அதுக்குள்ள இவ்ளோ மஹிந்திரா தார் கார்கள் உற்பத்தியா! போட்டிக்கு சீக்கிரமே மாருதி வரப்போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா தார் (Mahindra Thar). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மஹிந்திரா நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றாக தார் எஸ்யூவி காரை நம்மால் குறிப்பிட முடியும்.
இந்த சூழலில் விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடல் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய தலைமுறை மாடலில் மஹிந்திரா நிறுவனம் ஏராளமான அப்டேட்களை செய்திருந்தது.

இதன் காரணமாக புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில், உற்பத்தியில் புதிய மைல்கல் ஒன்றை புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கார் தற்போது கடந்துள்ளது.
புதிய தலைமுறை மஹிந்திரா தார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, சுமார் 2.5 வருடங்கள் மட்டுமே கடந்துள்ளது. அதற்குள்ளாக 1 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை புதிய தலைமுறை தார் எஸ்யூவி கார் கடந்திருப்பதாக மஹிந்திரா நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.

1 லட்சமாவது யூனிட்டாக உற்பத்தி செய்யப்பட்ட புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கார், வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. சுமார் 2.5 வருடங்களில் 1 லட்சம் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கார்கள் உற்பத்தி என்பது, 2 முக்கியமான விஷயங்களை நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகிறது.
ஒன்று, இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் வழங்கி கொண்டிருக்கும் வரவேற்பு. மற்றொன்று எஸ்யூவி கார்களுக்கான 'டிமாண்ட்' அதிகரித்து வருவது. இந்தியாவில் செடான், ஹேட்ச்பேக் என மற்ற ரக கார்களை காட்டிலும் எஸ்யூவி ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் தற்போது உச்சகட்ட வரவேற்பை வழங்கி கொண்டுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு கிடைத்து கொண்டுள்ள வரவேற்பிற்கு, அதன் சவாலான விலை (Price) நிர்ணயமும் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப விலை (Price) வெறும் 9.99 லட்ச ரூபாய் மட்டுமே.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.49 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கார் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. எனவேதான் விற்பனையில் வெற்றி கொடி நாட்டி கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு சரி நிகர் போட்டியாக தற்போது சொல்லிக்கொள்ளும்படியான மாடல்கள் இல்லை. ஆனால் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) கார் வெகு விரைவில் போட்டிக்கு வரவுள்ளது. அதன் வருகைக்கு பிறகு, மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஆதிக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








