இருப்பதிலேயே விலை குறைவான மஹிந்திரா தார் வாகனம்... இப்படித்தான் இருக்கும்!! வீடியோ வெளிவந்தது
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தார் வாகனத்தின் 4x2 மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியது. தார் 4x4 வாகனம் அனைத்து சக்கரங்களின் மூலமாக இயங்கக்கூடியது. ஆனால் புதிய 4x2 வேரியண்ட் பின் சக்கரங்களின் மூலமாக இயங்கும். ஆஃப்-ரோடு பயணங்களை அவ்வளவாக மேற்கொள்ள தேவை இல்லாதவர்களுக்கு இந்த புதிய தார் மாடல் ஏற்றதாக இருக்கும்.
தார் 4x2 வாகனத்தின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.9.99 லட்சம் உள்ளது. இந்த விலையில் பிரிக்க முடியாத ஹார்ட்-டாப் மேற்கூரை உடன் ஏ.எக்ஸ் வேரியண்ட் கிடைக்கும். ஏ.எக்ஸ் மற்றும் எல்.எக்ஸ் என இரு விதமான வெர்சன்களில் இந்த வாகனம் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விலை குறைவான ஏ.எக்ஸ் வேரியண்ட்டிலான தார் ரியர்-வீல்-டிரைவ் கார் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை கீழே காணலாம்.
யாஷ்9டபிள்யூ என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் எல்.எக்ஸ் வேரியண்ட்டை ஒப்பிடும்போது ஏ.எக்ஸ் வேரியண்ட்டில் எந்த மாதிரியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை வீ-லாகர் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், இந்த வீடியோவில் நாம் பார்ப்பது ரூ.9.99 லட்சத்தை எக்ஸ்-ஷோரூம் விலையாக கொண்ட ஹார்ட்-டாப் தார் ஏ.எக்ஸ் வேரியண்ட் ஆகும்.
விலை மலிவான வேரியண்ட்டாக இருப்பினும் வெளிப்பக்கத்தில் ஹலோஜன் ஹெட்லேம்ப்கள், பொனெட் க்ளிப்ஸ், சிக்னெச்சர் க்ரில் மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்திலான முன் பம்பர் என வழக்கமாக வழங்கப்படுபவைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அதேநேரம், ஃபாக் விளக்குகள், ஃபெண்டரில் எல்இடி டிஆர்எல்-கள் என சில அம்சங்களை இந்த தார் வேரியண்ட் இழந்துள்ளது. இருப்பினும் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன.

வாகனத்தின் பக்கவாட்டிற்கு வந்தோமேயானால், இந்த எஸ்யூவி வாகனத்தில் இரும்பு சக்கர ரிம்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் உதிரி சக்கரமும் இரும்பு சக்கரமே. 16-இன்ச்சில் அளவில் சிறியதாக இருக்கும் இவற்றில் ஆல்-டெர்ரன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சக்கரங்கள் சிறியதாக இருப்பினும், வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருப்பது அந்த குறையை மறைத்துவிடுகிறது. இந்த தார் வாகனத்தில் ஆண்டென்னா மற்றும் பின்பக்கத்தில் என்ஜின் பேட்ஜ் உள்ளிட்டவை இல்லை.
வாகனத்திற்கு வெளியே படிக்கட்டு ஆனது வழக்கம்போல் உலோகத்தால் செய்யப்பட்டதாக உள்ளது. பின்பக்கத்தை காட்ட பயன்படும் ORVM-கள் இந்த வேரியண்ட்டில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக இல்லை. பின்பக்கத்தில் டெயில்லேம்ப்களில் எந்த வித்தியாசமும் இல்லை. அதேபோல் மற்ற வேரியண்ட்களில் வழங்கப்படுவதை போன்று பின் பம்பர் ஒளி பிரதிபலிப்பானை கொண்டுள்ளது.

உட்பக்க கேபினில் பெரும்பாலானவை தார் டாப் வேரியண்ட்டில் இருப்பவையாகவே உள்ளன. நீக்கப்பட்டு இருப்பவை என்று பார்த்தால், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்கள், மல்டி-ஃபங்க்சன் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை சொல்லலாம். பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கு பயன்படுத்தப்படும் உலோக கேஜ் ஆனது கருப்பு நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது.
தார் 4x4 வெர்சனில் வழங்கப்படும் கியர் லிவர் இந்த 4x2 வெர்சனில் இல்லை. அந்த பகுதி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஆக பயன்படுத்தப்பட்டுள்ளது. விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும் தார் 4x2 ஏ.எக்ஸ் வேரியண்ட்டில் டிராக்ஷன் கண்ட்ரோல், ஐடியல் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், மேனுவல் ஏசி, ஹில் டெசண்ட் கண்ட்ரோலை பெற முடிகிறது. தார் ரியர்-வீல்-டிரைவ் வேரியண்ட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








