கோடீஸ்வரர்கள் ஒவ்வொருவரும் வாங்க போட்டி போடும் லம்போர்கினி கார் இதுதான்!! 2026 வரையில் விற்று தீர்ந்திடுச்சு!
லம்போர்கினி ரெவல்டோ (Lamborghini Revuelto) கார்கள் அனைத்தும் விற்று தீர்ந்ததாக லம்போர்கினி நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் வின்கெல்மன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு வரையில் தயாரிக்க திட்டமிடப்பட்ட ரெவல்டோ கார்கள் அனைத்தையும் உலகளவில் செல்வந்தர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்துள்ளனர்.
இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லம்போர்கினி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய ஸ்போர்ட்ஸ் காராக ரெவல்டோவை கடந்த மார்ச் மாத இறுதியில் சர்வதேச அளவில் வெளியீடு செய்தது. ரெவல்டோ, லம்போர்கினியின் முதல் பிளக்-இன் ஹைப்ரீட் கார். மேலும், லம்போர்கினி நிறுவனம் உருவாக்க நினைத்த கனவு வாகனமும் இதுதான்.

இதனாலோ என்னவோ... லம்போர்கினி ரெவல்டோ காரை உலகளவில் பல்வேறு கோடீஸ்வரர்கள் போட்டி போட்டு புக் செய்துள்ளனர். தற்போது வரையில் கிடைத்துள்ள முன்பதிவுகளுக்கு ரெவல்டோ காரை 2026ஆம் ஆண்டு வரையில் தயாரிக்க வேண்டியுள்ளது என லம்போர்கினி தெரிவித்துள்ளது. இதனால், இதன்பின் ரெவல்டோ காரை முன்பதிவு செய்பவர்கள் நிச்சயமாக 3 வருடங்கள் வரையில் டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டிவரும்.
ஏற்கனவே கூறியதுபோல், முதல் பிளக்-இன் ஹைப்ரீட் லம்போர்கினி காரான ரெவல்டோ, லம்போர்கினியின் பிரபலமான அவெண்டேடார் காரின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றை-துண்டு கார்பன் தொட்டியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள லம்போர்கினி ரெவல்டோ காரில் 6.5 லிட்டர், வி12 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக சுமார் 814 பிஎச்பி மற்றும் 725 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் மொத்தம் 3 எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. காரின் முன்பக்கத்தில் 2 மற்றும் பின்பக்கத்தில் ஒன்று ஆகும். இந்த எலக்ட்ரிக் மோட்டார்களின் உதவியுடன் இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 1,001 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம் என லம்போர்கினி நிறுவனம் கூறுகிறது.
0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய ரெவல்டோ காரின் டாப்-ஸ்பீடு 350kmph ஆகும். இந்த பிளக்-இன் ஹைப்ரீட் காரின் எலக்ட்ரிக் மோட்டார்கள் செயல்படுவதற்கு 3.8kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் சார்ஜில் மட்டும் (எரிபொருள் இல்லாமல்) கிட்டத்தட்ட 10கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்லலாம். பேட்டரியை சார்ஜ் செய்யும் பகுதி காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரியை சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஏனெனில் காரின் வி12 என்ஜின், பின்பக்கத்தில் வழங்கப்படும் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் பேட்டரியின் சார்ஜை நிரப்பும் என லம்போர்கினி நிறுவனம் கூறுகிறது. இந்தியாவிலும் லம்போர்கினி ரெவல்டோ காரின் அறிமுகத்தை இந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் புதிய லம்போர்கினி ரெவல்டோ காரின் விலையாக ரூ.8 கோடி நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையே. ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடிகள் அதிகரிக்கலாம். அதுமட்டுமின்றி, இவ்வாறான விலையுயர்ந்த கார்களை வாடிக்கையாளர்கள் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசத்துடன் வாங்க வேண்டும் என நினைப்பர். அவ்வாறு, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்தால் அதற்கு இன்னும் சில கோடிகள் செலவாகும். ஆக, இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வந்தால், ஏறக்குறைய ரூ.12 கோடி செலவழித்து வாடிக்கையாளர்கள் வாங்குவர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ரெவல்டோ காருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பதற்கு முக்கிய காரணம், லம்போர்கினியின் முதல் பிளக்-இன் ஹைப்ரீட் கார் என்ற அடையாளம் ஆகும். இதேபோன்று, லம்போர்கினியின் மற்ற பிரபலமான கார்களான ஹூராகென் மற்றும் உருஸ் மாடல்களின் பிளக்-இன் ஹைப்ரீட் வெர்சன்களையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









