எலெக்ட்ரிக் கார் மூலமா ஒரு மாசத்துக்கு இவ்ளோ காசை சேமிக்கலாமா! வயித்தெரிச்சலில் பெட்ரோல், டீசல் கார் ஓனர்கள்!
இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. தற்போதைய நிலையில் டாடா (Tata), மஹிந்திரா (Mahindra), ஹூண்டாய் (Hyundai), கியா (Kia) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளன.
இதுதவிர மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் ஆடி (Audi) போன்ற நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில் பல்வேறு நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களை ஒருவர் வைத்துள்ளார். அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

கேரளாவை சேர்ந்தவர் சுரேஷ். ஹை-டெக் என்ற பெயரில் இவர் நிறைய லேப்களை நடத்தி வருகிறார். இந்த தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவும், தனது சொந்த பயன்பாட்டிற்காகவும் மொத்தம் 12 எலெக்ட்ரிக் கார்களை சுரேஷ் வாங்கியுள்ளார். இதில், கியா இவி6 (Kia EV6), டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இதில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரை சுரேஷ் தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டுள்ளார். எஞ்சிய 11 எலெக்ட்ரிக் கார்களும் அவரது லேப் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிப்பது உள்ளிட்ட வேலைகளுக்கு இந்த 11 எலெக்ட்ரிக் கார்களும் பயன்படுத்தப்படுகின்றன.

பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்கள் பணத்தை அதிக அளவில் சேமிக்க உதவி செய்வதாக சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் 6 லட்ச ரூபாய் சேமிப்பதாக சுரேஷ் கூறியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது எரிபொருள் செலவில் மிச்சம் பிடிக்கப்படும் தொகை ஆகும்.
இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயமாக உள்ளது. இதில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரை 20 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக ஓட்டியுள்ளதாக சுரேஷ் கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை ஒரு குறையை கூட கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், கியா இவி6 எலெக்ட்ரிக் காரை பெரிதும் நேசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு முறை முழுமையாக சார்ஜ் நிரப்பினால், கியா இவி6 எலெக்ட்ரிக் கார், நகர பகுதிகளில் சுமார் 450 கிலோ மீட்டர்கள் இயங்குகிறது என்பது சுரேஷின் கருத்து. பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகம்தான். எனவே அவற்றை வாங்கும்போது ஆரம்பத்தில் அதிக செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
ஆனால் பெட்ரோல், டீசல் நிரப்ப ஆகும் செலவு இல்லாதது மற்றும் பராமரிப்பு செலவுகள் குறைவு என்பதால், நாட்கள் ஆக ஆக எலெக்ட்ரிக் கார்கள் உங்கள் பணத்தை சேமிக்கும் எனவும் சுரேஷ் கூறியுள்ளார். எனவே எலெக்ட்ரிக் கார் வாங்குபவர்களை தான் ஊக்குவிப்பதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் கார்கள்தான் எதிர்காலம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. அரசாங்கமும் கூட பெட்ரோல், டீசல் கார்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிப்பதைதான் விரும்புகிறது. எனவே சுரேஷை போல், நாங்களும் எலெக்ட்ரிக் கார்கள் வாங்குவதை ஊக்குவிக்கிறோம்.
இந்தியாவில் முன்பெல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு பற்றாக்குறை இருந்து வந்தது. தற்போதும் இருக்கிறதுதான். ஆனால் முன்பு அளவிற்கு இல்லை. எனவே மக்கள் தயங்காமல் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம். ஆரம்பத்தில் இதற்காக நீங்கள் அதிகமாக செலவு செய்ய நேரிட்டாலும் கூட, எதிர்காலத்தில் உங்கள் பணம் சேமிக்கப்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications