ஜிம்னி வருகையின் எதிரொலியா!.. முக்கிய கார் மாடலின் அறிமுகத்தை ஒத்தி வைத்த மஹிந்திரா.. பயந்துட்டியா குமாரு!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் ஜிம்னி எஸ்யூவி (Jimny SUV) காரை விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இந்த காரின் அறிமுகம் இந்த மாதம் அரங்கேற இருந்தது. ஆனால், திடீரென இதன் வருகையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த கார் வரும் ஜூன் 7 ஆம் தேதி அறிமுகமாக இருப்பது தெரிய வந்து உள்ளது. இந்த காரின் வருகை மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) காருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இக்காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் புக்கிங் எண்ணிக்கை உள்ளது. இப்போதே மாருதி சுஸுகி ஜிம்னிக்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் குவிந்துவிட்டன. இந்தியர்கள் அமோக வரவேற்பை ஜிம்னிக்கு வழங்க தொடங்கிவிட்டனர் என்பதற்கு சான்றாகவும் இந்த தகவல் அமைந்து இருக்கின்றது.
ஜனவரி மாதத்தில் இருந்து இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. இன்னும் இந்த காரின் விலைகள்கூட அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே இத்தனை ஆயிரம் புக்கிங்குகளை ஜிம்னி குவித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திராவும் அதன் ஐந்து கதவுகள் கொண்ட தார் காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவத்தை நிறுவனம் நடப்பாண்டிலேயே நிகழ்த்தும் எனவும் கூறப்பட்டது. ஆகையால், மாருதி சுஸுகி மற்றும் மஹிந்திரா ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே மிகப் பெரிய போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த மாதிரியான சூழலில் மஹிந்திரா நிறுவனம் பேக்-அடித்திருப்பதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதாவது நிறுவனம் அதன் ஐந்து கதவுகள் கொண்ட தார் காரின் இந்திய அறிமுகத்தை ஒத்தி வைத்துவிட்டதாக கூறப்படுகின்றது. அடுத்த ஆண்டிற்கே காரின் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டு இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு மாருதி சுஸுகி ஜிம்னியின் வருகை ஓர் காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ஆனால், இந்த ஒத்தி வைப்பிற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில், தொடர் சோதனை ஓட்டத்திற்கு ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னி கார் தற்போது உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஹிந்திரா தார் 5 கதவுகள் கொண்ட வெர்ஷனின் வருகை 2024 ஆம் ஆண்டில் அமைய இருப்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த காரில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய இரு விதமான தேர்வுகளில் தாரின் 5 டூர் வெர்ஷன் எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, பவர் விண்டோ, எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் ஓஆர்விஎம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, எம்ஐடி, பன்முக ஏர்பேக்குகள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் என எக்கச்சக்க சிறப்பு வசதிகள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி மஹிந்திரா தார் காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த காருக்கு மாதக் கணக்கில் காத்திருப்பு காலம் நிலவுகின்றது. ஆமாங்க, பலர் இந்த காரை புக் செய்துவிட்டு கைகளில் பெறுவதற்காக மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே ஐந்து கதவுகள் தாரையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மஹிந்திரா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications









