மாருதி ஜிம்னியின் இடத்தை காலி செய்ய மஹிந்திரா எடுக்கும் புதிய ஆயுதம் - குறைந்த விலையில் புதிய தார் எஸ்யூவி!!
தார் வாகனத்தை பலரும் வாங்கும் வகையில் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டுவர மஹிந்திரா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதற்காக இந்த புதிய மலிவான வேரியண்ட்? என்பது குறித்தும், தாரின் இந்த புதிய வேரியண்ட்டின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
சிலருக்கு பழமையான ஜீப் தோற்றத்திலான ஆஃப்-ரோடு வாகனங்கள் என்றாலே தனி பிரியம் இருக்கும். குறிப்பாக, மலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்போரிடம் இத்தகைய வாகனங்களே பரவலாக இருக்கும். இந்த தேவையை உபயோகப்படுத்தி கொள்ளும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் ஜிப்ஸியை அறிமுகப்படுத்தியது, மஹிந்திரா நிறுவனம் தார் -ஐ அறிமுகப்படுத்தியது. இதில் ஜிப்ஸி தற்சமயம் விற்பனையில் இல்லை.

அதன் இடத்தை நிரப்பும் பொருட்டே ஜப்பானில் விற்பனையில் உள்ள ஜிம்னி வாகனத்தை இந்தியாவிற்கு மாருதி சுஸுகி கொண்டுவருகிறது. மறுப்பக்கம், மஹிந்திரா தார் 2ஆம் தலைமுறையில் உள்ளது. 2ஆம் தலைமுறை தார் புதிய தோற்றத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 4x4 ட்ரைவ் சிஸ்டத்துடன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் தாரின் 4x2 வெர்சனும் விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில்தான் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டை மஹிந்திரா தார் பெறவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த புதிய விலை குறைவான தார் வேரியண்ட் 4x4 ட்ரைவ் சிஸ்டத்தை கொண்டதாக இருக்கும் என தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிப்பதுதான். ஏனெனில் தாரின் தற்போதைய ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையான ரூ.9.99 லட்சத்தில் கிடைப்பது, 4x2 வேரியண்ட் ஆகும்.

தற்சமயம் ஏ.எக்ஸ் (ஆப்ஷ்னல்) மற்றும் எல்.எக்ஸ் என 2 விதமான வேரியண்ட்களில் தார் 4x4 விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஏ.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டிற்கு கீழ், குறைந்த விலையில் புதிய வேரியண்ட் இருக்கும். இதனால் இந்த புதிய வேரியண்ட்டின் பெயர் ஏ.எக்ஸ் அல்லது ஏசி என இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்ஷ்னல் வேரியண்ட்டிற்கு கீழ் நிறுத்தப்படுவதால், இதில் வழங்கப்படும் வசதிகளை புதிய வேரியண்ட் இழந்திருப்பதற்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், மஹிந்திரா தாரின் இந்த புதிய வேரியண்ட் குறைவான விலையில் கொண்டுவரப்படுவதால், உட்புறத்தில் இடவசதியையும் பெரியதாக எதிர்பார்க்க முடியாது. 4 பேர் மட்டுமே சவுகரியமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் 4 இருக்கைகள் வழங்கப்படும். ஏற்கனவே விற்பனையில் உள்ள தார் வேரியண்ட்களிலும் உட்பக்கத்தில் இடவசதி போதிய அளவில் இல்லை என்பது குறையாக பார்க்கப்படுவதினால்தான், 5 கதவுகளை கொண்ட நீளமான தாரின் வடிவமைப்பு பணிகளில் மஹிந்திரா ஈடுப்பட்டு வருகிறது.

2.0 லிட்டர், 4-சிலிண்டர் எம் ஸ்டாலயன் பெட்ரோல் என்ஜின் அல்லது 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் உடன் புதிய வேரியண்ட்டை மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 130 பிஎச்பி & 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. இந்த இரு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
தெளிவாக தெரிகிறது... இது மாருதி சுஸுகி ஜிம்னியின் வருகையை மனதில் வைத்து மஹிந்திரா நிறுவனம் கையில் எடுக்கும் முடிவென்று. குறைவான விலையில், 4x4 ட்ரைவ் சிஸ்டத்துடன் தாரை மஹிந்திரா அறிமுகப்படுத்தினால், இந்த வாகனத்தின் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும். அதிலிலும் குறிப்பாக, 4x4 ட்ரைவ் சிஸ்டம் விலை உயர்ந்த வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் சூழலில், மஹிந்திராவின் இந்த நடவடிக்கை பலரால் வரவேற்கப்படும்.


Click it and Unblock the Notifications








