விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் கியா! மாஸ்டர் பிளானை கேட்டதும் கதிகலங்கி போன போட்டி நிறுவனங்கள்!
தென் கொரியாவை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). இது ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு செல்டோஸ் (Seltos) காரின் மூலமாக கியா நிறுவனம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது.
தற்போதைய நிலையில் ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் கியா நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் மேலும் ஒரு புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதாக கியா நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. இது எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை ஆகும்.

இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட போவதில்லை. கூடவே இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. கியா நிறுவனம் உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்காக மொத்தம் 8 தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதில் இந்தியாவில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலையும் ஒன்றாகும். அத்துடன் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கு என பிரத்யேகமான ஷோரூம்களை திறப்பதற்கும் கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் கியா நிறுவனத்திடம் இருந்து நிறைய எலெக்ட்ரிக் கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

கியா நிறுவனம் தற்போதைய நிலையில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் காரை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அது கியா இவி6 (Kia EV6) ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) 60.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 65.95 லட்ச ரூபாயாக இருக்கிறது.
தற்போதைய நிலையில் இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக முற்றிலும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் விலை அதிகமாக இருப்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம் ஆகும்.
ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டால், வரி பிரச்னைகள் இல்லாமல், ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும். எனவே கியா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து, எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கினால், விலை குறைவான தயாரிப்புகளை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்காக புதிய தொழிற்சாலையை கியா நிறுவனம் அமைக்கவிருப்பது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். இது இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதுடன், இந்தியர்களுக்கு விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களையும் பெற்று தரும்.


Click it and Unblock the Notifications








