Lamborghini Urus S கார் இந்தியாவில் அறிமுகம் - விலையை மட்டும் பார்க்காதீங்க... மயக்கமே வந்துவிடும்!!
லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரில் புதிய வெர்சன் உருஸ் எஸ் (Urus S) என்கிற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கு வந்திருக்கும் இந்த புதிய லம்போர்கினி காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
லம்போர்கினி கார்கள் உலகளவில் பிரபலமானவைகளாக உள்ளன. இதில் குறிப்பாக, உருஸ் எஸ்யூவி லம்போர்கினியின் மிக பெரிய வெற்றி மாடல் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், நமது இந்தியா போன்ற நாட்டிற்கும் லம்போர்கினி உருஸ் கார் ஏற்றதாக விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், உருஸின் கம்பீரமான, நிமிர்ந்த எஸ்யூவி ரக உடலமைப்பு ஆகும்.

இதனால் மற்ற லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்களை போல் இல்லாமல், உருஸ் நன்கு உயரத்தை கொண்டதாக உள்ளது. இத்தகைய காரை கூடுதல் ஸ்போர்டியான தோற்றத்தில் வழங்கும் பொருட்டே, புதிய உருஸ் எஸ் காரை இந்தியாவில் லம்போர்கினி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய லம்போர்கினி காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.4.18 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உருஸின் ஸ்போர்டியர் வெர்சன் என ஹைலைட் படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய உருஸ் எஸ் காரிலும் வழக்கமான 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 657 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ள இந்த வி8 என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் வழங்கும்.

வழக்கமான உருஸ் காருடன் ஒப்பிடுகையில் புதிய உருஸ் எஸ் காரின் எடை 47 கிலோ அதிகமாகும். புதிய உருஸ் எஸ் காரின் மொத்த எடை 2,197 கிலோகிராம் ஆகும். எடை அதிகமாகியுள்ளதால், உருஸ் காரை விட சிறந்த செயல்படுதிறனை உருஸ் எஸ் காரில் எதிர்பார்க்க முடியாது. 0-வில் 100kmph வேகத்தை புதிய உருஸ் எஸ் கார் குறைந்தப்பட்சமாக வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த வேகத்தை ஸ்டாண்டர்ட் உருஸ் காரில் சற்று விரைவாக 3.3 வினாடிகளிலேயே எட்டிவிடலாம்.
0-வில் இருந்து 200kmph வேகத்தை எட்ட குறைந்தது இந்த காரில் 12.5 வினாடிகள் தேவைப்படும். புதிய உருஸ் எஸ் காரின் டாப்-ஸ்பீடு 305kmph ஆகும். புதிய உருஸ் எஸ் கார் 5,112மிமீ நீளம் கொண்டது, 2,018மிமீ அகலம் கொண்டது மற்றும் 1,638மிமீ உயரம் கொண்டது. இந்த எஸ்யூவி காரில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 3,003மிமீ ஆகும். வழக்கமான உருஸ் காரை போன்று, புதிய உருஸ் எஸ் காரிலும் ஸ்ட்ராடா, ஸ்போர்ட், கோர்ஸா, ஈகோ, டெர்ரா, நெவே & சாப்பியா என 7 டிரைவிங் மோட்களை பெறலாம்.

ஏற்கனவே கூறியதுபோல், தோற்றத்தில்தான் புதிய உருஸ் எஸ் வித்தியாசப்படுகிறது. குறிப்பாக, முன் பம்பர் முற்றிலும் புதியதாக உருஸ் எஸ் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 21 இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. காரை வாங்கு வாடிக்கையாளர்கள் இதனை 22 மற்றும் 23 இன்ச்களாகவும் அதிகரித்து கொள்ள முடியும். உட்பக்கம் வழக்கத்தை காட்டிலும் புதிய உருஸ் எஸ் காரில் லக்சரி தோற்றத்தில் காட்சியளிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
உருஸ் காருடன் ஒப்பிடுகையில், புதிய உருஸ் எஸ் தினசரி பயன்பாட்டிற்கான கார் ஆகும். அதாவது, இந்த புதிய உருஸ் காரில் மைலேஜ் அதிகமாக கிடைக்கும் என்பது மட்டுமின்றி, பராமரிப்பு செலவுகளும் குறைவாக இருக்கும். ஆனால் இதற்கேற்ப அதி செயல்திறனை இந்த காரில் எதிர்பார்க்க இயலாது. அத்தகைய செயல்படுதிறனை கூடுதலாக எதிர்பார்ப்போர் வழக்கமான லம்போர்கினி உருஸ் காரை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications









