அமெரிக்க நிறுவனத்தின் சதியை அவங்க நாட்டிலேயே வைத்து முறியடித்த மஹிந்திரா.. நமக்கே வெற்றி கிடைச்சத போல இருக்கு!
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra and Mahindra)-வும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில், அமெரிக்க சந்தையிலும் மஹிந்திராவின் குறிப்பிட்ட சில கார் மாடல்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய சந்தையில் இல்லாத ஒரு சில கார் மாடல்களும் அங்கு விற்பனையில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், ரோக்ஸோர் (Roxor) எனும் சூப்பரான ஆஃப்-ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட கார் மாடலை மஹிந்திரா நிறுவனம் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தியர்கள் பலர் இந்த காரை மஹிந்திரா நம் நாட்டில் விற்பனைக்கு வழங்காதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றநிலையில், நிறுவனம் குறிப்பிட்ட சில சந்தைகளை மட்டும் தேர்வு செய்து அங்கு மட்டுமே அதனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலின் அமெரிக்க விற்பனையை முடக்கும் பொருட்டு ஓர் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவில் வழக்கைத் தொடர்ந்தது.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபியாட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமே மஹிந்திராவின் ரோக்ஸோர் விற்பனைக்கு எதிராக வழக்கைத் தொடர்ந்த நிறுவனம் ஆகும். தங்களுடைய ஜீப் பிராண்டின் வில்லிஸ் ஜீப் எஸ்யூவி காரை பிரதிபலிக்கும் வகையில் இந்த கார் இருப்பதாகக் கூறியே நிறுவனம் அதன் விற்பனைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கிலேயே மஹிந்திரா நிறுவனத்திற்கு சாதகமாக தற்போது தீர்ப்பு வெளியாகி இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் அமெரிக்காவில் ரோக்ஸோர் காரின் உற்பத்தி மற்றும் விற்பனையைச் செய்ய எந்த தடையும் இல்லை என்கிற அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. இந்த தீர்ப்பால் மஹிந்திரா நிறுவனம் மட்டுமல்ல அமெரிக்காவில் உள்ள ரோக்ஸோர் கார் பிரியர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.
மஹிந்திரா நிறுவனம் 2018 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக கனடா மற்றும் அமெரிக்கா சந்தையில் ரோக்ஸோரை விற்பனைக்குக் களமிறக்கியது. இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோதே ஃபியாட் க்ரைஸ்லர் நிறுவனம் இதன் விற்பனையை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்கிற நோக்கில் அமெரிக்காவில் வழக்கைத் தொடர்ந்து.

இதன் அடிப்படையில், இதுதொடர்பான தன்னுடைய விசாரணையை அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் தொடங்கியது. இந்த ஆணையம் அமெரிக்க நிறுவனத்திற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. அத்துடன் ரோக்ஸோரை மறு வடிவமைப்புச் செய்யவும் அது உத்தரவிட்டது. இதன் விளைவாக மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டில் ஆஃப்-ரோடர் ரோக்ஸோரை புதுப்பித்து வெளியீடு செய்தது.
ஆனால், இதுவும் தங்களின் வில்லிஸை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி தொடர்ந்து அதன் விற்பனையை தடுக்கும் பொருட்டு அமெரிக்க நிறுவனம் தங்களுடைய வாதத்தை முன் வைத்தது. ஆனால், இந்த முறை அமெரிக்க நிறுவனத்தின் வாதத்தை ஏற்க மறுத்த அந்நாட்டு நீதிமன்றம் தற்போதைய ரோக்ஸோர் எந்தவகையிலும் ஃபியாட்டின் வில்லிஸை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என்று கருத்து தெரிவித்தது.

ஆகையால், இந்த வாகனத்தின் விற்பனையை உங்களால் தடுக்க இயலாது என்றும் அது கூறியது. இதைத்தொடர்ந்து, உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அங்கீகாரத்தை ரோக்ஸோர் காருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த தீர்ப்பிற்கு முன்னர் வரை பல்வேறு இன்னல்களை இந்த வாகனம் சந்தித்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே தற்போது சாதகமான தீர்ப்பை மஹிந்திரா பெற்றிருக்கின்றது. இது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது. அமெரிக்கர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக ரோக்ஸோர் இருக்கின்றது. இது மிக சிறந்த ஆஃப்-ரோடர் ஆகும். கரடு-முரடான பாதைகளுக்கு ஏற்ற வாகனமாக இதனை மஹிந்திரா வடிவமைத்திருக்கின்றது.
இது ஓர் மிக சிறந்த ஆஃப்-ரோடர் என்பதற்கு சான்றாக இதன் உருவம் இருக்கின்றது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் ரோக்ஸோருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இந்த காரை சாலை பயன்பாட்டிற்கும் உபயோகித்துக் கொள்ள முடியும். இந்த காரில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 62 குதிரை பவரையும், 144 டார்க்கையும் வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் என எக்கசக்க இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவையே இந்த காரை எப்பேர்பட்ட சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டதாக மாற்றி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் இந்த காருக்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், இதை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான எந்த சைகையும் நிறுவனத்திடம் இருந்து தென்படவில்லை. ஒருவேளை இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் தார் காரை போலவே இதற்கும் மிக சூப்பரான வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









