மஹிந்திராவில் இருந்து இந்த கார் மட்டும் விற்பனைக்கு வந்துச்சுனா நிஸான் எல்லாம் காலி! டெஸ்டிங் எல்லாம் ஸ்டார்ட்
மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், ஸ்கார்பியோவில் பிக்-அப் டிரக்கை கொண்டுவர மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், தொழிற்சாலையில் தயாராகிவரும் ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின் போது கேமராவில் சிக்கியுள்ளது.
இந்திய சந்தையில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் கார்கள் என்று பார்த்தால், அதில் மஹிந்திரா ஸ்கார்பியோவும் ஒன்றாகும். கமர்ஷியல் வாகனங்கள் துறையில் கொடிக்கட்டி பறந்துவந்த மஹிந்திரா நிறுவனம் பயணிகள் கார்கள் துறையிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த சமயத்தில் இந்த நிறுவனத்திற்கு பக்க பலமாக இருந்தது ஸ்கார்பியோ ஆகும்.

இதனாலேயே அவ்வப்போது ஸ்கார்பியோ கார்களை அப்டேட் செய்துவிடும் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோவில் பிக்-அப் டிரக் வாகனத்தை உருவாக்கும் பணியில் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்கார்பியோ என் பிக் அப் டிரக் வாகனம் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் வாகனத்தின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் வெளிவந்திருப்பது இதுவே முதல்முறை ஆகும். ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் வாகனம் தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் தான் வெளியீடு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய சாலையில் முதல்முறையாக ஸ்கார்பியோவின் இந்த பிக்-அப் டிரக் வெர்சன் அடையாளம் காணப்பட்டு உள்ளது. ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கின் டிசைனுக்கான காப்புரிமையை ஏற்கனவே மஹிந்திரா இந்தியாவில் பதிவு செய்துவிட்டது. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களில், ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்களை நம்மால் கவனிக்க முடிகிறது.
அதாவது, ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் கான்செப்ட் உடன் ஒப்பிட்டாலும், காப்புரிமை படங்களுடன் ஒப்பிட்டாலும் இந்த சோதனை மாதிரியின் தோற்றம் சற்று வித்தியாசமாக உள்ளது. பிக்-அப் டிரக்குகள் என்றாலே பொதுவாக பாதி காரும், பாதி லாரியும் இணைந்த கலவையாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வாறே ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கும் உள்ளது.

நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களில், ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கின் பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த வாகனத்தின் பின்பக்கத்தில் ஃபேன்ஸியான எல்இடி டெயில்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பும் பகுதிக்கான மூடி வட்ட வடிவில் வாகனத்தின் பின்பக்கத்தில் இடதுபுறம் உள்ளது. ஆனால், ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் இப்படித்தான் இருக்கும் என முன்பு வெளியிடப்பட்டு இருந்த படத்தில் இந்த ஃபுயுல் டேங்க் மூடி சதுர வடிவில் இருந்தது.
கார்களுடன் ஒப்பிடுகையில், இவ்வாறான பிக்-அப் டிரக்குகளில் பின்பக்க சஸ்பென்ஷன் ஆனது மிகவும் முக்கியமானது ஆகும். இதனாலேயே ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கில் இலை சுருள் செட்-அப்பில் பின்பக்க சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், குறுகிய காலத்திலேயே இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை சிறப்பாக உள்ளது. ஆதலால், ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கை மஹிந்திரா கொண்டுவருவதற்கு இதுதான் சரியான நேரம். இருப்பினும், தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு இருப்பது ஸ்கார்பியோவின் பிக்-அப் டிரக் வெர்சனாக இல்லாமல், வெளிநாட்டிற்கு மஹிந்திரா அனுப்பும் வாகனமாக அல்லது அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான வாகனமாக கூட இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









