Scorpio N Car-க்காக 9 மாதங்களாக தவம் இருக்கும் வாடிக்கையாளர்.. அவர் செஞ்ச சம்பவத்தைதான் இப்ப ஊரே பேசுது!
ஸ்கார்பியோ என் (Scorpio N) காருக்காக 9 மாதங்களாக தவம் இருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய நீண்ட நாள் காத்திருப்பைக் கொண்டாடும் விதமாக கேக்கை வெட்டி இருக்கின்றார். தன்னுடைய வேதனையை வெளி உலகிற்கு வெளிப்படுத்தவே இத்தகைய விநோத யுக்தியை அவர் கையாண்டு இருக்கின்றார்.
இந்தியாவில் அதிக காத்திருப்பு காலத்தைக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என்-ம் ஒன்று. இன்றைய நிலவரப்படி ஸ்கார்பியோ இரு வெவ்வேறு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒன்று பழைமை மணம் மாறாத, அதாவது, முந்தைய தலைமுறை ஸ்கார்பியோக்களை பிரதிபலிக்கக் கூடியதாக ஒன்றாகவும், மற்றொன்று இன்றைய கால இளைஞர்களைக் குறி வைக்கும் மாடலாகவும் விற்பனையில் இருக்கின்றன.

முதல் ஒன்று ஸ்கார்பியோ கிளாசிக் என்ற பெயரிலும், இரண்டாவது ஒன்று ஸ்கார்பியோ என் என்கிற பெயரிலும் சந்தையில் விற்பனையில் உள்ளன. இதில், புதிய தலைமுறை மாடலான ஸ்கார்பியோ என் மாடலுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனை மிகப் பெரிய உருவம் மற்றும் அதிக சிறப்பு வசதிகளுடன் மஹிந்திரா உருவாக்கி இருக்கின்றது.
இதன் காரணமாகவே இந்த காரை இந்திய வாகன உலகம் பிக்-டாடி (Big Daddy) என செல்லமாக அழைத்து வருகின்றது. இதற்கு வரவேற்பு அதிகம் என்பதால் காத்திருப்பு காலமும் சற்றும் அதிகமாக உள்ளது. இதை தெரிந்தே பலர் அக்காரை புக் செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே ஸ்கார்பியோ என் காரை புக் செய்துவிட்டு ஒன்பது மாதங்களாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஒருவர், தன்னுடைய மன வேதனையை விநோதமான செயலின் வாயிலாக இந்த உலகிற்கு வெளிக்காட்டி இருக்கின்றார். அவர் தன்னுடைய ஒன்பது மாத காத்திருப்பு காலத்தை குறிக்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றார்.
இதற்கு முன்னதாக யாரும் கையாளாத ஓர் விநோத யுக்தியே இது ஆகும். மஹிந்திரா நிறுவனத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இத்தகைய செயலை அவர் செய்திருக்கின்றார். கடந்த காலங்களில் நீண்ட நாள் காத்திருப்பை காரணம் காட்டி புக்கிங்கை கேன்சல் செய்வது அல்லது புகார் தெரிவிப்பது இதுமாதிரியான செயல்களிலேயே வாடிக்கையாளர்கள் பலர் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே புதுமையாக இளைஞர் ஒருவர் தன்னுடைய நீண்ட நாள் காத்திருப்பை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றார். அவரின் பெயர் அனுபவ் சௌஹான் என கூறப்படுகின்றது (இன்ஸ்டா பதிவின் வாயிலாக தெரிய வந்தது). இந்த இளைஞரின் செயலே தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகிக் கொண்டு உள்ளது.
தன்னுடைய நீண்ட கால காத்திருப்பைக் குறிக்கும் விதமாக அவர் வெட்டிய கேக்கில், ஸ்கார்பியோ என் காரின் படத்தையும், 9 மாதங்கள் மற்றும் இன்னும் நாட்களை தான் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் எழுதி இருக்கின்றார். மஹிந்திரா வாடிக்கையாளரின் இந்த பதிவே இப்போது இணையத்தில் டாப் டிரெண்டிங்கில் இருக்கின்றது.
புக்கிங் தொடங்கப்பட்ட முதல் 30 நிமிடங்களிலேயே 1 லட்சம் புக்கிங்கைப் பெற்ற கார் என்ற புகழுக்கு உரிய வாகனமாக ஸ்கார்பியோ என் இருக்கின்றது. இப்போதும், மாதம் ஒன்றிற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் இந்த காருக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால், ஸ்கார்பியோ என் காருக்கு காத்திருப்பு காலம் மாதங்களைக் கடந்து ஆண்டுகளாக் கூட நாட்டின் சில முக்கிய நகரங்களில் காணப்படுகின்றன. இதை குறைக்கும் முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இருந்த போதிலும் வேரியண்டுகளைக் பொருத்து 24 வாரங்கள் முதல் 65 வாரங்கள் வரை ஸ்கார்பியோ என் காருக்கான காத்திருப்பு காலம் நீடித்துக் காணப்படுகின்றது.
ஆகையால், எதிர்காலத்தில் இந்த காத்திருப்பு காலத்தையும் குறைக்கும் முயற்சியில் மஹிந்திரா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் இந்த காரை புக் செய்த வண்ணமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, எதிர்காலத்திலும் காத்திருப்பு காலம் சிறிதளவும் குறைய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை என சிலர் தெரிவிக்கின்றனர்.
புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்திய சந்தையில் ரூ. 13.05 லட்சம் தொடங்கி ரூ. 22.26 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த உச்சபட்ச விலைக் கொண்ட ஸ்கார்பியோவிற்கு உச்சபட்ச வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ என் உருவத்தில் பெரியது, சிறப்பு வசதிகளில் அசத்தலானது மற்றும் பாதுகாப்பு திறனிலும் அபாரமான திறன் கொண்டது. இதன் காரணத்தினாலேயே இந்தியர்கள் இந்த காரை வாங்க போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். பலர் காத்திருப்பு காலம் அதிகமாக இருப்பதைத் தெரிந்தே புக் செய்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக காத்திருப்பு ஏற்றது என எங்களைப் போலவே பலர் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








