40 ஆயிரம் கார்களை ஒரே மாதத்தில் விற்பனை செய்து மஹிந்திரா அசத்தல்!! இனி தொட்டது எல்லாம் வெற்றி தான்!
மஹிந்திரா ஆட்டோ (Mahindra Auto) நிறுவனம் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் மொத்தம் 70,576 வாகனங்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது. இதில் மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ஆகும். வாருங்கள், இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மஹிந்திரா & மஹிந்திரா, இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் என்றால் அதில் சந்தேகமே இல்லை. ஆரம்ப காலக்கட்டத்தில் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையில் பட்டையை கிளப்பி வந்த இந்த இந்தியன் ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த பல வருடங்களாக கார்கள் விற்பனையிலும் கஸ்டமர்கள் பலர் தேர்வு செய்யக்கூடிய நிறுவனமாக விளங்குகிறது.

சமீப காலமாக எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்துவரும் மஹிந்திரா, கடந்த 2023 நவம்பர் மாதத்தில் மொத்தம் 39,981 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை 30,238 மட்டுமே ஆகும். அதாவது, ஒரே வருடத்தில் மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை 9 ஆயிரம் அதிகரித்துள்ளது.
2022 நவம்பர் சமயத்தில் வேன் மாடல்களும் மஹிந்திரா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. 2022 நவம்பரில் 154 வேன்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. ஆனால், தற்சமயம் அவ்வாறான வேன்கள் எதுவும் மஹிந்திராவில் இருந்து விற்பனையில் இல்லை. ஆனால், கமர்ஷியல் வாகனங்களை வழக்கம்போல் பல்வேறு பிரிவுகளில் மஹிந்திரா விற்பனை செய்துக் கொண்டிருக்கிறது.

2 டன்களுக்கும் எடை குறைவான கமர்ஷியல் வாகனங்களை கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 4,083 யூனிட்கள் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஆனால் 2022 நவம்பரில் இதனை காட்டிலும் பாதியாக, இத்தகைய மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்களை வெறும் 2,643 யூனிட்கள் மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.
2 டன்களுக்கும், 3.5 டன்களுக்கும் இடைப்பட்ட எடையில் மொத்தம் 17,284 கமர்ஷியல் வாகனங்களை கடந்த மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இத்தகைய வாகனங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் 16,193 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 3.5 டன்களுக்கும் அதிகமான மஹிந்திரா கனரக வாகனங்கள் கடந்த மாதத்தில் 844 யூனிட்கள் விற்கப்பட்டு உள்ளன.

ஆனால், இந்த வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 2022 நவம்பரில் 755 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமின்றி, கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 6,568 மூன்று சக்கரங்களையும் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இதில் மஹிந்திராவின் எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களும் அடங்குகின்றன. ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் 5,198 மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில், மஹிந்திரா 3-சக்கர வாகனங்களின் விற்பனை ஆனது 26% அதிகரித்துள்ளது. இவை அனைத்தும், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே ஆகும். இவை இல்லாமல், 1,816 வாகனங்களை கடந்த மாதத்தில் மஹிந்திரா இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 3,122 வாகனங்களை மஹிந்திரா ஏற்றுமதி செய்திருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாட்டு ஏற்றுமதி பெரிய அளவில் இல்லையென்றாலும், மஹிந்திரா & மஹிந்திரா இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் எந்த அளவிற்கு ஓர் தவிர்க்க முடியாத ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவெடுத்து வருகிறது என்பதற்கு கடந்த நவம்பர் மாத விற்பனையே சாட்சியாகும். குறிப்பாக, கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து 4வது இடத்தில் மஹிந்திரா தற்சமயம் உள்ளது.


Click it and Unblock the Notifications









