மாருதி சுஸுகிக்கு இப்போது தான் டென்ஷன் குறைஞ்சிருக்கும்!! மஹிந்திரா அவசர அவசரமாக வெளியிட்ட அறிக்கை...
மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny)-க்கு போட்டியாக மஹிந்திரா தார் 5 கதவுகளுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த விஷயத்தில் ஓர் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன? 5-கதவு மஹிந்திரா தாரில் என்னென்ன சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம்? என்பதை இனி பார்க்கலாம்.
சேறு, சகதி மிகுந்த ஆஃப்-ரோடுகளுக்கும் அதேநேரம் சாதாரண சாலைகளுக்கும் எடுத்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். குறிப்பாக, மாருதி சுஸுகி ஜிப்ஸியை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஜிப்ஸிக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் தார் வாகனத்தை கொண்டுவந்தது.

ஜிப்ஸி தற்சமயம் விற்பனையில் இல்லை, ஆனால் 2ஆம் தலைமுறை மஹிந்திரா தார் கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து விற்பனையில் உள்ளது. ஜிப்ஸி இடத்தை நிரப்பும் பொருட்டு ஜப்பானில் விற்பனையில் இருந்த ஜிம்னி வாகனத்தை இந்தியாவிற்கு மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டுவந்தது. ஜிம்னிக்கும், தாருக்கும் இடையே வித்தியாசம் என்னவென்றால் கதவுகள் தான்.
தார் வாகனத்தை விட அளவில் சிறியதாக இருப்பினும் ஜிம்னி 5 கதவுகளை கொண்டுள்ளது. ஆனால் மஹிந்திரா தாரில் 3 கதவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதுதான் தாரில் உள்ள மிக முக்கியமான குறையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 3 கதவுகள் மட்டுமே இருப்பதால், தார் வாகனத்திற்குள் ஏறுவதும், இறங்குவதும், பொருட்களை வைத்து செல்வதும் சிரமமானதாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகார்களை நிச்சயமாக மஹிந்திரா நிறுவனம் அறிந்திருக்கும், ஆதலால் 5-கதவு தார் மிக விரைவில் ஜிம்னிக்கு போட்டியாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் சிலர், வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் 5-கதவு தார் அறிமுகப்படுத்தப்படும் என்றெல்லாம் கூறினார். இதனால் இதுகுறித்த செய்திகளை கடந்த சில வாரங்களாக அதிகளவில் பார்க்க முடிந்தது.
ஆனால் இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ள மஹிந்திரா நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, "மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் மஹிந்திரா தார் 5-கதவு வாகனம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பல்வேறு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாகனத்தின் அறிமுகம் இந்த 2023ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். சமீபத்தில் நடைபெற்ற ஊடகங்கள் உடனான கலந்துரையாடலில் தார் 5-கதவு வாகனத்தின் அறிமுகம் இந்தியாவில் 2024ஆம் ஆண்டிற்காக ஒதுக்கியுள்ளதை நாங்கள் உறுதிப்படுத்தினோம்" என்பதாகும். 5-கதவு தார் வாகனம் இந்தியாவில் பலமுறை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சில சமயங்களில், வாகனத்தை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லையென்றாலும் ஊடகங்களின் யூக செய்திகளினால் கிடைத்த எதிர்பார்ப்பை பயன்படுத்தி கொள்ளும் விதமாக சில நிறுவனங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்துவது உண்டு. ஆனால் மஹிந்திரா நிறுவனம் வதந்திகளை முற்றிலுமாக மறுத்திருப்பதுடன், இதுகுறித்த தனது அறிக்கையையும் வெளியிட்டிருப்பது எதிர்பார்க்காத ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications









