Ventilated Seat கொண்ட விலை குறைவான கார்களின் லிஸ்ட்... வெயிலை சமாளிக்க ஏசி மட்டுமல்ல இதுவும் தேவை!!
எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் இந்த வருடம் இந்தியாவை வாட்டி வதைக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்போதே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் சதம் அடித்துக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் அதிகபட்சமாக 8 இடங்களில் இதுவரை வெயில் சதம் அடித்திருக்கின்றது.
குறிப்பாக, சேலம், கரூர் மற்றும் பரமத்தி ஆகிய பகுதிகளில் 102.2 டிகிரி பாரன் ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், வேலூர், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமான வெயில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபோன்று பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெறித்துக் கொண்டிருப்பதனால் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்திடுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும், சிலர் தங்களின் பணி காரணமாக வாகனங்களில் பயணித்த வண்ணம் இருக்கின்றனர். இதுபோன்ற பயணங்களை அசால்டாக கையாள்வதற்காக நவீன கார்களில் சில முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த அம்சங்களில் முதன்மையானதாக ஏர் வென்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கைகள் இருக்கின்றன. இந்த இருக்கையைக் கொண்ட விலைக் குறைவான கார் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வெயில் எந்த அளவு சுட்டெறித்தாலும் அதை பற்றி துளியளவும் கவலை இல்லாமல் பயணிக்க இந்த இருக்கை உதவும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா நெக்ஸான்: இந்தியாவின் மிக சிறந்த பாதுகாப்பு வசதிக் கொண்ட கார் மாடலாக நெக்ஸான் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவில் இந்த கார் ஐசிஇ (எரிபொருள் எஞ்ஜின்) மற்றும் எலெக்ட்ரிக் என இரு விதமான வெர்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த மாடலின் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் வேரியண்டிலேயே வெயில் போன்ற உஷ்மான சூழலைச் சமாளிக்க உதவும் ஏர் வென்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இது முதுகு பக்கத்திற்கு தேவையான காற்றோட்டத்தை கடத்தி பயணிகளை மிகுந்த புத்துணர்வுடன் பயணிக்க உதவியாக இருக்கும்.
இந்த தேர்வின் விலை ரூ. 11.60 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா நெக்ஸான் எஸ்யூவி ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனம் ஆகும். இந்த வாகனத்திற்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில்தான் இதன் 5 லட்சமாவது யூனிட்டை விற்பனைக்காக டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வெளியேற்றியது.

கியா சொனெட்: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எஸ்யூவி-க்கு போட்டியாக விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்று. ஆகையால், நெக்ஸானுக்கு போட்டியளிக்கும் விதமாக பல்வேறு சிறப்பம்சங்களை கியா இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றன. அதில், ஒன்றே, வென்டிலேஷன் இருக்கை அம்சம்.
இந்த அம்சத்தை சொனெட்டின் எச்டிஎக்ஸ் பிளஸ் டர்போ ஐஎம்டி தேர்விலேயே கியா வழங்கி இருக்கின்றது. இந்த தேர்வின் விலை ரூ. 12.75 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. கியாவின் செல்டோஸ் கார் மாடலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கியா தயாரிப்பாக சொனெட் இருக்கின்றது. இந்த காரில் வென்டிலேட் இருக்கை மட்டுமின்றி இன்னும் பலதரப்பட்ட பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: மாருதி சுஸுகியின் எர்டிகா காரை தழுவி உருவாக்கப்பட்ட 6 சீட்டர் காரே இதுவாகும். இந்த காரில் பிரீமியம் அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. பிரீமியம் காரை விரும்புவோர்களை ஈர்க்கும் பொருட்டே இந்த மாடலை நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
வென்டிலேட் இருக்கையும் எக்ஸ்எல்6-இல் வழங்கப்பட்டிருக்கும் ஓர் முக்கியமான அம்சமாகும். இதனை ஆல்ஃபா பிளஸ் தேர்விலேயே மாருதி சுஸுகி வழங்குகின்றது. இதன் விலை ரூ. 13.05 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார் மாடல்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்றாகும். இதை எம்பிவி ரக காராக உருவாக்கி இருந்தாலும் அதிக ஸ்போர்ட்டியான ஸ்டைல் கொண்டதாக மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கின்றது.

ஹூண்டாய் வெர்னா: இந்தியாவில் வென்டிலேட் இருக்கை வசதிக் கொண்ட கார் மாடல்களில் இதுவும் ஒன்று. புதிய தலைமுறை வெர்னாவை மிக மிக சமீபத்திலேயே ஹூண்டாய் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முற்றிலும் புதிய ஸ்டைல் மற்றும் வசதிகளுடன் இந்த காரை ஹூண்டாய் உருவாக்கி இருக்கின்றது.
வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்திலும் சிறப்பு வசதிகளை ஹூண்டாய் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், அதிக சிறப்புகளைக் கொண்ட தேர்வாக எஸ்எக்ஸ் (ஓ) இருக்கின்றது. இதிலேயே வெண்டிலேட் இருக்கை வசதியை ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இதன் விலை ரூ. 14.66 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஸ்கோடா ஸ்லேவியா: இந்தியாவின் அதிகம் பிரீமியம் வசதிகள் கொண்ட செடான் ரக காராக இது இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஸ்டைல் எனும் வேரியண்டிலேயே வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் விலை ரூ. 14.80 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலைக்கு ஏற்ப இன்னும் பல பிரீமியம் அம்சங்கள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
நல்ல ஏசி உள்ள வண்டியைப் போலவே ஏர் வென்டிலேஷன் இருக்கைக் கொண்ட கார்களும் இந்த சம்மரைச் சமாளிக்க ஏதுவானவை ஆகும். ஆகையால், இனிதான் காரை வாங்க போறீங்கனா இந்த அம்சம் கொண்ட காரை தாரளமாக வாங்கலாம். சற்று அதிகம் விலைக் கொண்டதாக இந்த ரக கார்கள் இருந்தாலும், நல்ல பயன்பாட்டை வழங்கக் கூடியதாக அவை இருக்கும்.


Click it and Unblock the Notifications









