கியா கார் ஓனர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! கேரன்ஸ் காரில் இப்படி ஒரு பிரச்சனை இருக்குதாம்.
கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த 30 ஆயிரம் கேரன்ஸ் கார்களை சாப்ட்வேர் அப்டேட்டிற்க்காக திரும்ப அழைத்துள்ளது. இந்த கார் அறிமுகமான பின்பு இரண்டாவது முறையாகத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. ஏன் திரும்ப அழைக்கப்பட்டது? என்ன பிரச்சனை இருக்கிறது? இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் மூன்றாவதாக அதிகமாக விற்பனையாகும் கார் என்றால் அது கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் தான். இந்த கார் மூன்று வரிசை சீட்டர் கொண்ட ஒரு யூட்லிட்டி ரக வாகனமாகும். இந்த காரின் வடிவமைப்பு மற்றும் அம்சங்களைப் பார்த்து ஏகப்பட்ட மக்கள் இந்த காரை வாங்கி வருகின்றனர் .இதனால் இந்த கார் சிறப்பான விற்பனையில் இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்த காரின் பிஎஸ் 6 இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டிற்கு தகுந்தாற்போல் இன்ஜின் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் கியா நிறுவனம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் முதல் 2023 பிப்ரவரி மாதம் வரை தயாரித்த மொத்தம் 30,297 கேரன்ஸ் கார்களை திரும்ப அழைத்துள்ளது.
இந்த முறை திரும்ப அழைத்ததற்காக அந்நிறுவனம் கூறும் காரணம் குறிப்பிட்ட கார்களில் கிளஸ்டர் பூட்டிங்கில் பிரச்சனை இருக்கிறதா என செக் செய்வதற்காகத் திரும்ப அழைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கிளஸ்டர் பூட் ஆகும் போது சில நேரம் அது பிளாங்காக இருப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த திரும்ப அழைக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இரண்டாவது முறையாக கியா கேரன்ஸ் கார் திரும்ப அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு முறை அந்நிறுவனத்தின் சர்வதேச தரத்திற்கு ஏற்றார் போல் காரில் உள்ள சில பாகங்களை டெஸ்ட் செய்ய அழைப்பதாகத் தெரிவித்திருந்தது. தற்போது இரண்டாவது முறையாக சாப்ட்வேரை டெஸ்ட் செய்ய திரும்ப அழைத்துள்ளது.
ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் முதன் முறையாகத் திரும்ப அழைத்த போது வெறும் 4000 கார்களை மட்டுமே திரும்ப அழைத்தது. தற்போது 30 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை திரும்ப அழைத்துள்ளது. திரும்ப அழைக்கப்பட்ட கார்கள் எல்லாம் சாஃப்ட்வேரில் பிரச்சனை இருக்கும் என அர்த்தமில்லை பிரச்சனை இருக்கிறதா என டெஸ்ட் செய்யவே திரும்ப அழைத்துள்ளது.

கியா நிறுவனம் தனது கேரன்ஸ் கார் இன்ஜினை இ20 ரக பெட்ரோலை ஏற்றுக் கொள்ளும் இன்ஜினாக வடிவமைத்துள்ளது. இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டிஜி டிஐ மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் மட்டும் 6 ஸ்பீடு ஐஎம்டி கியர் பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கிறது.
கியா நிறுவனம் தனது 1.5 லிட்டர் டீசல் இன்ஜினையும் அப்டேட் செய்துள்ளது. இந்த இன்ஜின் தற்போது 104 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் கியா கேரன்ஸ் காரும் ஒன்று. கடந்த மே மாதம் மட்டும் 4612 கார்கள் விற்பனை ஆகி உள்ளது
கடந்த ஏப்ரல் மாதம் கியா நிறுவனம் இந்த கேரன்ஸ் காரில் ஒரு சொகுசு வேரியன்டை அறிமுகப்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் உடன் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கியா கேரன்ஸ் கார் ரூ 10.45 லட்சம் என்ற விலையில் துவங்கி ரூ 18.45 லட்சம் என்ற விலை வரை விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா கார்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் இப்படியான திரும்ப அழைக்கும் அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை தரலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் இது ஒரு ரெகுலர் செக்கப் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது காருக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாது.


Click it and Unblock the Notifications









