 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருக்கின்றன.
இதுதவிர பெரிய ஸ்டோரேஜ் வசதி, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், உடனடியாக கேபினை குளிர்விக்கும் திறன் கொண்ட ஏசி வெண்டுகள் போன்ற அம்சங்களும் இவி9 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருக்கின்றன. இதனைக் கடந்த காலங்களில் வெளியாக ஸ்பை படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

இதேபோல் வர்ணிக்க தூண்டும் வகையிலேயே கவர்ச்சியான வெளிப்புறத்தை கியா இவி9 பெற்றிருக்கின்றது. காரின் முன் பக்கம், பக்கவாட்டு மற்றும் பின் பக்கம், அத்துடன், டாப் பகுதி என அனைத்திலும் தனிக் கவனம் செலுத்தி கியா இந்த இவி9 எலெக்ட்ரிக் காரை உருவாக்கி இருக்கின்றது.
இந்த காரை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கொண்டு வர கியா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. லைட் ஆர்டபிள்யூடி, லைட் லாங் ரேஞ்ஜ் ஆர்டபிள்யூடி, வைண்ட் ஏடபிள்யூடி, லேண்ட் ஏடபிள்யூடி மற்றும் ஜிடி லைன் ஏடபிள்யூடி ஆகியவையே அந்த ட்ரிம்கள் ஆகும்.

இந்த அனைத்து வேரியண்டுகளிலும் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த ட்ரிம்களில் லைட் ஆர்டபிள்யூடி என்பதே ஆரம்ப நிலை தேர்வாக இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 358 கிமீ ரேஞ்ஜை பெற முடியும். இதற்காக இந்த எலெக்ட்ரிக் காரில் 76.1 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இதுதான் இந்த எலெக்ட்ரிக் உயர் ரேஞ்ஜ் திறன் என எண்ணிக் கொள்ள வேண்டாம். ஓர் முழு சார்ஜில் 482 கிமீ ரேஞ்ஜை தரும் தேர்வையும் கியா இந்த காரில் விற்பனைச் செய்ய இருக்கின்றது. உயர் நிலை தேர்விலேயே இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும். இதுபோல் வேரியண்ட்களுக்கு இடையே சிறப்பம்சங்கள் விசயத்தில் ஏற்றம்-தாழ்வு அதிகம் காணப்படுகின்றது.
அதேவேளையில், இதன் ஆரம்ப நிலை தேர்விலேயே சிறப்பம்சங்கள் வாரி வழங்கப்பட்டிருக்கும் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய அம்சங்களைக் கொண்டிருக்கும் கியா இவி9 எலெக்ட்ரிக் காரே வெகு விரைவில் உலக சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. முதலில் அமெரிக்காவிலும், இதைத்தொடர்ந்தே உலக நாடுகளிலும் அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.
இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு ரெஸ்பான்ஸ் மிக அதிகம். ஆகையால், கியா இவி9 எலெக்ட்ரிக் காரும் இந்தியாவிற்கு விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த காரை 100 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைச் செய்ய திட்டமிட்டு களமிறக்கியது. ஆனால், அதற்கு கிடைத்த அமோக வரவேற்பு தற்போது 1000 யூனிட்டுகள் விற்பனையை எட்டச் செய்யும் வகையில் அக்காரை விற்பனை செய்ய நிறுவனத்தை தூண்டி இருக்கின்றது. இதேபோல், சூப்பரான வரவேற்பே கியா இவி9 விற்பனைக்கு வந்தாலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









