குச்சி மிட்டாய், குருவி ரொட்டிபோல விற்பனையாகும் ஸ்கார்பியோ! நம்ப முடியாம விழிபிதுங்கி நிற்கும் போட்டியாளர்கள்!
மஹிந்திரா (Mahindra and Mahindra) நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஸ்கார்பியோ (Scorpio)-வும் ஒன்று. இந்த காரை இரு வெவ்வேறு விதமான மாடல்களில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) மற்றும் ஸ்கார்பியோ என் (Scorpio-N) ஆகியவையே அவை ஆகும்.
இந்த இரு கார் மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்கார்பியோ கார்கள் 69 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த 11 மாதங்களில் கிடைத்த அபரீதமான விற்பனை வளர்ச்சி இதுவாகும்.

இந்த எண்களை வைத்து பார்க்கையில் மஹிந்திரா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் தயாரிப்புகளில் ஒன்றாக ஸ்கார்பியோ மாறி இருப்பது தெளிவாக தெரிகின்றது. 2022 ஏப்ரல் தொடங்கி 2023 பிப்ரவரி வரையில் கிடைத்த விற்பனை எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தகுந்தது. 69,324 யூனிட்டுகளில் 68,147 யூனிட்டுகள் உள்நாட்டில் விற்பனைச் செய்யப்பட்டவை ஆகும்.
மீதம் உள்ள யூனிட்டுகள் வெளிநாடுகளுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பது கவனிக்கத்தகுந்தது. அதாவது, 1,898 யூனிட் ஸ்கார்பியோ கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த காருக்கு வரும் காலங்களிலும் விற்பனை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப இப்போதும் ஸ்கார்பியோவிற்கு புக்கிங்குகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும், ஏற்கனவே செய்யப்பட்ட புக்கிங்குகளும் டெலிவரிக் கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே அடுத்த இன்னும் சில மாதங்களிலும் ஸ்கார்பியோவின் விற்பனை அதிகரித்தேக் காணப்பட இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ஸ்கார்பியோ என் மாடலுக்கான காத்திருப்பு காலம் 24 வாரங்கள் முதல் 65 வாரங்கள் வரை என கூறப்படுகின்றது.
இந்த அளவு அதிக காலம் காத்திருப்பு காலம் நிலவுகின்ற போதிலும் ஸ்கார்பியோவை இந்தியர்கள் தேடி சென்று புக் செய்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வரும் காலங்களில் இந்த காத்திருப்பு காலமும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஸ்கார்பியோ கிளாசிக்கிற்கான காத்திருப்பு காலம் 26 வாரங்களாக உள்ளன.

ஸ்கார்பியோ கிளாசிக் மாடலைக் காட்டிலும் ஸ்கார்பியோ என் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க அதன் கவர்ச்சிகரமான தோற்றமே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. ஸ்கார்பியோ கிளாசிக்கைக் காட்டிலும் சற்று பெரிய உருவம் கொண்டதாகவும், கூடுதல் சிறப்பு அம்சங்கள் கொண்டதாகவும் அது உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஸ்கார்பியோவின் அடுத்த தலைமுறை வெர்சனாக ஸ்கார்பியோ என் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஸ்கார்பியோ கிளாசிக் பழைய மனம் மாறாமல் அப்படியே இருக்கின்றது. அதேவேளையில், இதை மஹிந்திரா லேசாக அப்கிரேட் செய்திருக்கின்றது. நவீன யுக இளைஞர்களின் டேஸ்டிற்கு ஏற்ப அக்காரை மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்திருக்கின்றது.
இதன் காரணத்தினாலேயே இந்த காருக்கும் வரவேற்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. பொலிரோவிற்கு அடுத்தபடியாக மிக சிறப்பாக விற்பனையாகும் மஹிந்திரா எஸ்யூவி காராக ஸ்கார்பியோ இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த கார்களுக்கு மட்டுமில்லைங்க, எக்ஸ்யூவி700 மற்றும் தார் ஆகிய எஸ்யூவி கார் மாடல்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கான காத்திருப்பு காலம் மாதம் மற்றும் வருட கணக்கில் நிலவுவது குறிப்பிடத்தகுந்தது. நகரம் மற்றும் மாநிலம் வாரியாக இந்த காத்திருப்பு காலம் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








