Kia Seltos புதிய அவதாரம் எடுக்குது! மாருதிக்கே பயத்தை காட்றாங்க! இந்த வசதிலாம் வேற குடுக்க போறாங்களா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களின் வருகையால், இந்த செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்துள்ளது.
எனவே கியா நிறுவனம் செல்டோஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுட்டு வருகிறது. அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டின் மத்தியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பார்த்தால் வரும் ஜூலை மாதத்தில், கியாசெல்டோஸ் காரின் புதிய மாடல் விற்பனைக்கு வரலாம்.

இந்த புதிய மாடல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. டிசைனை பொறுத்தவரையில், புதிதாக டிசைன் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகளுடன் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பக்கவாட்டு பகுதி அனேகமாக தற்போது விற்பனையில் உள்ள மாடலை போன்றேதான் இருக்கும் என கூறப்படுகிறது.
இருப்பினும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் பின் பகுதியில் ஏராளமான டிசைன் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர தற்போது வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொழில்நுட்ப அம்சத்தை இந்த புதிய மாடல் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த அடாஸ் தொகுப்பில், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹை பீம், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றிருக்கும். இதுதவிர 6 ஏர்பேக்குகள், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் இந்த புதிய மாடல் பெற்றிருக்கலாம்.
அத்துடன் புதிய 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் இந்த புதிய மாடலில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யுவோ கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பாஸ் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் இருக்கைகள் ஆகிய வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரையில், 115 பிஎஸ் பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 160 பிஎஸ் பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 115 பிஎஸ் பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மேற்கண்ட மாருதி, டொயோட்டா மாடல்கள் மட்டுமல்லாது, ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுக்கும் கியா செல்டோஸ் காரின் புதிய மாடல் மிக கடுமையான சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், கியா செல்டோஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலின் வருகை அவசியமான ஒன்றுதான். கியா நிறுவனம் செல்டோஸ் காரை தொடர்ந்து, கியா கேரன்ஸ் (Kia Carens) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) கார்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்களையும் களமிறக்கவுள்ளது. இந்த 3 புதிய மாடல்களும் நடப்பாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வந்து விடும்.


Click it and Unblock the Notifications








