தென்கொரியாவில் இருந்து வந்து இந்தியாவில் கார்களை விற்று தள்ளும் கியா!! அக்டோபரில் எத்தனை கார்களை விற்றுள்ளது?
கியா மோட்டார்ஸ் (Kia Motors) அதன் கார்களை மற்றொரு மாதமாக கடந்த அக்டோபரில் மிக அதிகப்படியான எண்ணிக்கையில் விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த மாதத்தில் கியா நிறுவனம் அப்படி எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது? கடந்த ஆண்டை விட அது எவ்வளவு அதிகம் என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
நவராத்திரி, தசரா உள்ளிட்ட பண்டிகை நாட்கள் இடம்பெற்ற கடந்த அக்டோபர் மாதத்தில் கியா நிறுவனம் மொத்தம் 24,351 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது 2022 அக்டோபரில் கியா இந்தியா நிறுவனம் விற்பனை செய்ததை விட 4.41% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 23,323 கார்களை மட்டுமே இந்த தென்கொரிய நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

அதேபோல் இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2023 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் 21.62% அதிகம். ஏனென்றால், கடந்த செப்டம்பரில் வெறும் 20,022 கார்களை மட்டுமே கியா விற்பனை செய்திருந்தது. கியா கார்கள் இந்த அளவிற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம், கடந்த மாதத்தில் வந்த பண்டிகை நாட்களாகும்.
அத்துடன், இந்தியாவில் பிரபலமான செல்டோஸ் காரையும் சமீபத்தில்தான் கியா நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்திருந்தது. கியா பிராண்டின் கீழ் இந்தியாவில் செல்டோஸ், சொனெட், கேரன்ஸ் மற்றும் இவி6 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நான்கில் எப்போதும் அதிகமாக விற்பனையாகுவது செல்டோஸ் ஆகும். இந்தியாவில் கியா அறிமுகப்படுத்திய முதல் கார் செல்டோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபரில், மொத்தம் 12,362 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் வெறும் 9,777 கார்களை மட்டுமே கியா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் செல்டோஸ் கார்களின் விற்பனை 26.44% அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 2023 செப்டம்பர் மாதத்திலும் 10,558 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் 1,804 செல்டோஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் கியா நிறுவனத்தில் செல்டோஸ் கார்களின் விற்பனை பங்கு 50.77% ஆகும். அதாவது, கியா பிராண்டில் 2இல் ஒருவர் செல்டோஸ் காரை தேர்வு செய்கின்றனர். கியா செல்டோஸ் கார் கடந்த 2023 ஜூன் மாதத்தில் அப்டேட் செய்யபட்டது. அப்போதில் இருந்து இந்த காரின் விற்பனை டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கிறது.

செல்டோஸிற்கு அடுத்து 2வது இடத்தில் சொனெட் உள்ளது. கடந்த மாத சொனெட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 6,493 ஆகும். ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் 7,614 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த 2023 செப்டம்பரில் ஏறக்குறைய 5 ஆயிரம் சொனெட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 3வது இடத்தில் உள்ள கேரன்ஸ் 5,355 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவி6 எலக்ட்ரிக் கார் 141 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகை காலத்தினால் மற்ற கார் நிறுவனங்களை போல் கியாவின் விற்பனையும் அதிகரித்திருப்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக, செல்டோஸ் காரின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதேநேரம் சொனெட் கார்களை குறைவான வாடிக்கையாளர்களே தேர்வு செய்வதும் இதன் மூலம் தெரியவருகிறது. அதாவது, சொனெட்டை வாங்க திட்டமிட்டவர்கள் அதன்பின் செல்டோஸின் பக்கம் சென்று விடுகின்றனர் போல.


Click it and Unblock the Notifications









