ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா செல்டோஸின் விலை இவ்ளோதானா!! எல்லாரும் கிரெட்டாவை மறக்கபோறது உறுதிங்க!
கியா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் செல்டோஸ்-ம் ஒன்று. இந்தியாவில் இந்த நிறுவனம் கால் தடம் பதித்த பின்னர் விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட முதல் கார் மாடலும் இதுவேதான். சொல்லப்போனால் கியா நிறுவனத்திற்கு இந்தியாவில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த கார் மாடலே செல்டோஸ்தான்.
இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே அந்நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த காருக்கு அறிமுக விலையாக 10 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இதன் உயர்நிலை தேர்வு ரூ. 19.30 லட்சத்திற்கு விற்கப்பட இருக்கின்றது. இந்த கார் மாடலில் எக்ஸ்-லைன் எனும் சிறப்பு பதிப்பும் விற்பனைக்குக் கிடைக்கும். அது தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் செல்டோஸின் உயர்நிலை தேர்வைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் அதிக விலையைக் கொண்டதாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
கூடுதல் அலங்காரப் பொருட்களைக் கொண்டிருக்கின்ற காரணத்திற்காகவே அதன் விலை சற்று அதிகமாக உள்ளது. ரூ. 20 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே செல்டோஸ் எக்ஸ்-லைன் விற்பனைக்குக் கிடைக்கும். புதிய ஃபேஸ்லிஃப்ட் கியா செல்டோஸ் காருக்கான புக்கிங்குகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்போதைய செல்டோஸ் கார் உரிமையாளர்களை ஈர்க்கும் விதமாக 'கே கோடு' எனும் திட்டத்தைக்கூட நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கே கோடு வாயிலாக புதிய செல்டோஸை புக் செய்யும் கஸ்டமர்களுக்கு புக்கிங் மற்றும் டெலிவரியில் முன்னுரிமை அளிக்கப்படும் என கியா தெரிவித்து இருக்கின்றது.
மேலும், இந்த காருக்கு புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ஆயிரக் கணக்கான புக்கிங்குகள் குவிந்திருக்கின்றன. கடந்த 14 ஆம் தேதி அன்றே ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட செல்டோஸ்க்கான முன் பதிவுகள் இந்தியாவில் தொடங்கின. இந்த முதல் நாளிலேயே 13,424க்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன.

கே கோடு திட்டத்தின்கீழ் 1,973 புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன. கியா செல்டோஸ் கார் உரிமையாளர்கள் புதிய செல்டோஸ்க்கு அப்கிரேட் ஆகும் விதமாக இந்த அளவு புக்கிங்கை வழங்கி இருக்கின்றனர். ரூ. 25 ஆயிரம் முன்தொகையில் முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. புதிய ஃபேஸ்லிஃப்ட் கியா செல்டோஸ் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒற்றை டீசல் மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இதுதவிர, டெக் லைன், ஜிடி லைன் மற்றும் எக்ஸ்-லைன் ஆகிய பதிப்புகளிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். புதுப்பித்தலின்கீழ் செல்டோஸில் சில புதுமுக அம்சங்களை கியா சேர்த்திருக்கின்றது. குறிப்பாக, லெவல்-2 அடாஸ் அம்சம் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
இந்த வசதியை உயர்நிலை தேர்வுகளில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், புதிய பம்பர், பெரிய கிரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லைட் பகல் நேரத்தில் ஒளிரும் டை டைம் லைட்டுடன் என பல்வேறு அம்சங்கள் புதிதாக புதிய செல்டோஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதில், பகல் நேரத்திலும் ஒளிரும் வகையில் வழங்கப்பட்டு இருக்கும் அந்த லைட் காரின் முன் பக்க இரு முனைகளையம் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இது காரின் முகப்பு பகுதிக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுதவிர இந்த காரின் அழகுக்காக இன்னும் பல கவர்ச்சிகரமான கூறுகளை அது பயன்படுத்தி இருக்கின்றது.
இதனால்தான் இது ஹூண்டாய் கிரெட்டாவிற்கு மிகப் பெரிய போட்டியாக இருக்கப் போகின்றது என நாங்கள் கருதுகின்றோம். இந்த காரின் வெளிப்புறத்தில் மட்டுமல்ல உட்புறத்திலும் சில மாற்றங்களை கியா செய்திருக்கின்றது. அந்தவகையில், 10.25 அங்குல இணைப்பு வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதன் சென்டர் கன்சோலும் லேசாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஏசி வெண்ட்டுகளை மிகவும் சிறியதாகவும், புதிய எச்விஏசி கன்ட்ரோல்களையும் இந்த காரில் கியா சேர்த்து இருக்கின்றது. இதுதவிர, கூடுதலாக சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் கேபினின் பல்வேறு பகுதியில் கியா சேர்த்து இருக்கின்றது. இதில், வித்தியாசமான நிற தேர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இவற்றுடனேயே மிக முக்கியமான அம்சமாக அடாஸ் அம்சத்தை கியா வழங்கி இருக்கின்றது. இந்த நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக அவசரகால ஆட்டோமேட்டிக் பிரேக்கிங், ஃபார்வார்டு கொலிசன் வார்னிங் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட் என பல பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, கூடுதல் பாதுகாப்பை வழங்கும் விதமாக ஆறு ஏர் பேக்குகள், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டிபிஎம்எஸ் மற்றும் மும்முனை சீட் பெல்ட் என எக்கசக்க அம்சங்கள் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செல்டோஸ் காருக்கு கூடுதல் அங்கீகாரத்தைப் பெற்று தரும் விதமாகவே கியா நிறுவனம் தற்போது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட செல்டோஸை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதனால் வரும் நாட்களில் இந்த காரின் விற்பனை இன்னும் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது சுமார் 13 ஆயிரம் பேர் இக்காரை புக் செய்திருப்பது அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









