Mahindra KUV100 NXT கார் இனிமேல் கிடைக்காதா! மத்த கார்களை விட இது ரொம்ப வித்தியாசமான கார் ஆச்சேங்க!
இந்தியாவில் பிஎஸ்6 (BS6) மாசு உமிழ்வு விதிமுறைகள் கடந்த 2020ம் ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டன. அப்போது இந்த விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்யப்படாமல் பல்வேறு கார்களின் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டது. குறிப்பாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ஒட்டுமொத்தமாக டீசல் (Diesel) கார்களின் விற்பனையையே நிறுத்தி விட்டது.
இதை தொடர்ந்து பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டம் (BS6 Phase 2) கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதற்கு ஏற்ப அப்டேட் செய்யப்படாமலும் பல்வேறு கார்களின் விற்பனை தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி (Mahindra KUV100 NXT) காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது இந்திய சந்தையில் கடந்த 2017ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும். ஆரம்பத்தில் இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்தபோது, டீசல் இன்ஜின் மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.
அதற்கு பிறகு ஒரே ஒரு பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டும், மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது.

இந்த காரின் டீசல் இன்ஜினுக்கு பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், பெட்ரோல் இன்ஜினுக்கு பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி உண்மையிலேயே மிகவும் தனித்துவமான ஒரு கார் ஆகும்.
குறிப்பாக இதன் கியர் லிவர், மற்ற கார்களை போல் அல்லாமல் வித்தியாசமாக இருக்கும். டேஷ்போர்டிலேயே கியர் லிவர் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 6 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டதும் கூட, மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி காரின் தனித்துவமான ஒரு அம்சம்தான் என்பதை மறுக்க முடியாது.
இவை எல்லாம் தவிர, பின் பகுதியில் டீஃபாகர், 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள், 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளும் மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி காரில் வழங்கப்பட்டு வந்தது. இந்த கார் விடைபெற்று விட்டதாக வெளியாகி வரும் தகவல்கள், அதன் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளன.
ஆனால் இங்கே ஒரு குழப்பமும் நிலவி வருகிறது. மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்த காரை தொடர்ந்து பார்க்க முடிகிறது. எனவே மஹிந்திரா நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக வெளியாகி வரும் தகவல்களுக்கு, அதன் விற்பனை மிகவும் மந்தமாக இருந்ததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. எனினும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை மாடல்களான மஹிந்திரா தார் (Mahindra Thar), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) ஆகிய கார்கள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன.


Click it and Unblock the Notifications








