மரத்தால் தயார் செய்யப்பட்ட காருக்கு இவ்ளோ கிராக்கியா... 1.86 கோடி ரூபா கொடுத்து வாங்கி இருக்காங்க...
மரத்தால் தயார் செய்யப்பட்ட காரை ஓர் நபர் 1.86 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி அந்த காரில் உள்ள ஸ்பெஷல் என்ன? ஏன் இந்த அளவு தொகைக்கு அது வாங்கப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பல கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. சொல்லப்போனால் இப்போது எல்லாம் அது சர்வசாதாரணமானதாக மாறிவிட்டது. சின்ன சின்ன நடிகர்கள் தொடங்கி சின்னதா பிசினஸ் செய்யும் தொழிலதிபர்கள் வரை கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களில் அசால்டாக வாங்கத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் நாம் இப்போது பார்க்க இருக்கும் சம்பவம் சற்று புதுமையானது. ஓர் நபர் 1.86 கோடி ரூபாயைக் கொடுத்து மரத்தால் தயார் செய்யப்பட்ட காரை வாங்கி இருக்கின்றார். ஆச்சரியமான சம்பவம் ஃபிரான்ஸிலேயே அரங்கேறி இருக்கின்றது. சாதாரணமாக கார்கள் ஃபைபர் அல்லது உலோகதத்தால் ஆன பாடிகளைக் கொண்டிருக்கும்.
ஆனால், இந்த காரின் மேல் பேனல்கள் அனைத்தும் மரத்தால் தயார் செய்யப்பட்டவை ஆகும். சிட்ரோன் 2சிவி காரின் மீது பயன்படுத்தப்பட்டு இருந்த அனைத்து வழக்கமான பேனல்களும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மரக்கட்டை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த காரையே ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் நபர் 2,10,000 யூரோக்களுக்கு ஏலத்தில் வாங்கி இருக்கின்றார்.

ஃபிரான்ஸ் கார் ஏல வரலாற்றிலேயே மிகப் பெரிய விலைக் கொண்ட ஏலம் இதுவாகும். ஆகையால், ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் இந்த ஏலம் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. 2சிவி காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அனைத்து மரக் கட்டைகளும் கைகளால் காருக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டவை ஆகும்.
இந்த காரை பாரிஸைச் சேர்ந்த பழங்கால கார் ஆர்வலர் ஜீன் பால் என்பவரே வாங்கி இருக்கின்றார். இவர் ஓர் அருங்காட்சிய உரிமையாளர் ஆவார். பழமையான பொருட்களின் அருங்காட்சியத்தையே அவர் நடத்தி வருகின்றார். இவர் இந்த காரை வாங்கியதன் காரணத்தினால், வரும் காலத்தில் மரத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அரிய வகை கார் மியூசியத்தில் காட்சிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2016ஆம் ஆண்டிலும் இதேபோல் ஓர் சிட்ரோன் 2சிவி கார் ஏலத்தில் விற்கப்பட்டது. இது 1961 ஆம் ஆண்டு மாடல் ஆகும். இது 1,72,800 யூரோக்களுக்கு ஏலம் போனது. இதுவே இதற்கு முன்னதாக ஃபிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய ஏலமாக பார்க்கப்பட்டது. ஆனால், இதனை புதிய மரத்தாலான 2சிவி காரின் ஏலம் வீழ்த்தி இருக்கின்றது.
புகழ்பெற்ற கார்பென்டர் மைக்கேல் ராபில்லர்ட் என்பவரின் கை வண்ணத்திலேயே இந்த மரத்தாலான கார் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. பேரிக்காய் மற்றும் ஆப்பிள் மரத்தின் கிளைகளைக் கொண்டே இந்த கார் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அதேநேரத்தில் செர்ரி மரத்தின் ஒற்றை மரத் துண்டை பான்னெட்டிற்காக அவர் பயன்படுத்தி இருக்கின்றார்.

சிஸில் மற்றும் உப்புக் காகிதத்தைக் கொண்டே அவர் மரத்தை காருக்கு ஏற்ற வடிவமைப்பை மரக்கட்டைகளில் வரவழைத்திருக்கின்றார். இந்த பணி முடிவடைவதற்கு ஒட்டுமொத்தமாக ஐந்து வருடங்கள் எடுத்திருக்கின்றது. இன்னும் துள்ளியமாக கூற வேண்டும் எனில் சுமார் 5 ஆயிரம் மணி நேரங்கள் செலவு செய்து இந்த காரை மரத்தாலான காராக மைக்கேல் தயார் செய்திருக்கின்றார்.
சிட்ரோன் நிறுவனம் 2சிவி கார் மாடலை முதன் முதலில் 1948லேயே அறிமுகம் செய்தது. இந்த அரிய வகை காரையே தன்னுடைய தனித்துவமான கை வண்ணத்தினால் மைக்கேல் மரத்தாலான காராக மாற்றி இருக்கின்றார். இவர் இந்த செயலுக்கு பெயர்போனவராக இருக்கின்றார். கடந்த காலங்களில் மரத்தினால் டம்மி கார் மற்றும் பைக்குகளை இவர் உருவாக்கி இருக்கின்றார்.
இந்த பணியில் அவர் தன்னுடைய 14 வயதில் இருந்தே ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மரத்தால் கார் மற்றும் பைக்குகளை உருவாக்கியதற்காக இவருக்கு கடந்த காலங்களில் பரிசுகள் எல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன. சிட்ரோன் நிறுவனம் விரைவில் தன்னுடைய 70 ஆம் ஆண்டு விழாவை கொண்டாட இருக்கின்றது. இந்த நிகழ்விற்குள் அந்நிறுவனத்தின் மற்றுமொரு கார் மாடலான டிஎஸ்-ஐ மரத்தினால் வடிவமைக்க மைக்கேல் திட்டமிட்டு இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒரு சில தயாரிப்புகள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் மலிவு விலை கார் மாடலாக சிட்ரோன் சி3 உள்ளது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை மின்சார வெர்ஷனிலும் வாங்கிக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









