திருமண ஊர்வலத்தில் ரூ12 கோடி மதிப்பிலான லம்போர்கினி கார்! எந்த ஊர்ல இது நடந்தது தெரியுமா?
ரூ12 கோடி மதிப்பிலான லம்போர்கினி காரை திருமண நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்திய சம்பவம் சமீபத்தில் பெங்களூருவில் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது பற்றி விரிவாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் திருமணங்கள் எல்லாம் ஆடம்பரமாகத் தான் நடக்கும். திருமணத்தை முடிந்த அளவிற்கு அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ப ஆடம்பரமாகச் செய்வார்கள். தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தனது மதிப்பை உயர்த்தவும், தங்களது பொருளாதார நிலையைக் காட்டும் இடமாகத் திருமணங்கள் இருக்கிறது.

அதிக செலவு என வந்துவிட்டால் சொகுசு கார்கள் இல்லாமல் இருக்குமா? திருமணங்களில் ஊர்வலங்களுக்கு கார்கள் அணிவகுப்பையே சிலர் நடத்துவார்கள். அதிக விலை மதிப்பு கொண்ட கார்கள் எல்லாம் ஊர்வலத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும். இப்படியாகத் தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஒரு திருமணத்தில் லாம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் இடம் பிடித்திருந்தது.
இந்த கார் திருமண நிகழ்வில் இடம் பெற்றது குறித்து SPOTTER INDIA CARS என்ற யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. பெங்களூரு பேலஸ் என்ற இடத்தில் நடந்த இந்த திருமணத்தில் இந்த லாம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் மட்டுமல்ல மசரட்டி, ரோல்ஸ் ராய்ஸ், ஆடி மற்றும் போர்ஷே ஆகிய கார்களும் முக்கியம் இடம் பிடித்திருந்தன.

லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே காரை பொருத்தவரை இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மிக அரிதான கார்களில் ஒன்று. லாம்போர்கினி நிறுவனம் வெறும் 900 அவென்டேடார் எஸ்விஜே காரை மட்டும் தான் தயாரித்தனர். தற்போது உலகம் முழுவதும் வெறும் 900 கார்தான் இருக்கிறது. அதில் இந்தியாவில் 3 கார்கள் தான் இருக்கிறது.
திருமண விழாவில் கடந்து கொண்ட அவென்டேடார் எஸ்விஜே காரை பொருத்தவரை ஆரஞ்சு நிற கார். இந்த கார் திருமண விழா ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக காரில் முன்பக்கம் பூக்கள் வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த கார் ஏகப்பட்ட கஸ்டமஸ்டு ஆப்ஷன்களுடன் விற்பனையாகிறது. அதனால் இந்த காரின் சரியான விலை காரின் உரிமையாளருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் இந்த வீடியோவை வெளியிட்டிருந்த யூடியூப் சேனல் இந்த காரின் விலை ரூ12 கோடி எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்த காரை அதன் உரிமையாளர் கடந்த 2019ம் ஆண்டு வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ12 கோடி மதிப்பிலான காரை திருமண ஊர்வலத்திற்குப் பயன்படுத்தியது பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்த காரில் பெயரில் உள்ள எஸ்விஜே என்பதன் விரிவாக்கம் Superveloce Jota இது இத்தாலிய மொழி சொல், இதன் ஆங்கில அர்த்தம் Super Fast. பெயருக்கு ஏற்றார் போல இந்த கார் மிக வேகமாகச் செல்லும் கார்களில் ஒன்று தான். இந்த காரில் 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்யர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 770 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த இன்ஜின் 7 ஸ்பீடு சிங்கிள் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2.8 நொடியில் பிக்கப் செய்து விடும். இது சாதாரண லம்போர்கினி அவென்டேடார் காரை விட 0.1 நொடி முன்னதாகவே 100 கி.மீ வேகத்தை பிக்கப் செய்துவிடுகிறது.
இந்த கார் அதிகபட்சமாக 349 கி.மீ வேகம் வரை தான் செல்ல வேண்டும் என எலெக்ரானிக் சாதனம் மூலம் ஸ்பீடு லிமிட் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட நிரியோ வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அது குறைவான எடையில் இருக்கிறது.
இதன் ரிம்கள் பைரலி பி ஜிரோ கோர்ஸா டயர்களை கொண்டுள்ளது. இந்த கார் திருமண விழாவில் பங்கேற்பது இது முதன் முறை அல்ல இதற்கு முன்னும் இந்த கார் திருமண விழாக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் திருமணத்திற்குப் பயன்படுத்தப்படும் காஸ்ட்லியான கார் இது தான்.
இந்த வீடியோவில் லம்போர்கினி எஸ்விஜே கார் மட்டுமல்ல லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி, காரும் இருக்கிறது. இந்தியாவில் பல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் இந்த காரை வாங்கி வருகின்றனர். இந்த கார் 4.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது.
இது அதிகபட்சமாக 650 பிஎஸ் பவரையும், 850எம்என் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு 4 வீல் டிரைவ் கார், இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.6 நொடியில் பிக்கப் செய்து விடும் அதிகபட்சமாக 305 கி.மீ வேகம் வரை இந்த கார் சீறிபாயும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் திருமணங்கள் ஒரு ஆடம்பரத்தின் அடையாளமாக மாறிப் போய்விட்டது. இன்று திருமணங்களில் கார்களுக்கும் ஒரு முக்கியமான இடம் கொடுக்கப்படுகிறது. கார்கள் அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் என மக்கள் நம்புகின்றனர். அதன் காரணமாகவே திருமணங்களில் சொகுசு கார்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.


Click it and Unblock the Notifications
